Published:Updated:

̀மருத்துவ காரணங்கள் vs மூடநம்பிக்கை சர்ச்சை' - உண்மையில் சிசேரியன்கள் எதற்காக?

தாயும் சேயும் ( Pixabay )

குழந்தைப் பிறப்பு என்பது நேரம், நட்சத்திரமெல்லாம் பார்த்து நிகழ வேண்டும் என்ற எண்ணத்தை குடும்ப உறுப்பினர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

̀மருத்துவ காரணங்கள் vs மூடநம்பிக்கை சர்ச்சை' - உண்மையில் சிசேரியன்கள் எதற்காக?

குழந்தைப் பிறப்பு என்பது நேரம், நட்சத்திரமெல்லாம் பார்த்து நிகழ வேண்டும் என்ற எண்ணத்தை குடும்ப உறுப்பினர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

Published:Updated:
தாயும் சேயும் ( Pixabay )

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு போன்றதுதான். ஒவ்வொரு பெண்ணும் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்புவாள். ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிலருக்கு சிசேரியன் செய்யப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனை உட்பட பெரும்பாலான மருத்துவமனைகளில் சிசேரியன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிசேரியன் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

பிரசவம்.
பிரசவம்.

அதில், ``சிலர் நாள், நட்சத்திரம் பார்த்து விரும்பிய தேதியில் சிசேரியன் செய்துகொள்கிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும். சுகப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க பயிற்சிகளும் வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். சிசேரியன் என்பது என்ன, எந்தச் சூழலில் சிசேரியன் தவிர்க்க முடியாததாகிறது என்பது குறித்து, சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நந்தினியிடம் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எந்த மருத்துவரும் சிசேரியனை ஊக்கப்படுத்துவது கிடையாது. கருவுற்றதிலிருந்து சுகப்பிரசவம் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் மனநிலைக்கு அந்தப் பெண்ணைத் தயார்ப்படுத்தும் பணிகளைத்தான் எல்லா மருத்துவர்களும் செய்கின்றனர். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால்தான் சிசேரியன் அவசியமான ஒன்றாகிவிடுகிறது. சிசேரியனைப் பொறுத்தவரை எலக்ட்டிவ் சர்ஜரி, எமர்ஜென்ஸி சர்ஜரி என இரண்டு வகையில் செய்யப்படுகிறது. அம்மாவின் உயரம் (140 செ.மீ) குறைவாக இருத்தல், இடுப்புப்பகுதி குறுகலாக இருத்தல், இரண்டுக்கும் மேற்பட்ட சிசேரியன்கள் செய்யப்பட்டிருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக சில தாய்மார்களுக்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிசேரியன்கள் (எலக்ட்டிவ் சர்ஜரி) செய்யப்படும். எமர்ஜென்சி சிசேரியன் பல மருத்துவ காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது.

பிரசவம் (Representational Image)
பிரசவம் (Representational Image)

மகப்பேறு காலத்தின் முதல் வாரத்திலிருந்து 13 வாரம் வரை முதல் டிரைமெஸ்டர் என்றும், 13 முதல் 28-வது வாரம் வரை இரண்டாவது டிரைமெஸ்டர் என்றும், 28 முதல் 40-வது வாரம் வரை மூன்றாவது டிரைமெஸ்டர் என்றும் சொல்வார்கள். முதல் வாரத்தில் இருந்தே பிரசவம் என்பது என்ன, அது எப்படி நடக்கப் போகிறது என்பதை, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் கர்ப்பம் தரித்துள்ள பெண்ணின் ப்ரெக்னன்சி பார்ட்னருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லி அவர்களின் பயத்தை முதலில் மருத்துவர்கள் போக்கிவிடுவார்கள். அதன் பின் 8 மாதங்களுக்குப் பிறகு, உடற்பயிற்சிகள், யோகா போன்ற பயிற்சிகள் வழங்குவது வாடிக்கையான ஒன்று. பொதுவாக பிரசவமுறை, எப்படி பிரசவம் நடைபெறப்போகிறது போன்ற காரணங்கள் தெரிந்தால் கர்ப்பிணிகளிடம் அதிக பயம் இருக்காது. அந்த மனதைரியமே சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். இப்போதெல்லாம் எபிடியூரல் அனால்ஜெசியா (Epidural analgesia) போன்றவற்றின் மூலம் வலி இல்லாத சுகப்பிரசவங்கள் கூட தற்போது சாத்தியமாகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கர்ப்பிணிக்கு 37 வாரங்களுக்குப் பிறகு, பனிக்குடம் உடைந்து, பிரசவவலி வரும்போது, குழந்தையின் தலை, கீழ் நோக்கி இருந்து, பெண்ணின் பிறப்புறுப்பு வழியாகக்  குழந்தை வெளியே வருவதையே சுகப்பிரசவம் என்கிறோம். குழந்தை வெளியேறுவதில் தடை ஏற்படும்போது சிசேரியன் அவசியமாகிறது. சிசேரியன் என்பது அறுவைசிகிச்சை மூலம் வயிற்று வழியாகக் குழந்தையை வெளியில் எடுப்பதாகும்.

சுக பிரசவம் ஆக இந்த உடற்பயிற்சியை செய்யலாம்
சுக பிரசவம் ஆக இந்த உடற்பயிற்சியை செய்யலாம்

கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை, பிரசவ வலி வந்ததும் தானாகத் தலைகீழாகத் திரும்பி, பிறப்புறப்பு வழியாக வெளியே வர வேண்டும். ஆனால், குழந்தையின் தலை திரும்பாமல் போனால் குழந்தையின் கால் அல்லது புட்டம் முதலில் வெளியே வரும். தலை கடைசியாக வரும்போது சில குழந்தைகளுக்கு மூளைக் குறைபாடு வர வாய்ப்புண்டு. இதனால் அந்தச் சூழலில் சிசேரியன் பரிந்துரைக்கப்படும். இதிலும் எல்லா பெண்களுக்கும் சிசேரியன் தேவையிருக்காது, குழந்தையின் தலை வெளியே வருவதில் சிக்கல் இருக்கும்போது மட்டுமே, சிசேரியன் அவசியப்படும்.

தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பை ஏற்படுத்துவதை நஞ்சுக்கொடி என்பார்கள். இது கரு உருவானதும், கர்ப்பப்பையின் மேல் சுவர் அல்லது கீழ் சுவரில் உருவாகும். இந்த நஞ்சுக்கொடி மூலம்தான் குழந்தையின் உடலுக்கு ஊட்டச்சத்து செல்லும், மேலும் கழிவுகள் வெளியேறும். இந்த நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் மேல் சுவரில் இருந்தால் பிரச்னை இல்லை. கீழ் சுவரில் இருந்தால், பிரசவத்தின்போது இந்த நஞ்சுக்கொடி குழந்தை வரும் பாதையை அடைத்துக் கொள்ளும். இந்தச் சூழலில் பிரசவ வலி ஏற்படும் பட்சத்தில் அம்மாவுக்கு உதிரப்போக்கு அதிகமாகும். இந்தச் சூழலில் சிசேரியன் தவிர்க்க முடியாததாகும்.

நஞ்சுக்கொடி அதிகமாக கீழ் இறங்கியிருந்தால் சில பெண்களுக்கு குறைப்பிரசவம் ஆகும் சூழல்கூட உருவாகும். இதை ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்ளலாம். நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் கீழ் இருக்கிறது எனில் கவனமாக இருப்பது அவசியம்.

குழந்தை கர்ப்பப்பையில் நீரில் மிதக்கும்போது, சில நேரங்களில், தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக்கொள்ளும். கிராமங்களில் இதை மாலை சுற்றியிருக்கிறது என்பார்கள். இந்த தொப்புள் கொடி குழந்தையை ஒரு முறை சுற்றியிருந்தால் பிரச்னை இல்லை. குழந்தையின் தலை கீழ் நோக்கித் திரும்பும் போது தொப்புள் கொடியும் இயல்பு நிலைக்கு வந்துவிடும். ஆனால் இரண்டு, மூன்று முறை சுற்றியிருந்தால், பிரசவத்தின்போது  குழந்தைக்கு சுவாசப்பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. அவ்வாறு சுவாசப் பிரச்னை ஏற்பட்டால் குழந்தையைக் காப்பாற்ற சிசேரியன் செய்யப்படுகிறது. 

பிரசவம் (Representational Image)
பிரசவம் (Representational Image)

மேலும், பிரசவத்தின்போது, அம்மாவின் நஞ்சுக்கொடி பிரிந்து ரத்தப்போக்கு ஏற்படும்போதோ, அம்மாவுக்கு ரத்த அழுத்தம் அதிகம் இருந்தாலோ, வலிப்பு பிரச்னையிருந்தாலோ அவர்களுக்கும் சிசேரியன் வலியுறுத்தப்படுகிறது. இவையெல்லாம் பொதுவான காரணங்கள். இவை தவிர்த்து அம்மாவின் உடல் நிலையும் கருத்தில் கொள்ளப்படும். அம்மாவுக்கு மூச்சுத்திணறல், அல்லது கர்ப்பப்பை சர்ஜரி (பைப்ராய்டு நீக்கம்) செய்திருக்கிறார்கள் எனும்போது, தேவைப்படும்பட்சத்தில் அவர்களுக்கு சிசேரியன் செய்யப்படும். மேலும் குழந்தையின் இதயத்துடிப்பு குறைதல் போன்ற மெடிக்கல் எமர்ஜென்சி சூழலிலும் சிசேரியன் அவசியம்.

இது போன்ற மருத்துவ அவசரம் தவிர்த்து மற்ற சூழல்களில் எந்த மருத்துவரும் சிசேரியனை வலியுறுத்துவது கிடையாது. கூடுமான வரை சுகப்பிரசவம் செய்வதற்குதான் முயற்சி செய்கிறோம்.  மருத்துவ காரணங்களுக்காக முன்பே தீர்மானிக்கப்பட்ட  சிசேரியன்கள் செய்யப்படும்போது, குடும்ப உறுப்பினர்கள் நாள், நட்சத்திரம் பார்த்து, நல்ல நேரத்தில் குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்களை வலியுறுத்துகின்றனர். வேறு எந்த மருத்துவ சிக்கல்களும் இல்லாத சூழலில், நூற்றில் ஒருவருக்கு, நாள், நட்சத்திரம் பார்த்து சிசேரியன் செய்யப்படுகிறது. ஆனால், அதுவுமே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். குழந்தைப் பிறப்பு என்பது நேரம், நட்சத்திரமெல்லாம் பார்த்து நிகழ வேண்டும் என்ற எண்ணத்தை குடும்ப உறுப்பினர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

மருத்துவர் நந்தினி
மருத்துவர் நந்தினி

சுகப்பிரசவம் ஆக வேண்டுமெனில் கர்ப்பகாலத்தில் பெண்கள் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சிகள் செய்யலாம். மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மன தைரியத்துடன் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் இருந்தால் நிச்சயம் சுகப்பிரசவம் சாத்தியமே" என்று விளக்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism