Published:Updated:

Covid Questions: கபசுரக் குடிநீரை சரியாகத்தான் குடிக்கிறீங்களா? - மருத்துவர் சொல்வதைக் கேளுங்க!

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கபசுர குடிநீர் தயாரிக்கும் முறையை விளக்கவும்

- ஜமீல்

தினசரி கபசுர குடிநீரை எத்தனை மணி நேர இடைவெளியில் குடிக்க வேண்டும்?

- வெங்கட்

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்.

5 கிராம் கபசுரக் குடிநீர் பொடியை 240 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து 60 மில்லியாக வற்ற வைக்கவும். குறைந்த தணலில் கொதிக்கவைக்க வேண்டியது முக்கியம். வாய்ப்பிருந்தால் மண்பானையில் கொதிக்கவைப்பது சிறந்தது. இயலாதவர்கள் வேறு பாத்திரங்களிலும் தயாரிக்கலாம். கபசுரக் குடிநீரின் தரம் பார்த்து வாங்க வேண்டியது மிக முக்கியம். போலி மருத்துவர்களும் போலி மருந்தகங்களும் பெருகிவிட்ட நிலையில் இதை கவனிக்க வேண்டியது மிக அவசியமாகிறது. அரசு தர நிர்ணயம் செய்த தயாரிப்பாகப் பார்த்து வாங்கினால் அதன் தரம் நன்றாக இருக்கும். அல்லது அரசு மருத்துவமனைகளிலோ, துணை சுகாதார நிலையங்களிலோ, ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ வாங்கிப் பயன்படுத்தினால் அதில் அனைத்து மூலிகைகளும் கலந்திருப்பதால் முழுப் பலனையும் பெற முடியும்.

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

போலியாகத் தயாரிக்கப்படுகிற கபசுரக் குடிநீர் பொடியில் 15 மூலிகைகள் இடம்பெற வேண்டியதற்கு பதிலாக ஏழோ, எட்டோ மட்டும் சேர்த்துத் தயாரிப்பார்கள். விலை அதிகமான மூலிகைகளையும் கிடைத்தற்கரிய மூலிகைகளையும் சேர்க்காமல் விட்டுவிடுவார்கள். கபசுரக் குடிநீரில் சேர்க்கப்படும் 15 மூலிகைகளில் சில குளிர்ச்சி வீரியத்துடனும் சில பித்த வீரியத்துடனும் இருக்கும். இரண்டும் சேர்ந்து கூட்டு மருந்து தத்துவத்தைக் கொடுப்பதுதான் சித்த மருத்துவத்தின் சிறப்பே. அதைத் தவறவிடும்போது கபசுரக் குடிநீரின் பலன்கள் போய்விடும். உதாரணத்துக்கு சந்தனம் என்ற பொருள் இதில் சேராமல் போனால் வயிற்றெரிச்சல் ஏற்படலாம். எனவே கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏதேனும் அறிகுறிகள் இருப்பவர்கள் கபசுரக் குடிநீரை வாரத்தில் 5 நாள்கள், இரண்டு வேளைகள் எடுத்துக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லை, தடுப்பு நடவடிக்கையாக எடுத்துக்கொள்கிறேன் என்பவர்கள், ஒருநாள்விட்டு ஒருநாள் எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா சீஸன் ஆரம்பித்த நாள் முதல் இப்போதுவரை கபசுரக் குடிநீரை தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பவர்களையும் பார்க்கலாம். அது மிகவும் தவறு. கேஸ்ட்ரைட்டிஸ் எனப்படும் இரைப்பை அழற்சிக்கு அது காரணமாகிவிடும். எனவே கபசுரக் குடிநீரை மருந்தாக நினைத்தே எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றெரிச்சல் பிரச்னை உள்ளவர்கள், சாப்பிட்ட பிறகு இதை எடுத்துக்கொள்ளலாம். லேசான தொண்டைக் கரகரப்போ, மூக்கடைப்போ ஆரம்பிக்கும்போது உடனடியாக கபசுரக் குடிநீரை எடுத்துக்கொண்டால் நிச்சயம் பலன் தரும். கபசுரக் குடிநீரைத் தயாரித்த மூன்று மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். நிறைய பேர் மொத்தமாகத் தயாரித்து ஃபிளாஸ்க்கில் வைத்து மாலை வரையோ, அடுத்தநாள் வரையோ வைத்திருந்து குடிக்கிறார்கள். அது கூடாது.

pregnant Women -representational image
pregnant Women -representational image

கர்ப்பிணிகள் கபசுர குடிநீர் குடிக்கலாமா?

- சரோஜா

கபசுரக் குடிநீரை எடுத்துக்கொள்வதில் கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளைப் பொறுத்து எடுத்துக்கொள்வதுதான் பாதுகாப்பானது. நீங்களாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாரம் இருமுறை ஆவி பிடிக்கலாமா?

- சரோஜா

ஆவி பிடிப்பது பற்றிய விவாதம் இன்று பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. முறையான ஆவி பிடித்தல் பற்றி சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. மண் பானை அல்லது பாத்திரத்தில் மெல்லிய ஆவியை முக்காடிட்டு (பெட்ஷீட்டோ, துணியோ கொண்டு மூடியபடி) பிடிப்பதுதான் சரியானது. அது எந்தவிதப் பிரச்னையையும் தராது. வாரத்தில் 2 நாள்கள் ஆவி பிடிக்கலாம். இதைத் தவிர்த்து வீரியமாக வெளியேறும் ஆவியைப் பிடிப்பதால் தான் பாதிப்புகள் வரும். ஆவி பிடிக்கிற நீரில் கற்பூரவள்ளி, நொச்சி, யூகலிப்டஸ், திருநீற்றுப் பச்சிலை ஆகியவற்றைப் போட்டு அதிலிருந்து வரும் மெல்லிய ஆவியைத் தான் பிடிக்க வேண்டும். அதற்காக தீவிர அறிகுறிகள் உள்ள ஒரு நபர், நான் வீட்டிலேயே ஆவி பிடித்தே கொரோனாவிலிருந்து குணமாகிவிடுவேன் என்று சொல்வது தவறான செயல். மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்து இதையும் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாமே தவிர இது மட்டுமே நோயைக் குணப்படுத்திவிடும் என இருக்கக்கூடாது.

Steam Inhalation
Steam Inhalation
Photo: IStock
Covid Questions: `ஆவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?' - விளக்கும் மருத்துவர்

குறைந்த அறிகுறிகள் உள்ளவர்கள், வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கும் கொரோனா நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதெல்லாம் ஆவி பிடிக்கலாம் என கேட்டுப் பின்பற்றுவதுதான் சரியானது. சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆவி பிடித்தல் தீர்வளிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக கபம் சார்ந்த நோய்களுக்கு நிச்சயம் இதில் பலன் உண்டு. இங்கே இரண்டு விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஆவி பிடித்தாலே கொரோனா குணமாகிவிடும் என்பதும் தவறு. கொரோனா அறிகுறிகளுக்காக ஆவி பிடிப்பது பலன் தராது, மொத்தத்தில் ஆவி பிடிப்பது என்பதே மூடத்தனம் என்று சொல்லப்படுவதும் தவறு. மருத்துவரின் ஆலோசனையோடு செய்யும்போது கொரோனாவிலும் சில குறிகுணங்களுக்கு ஆவி பிடித்தல் பலன் தரும்.

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு