Published:Updated:

ஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா? - விளக்கும் மருத்துவர்

Steam Inhalation
Steam Inhalation ( Photo: IStock )

`ஆவி பிடித்தல்' யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளக் கூடிய எளிமையான வைத்திய முறைதான். என்றாலும், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன.

லதோஷமோ, காய்ச்சலோ உடனடி நிவாரணத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் தேடிச் செல்லும் கை வைத்திய முறை `ஆவி பிடித்தல்'. அதுவும் இந்த கொரோனா காலத்தில் மாஸ்க், சானிடைசர்போல ஆவி பிடித்தலையும் ஒரு தற்காப்பு முறையாகவே பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.

Sneeze
Sneeze
Image by Joseph Mucira from Pixabay

`ஆவி பிடித்தல்' யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளக் கூடிய எளிமையான வைத்திய முறைதான். என்றாலும், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு முறையற்ற, அலட்சியமான போக்கில் ஆவி பிடிக்கும்போது காயங்கள், கொப்புளங்கள், அலர்ஜி போன்ற சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவி பிடிக்கும்போது என்னென்ன விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும்... விளக்குகிறார் அவசர சிகிச்சை மருத்துவர் முகமது ஹக்கீம்.

அவசர சிகிச்சை மருத்துவர் முகமது ஹக்கீம்
அவசர சிகிச்சை மருத்துவர் முகமது ஹக்கீம்

``ஆவி பிடித்தலால் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு வருவோர்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளாமல் இருக்க `ஆவி பிடித்தலும்' ஒரு தற்காப்பு முறை என்று மக்கள் தங்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். உண்மையில், ஆவி பிடிப்பதன் மூலம் எந்தவொரு வைரஸ் அல்லது பாக்டீரியாவையும் அழிக்க முடியாது. நமக்கு ஜலதோஷம் அல்லது சளியின் காரணமாக ஏற்பட்டுள்ள மூக்கடைப்பிலிருந்து உடனடியாக விடுபட மட்டுமே `ஆவி பிடித்தல்' உதவுகிறது. தவிர நோய்க்கிருமிகளால் நமக்கு ஏற்படும் காய்ச்சலைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ இதனால் முடியாது. சொல்லப்போனால் `ஆவி பிடித்தல்' என்பது ஒரு மருத்துவ முறையே அல்ல. மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும் ஒரு எளிய வழி. அவ்வளவே.

சூடான வெந்நீரிலிருந்து வரும் ஆவியை சுவாசிக்கும்போது நம் மூச்சுக்குழல் சற்று வெதுவெதுப்பான வெப்பத்தை உணரும். இந்த வெப்பம் மூச்சுக்குழலில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தைக் குறைத்துச் சிக்கலற்ற சுவாசத்துக்கு உதவும். சிலர் ஆவி பிடிக்கிறேன் என்ற பெயரில் தைலம் அல்லது மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மாத்திரையை வெந்நீரில் கலந்து அதில் வரும் ஆவியை சுவாசிக்கின்றனர். இன்னும் சிலர் வெந்நீரில் பச்சிலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கின்றனர். இவை எல்லாம் முற்றிலும் தவறானவை. இதனால் மூச்சுக்குழல் மற்றும் கண்களில் எரிச்சல், அலர்ஜி ஏற்படலாம்.

Hot Water
Hot Water
Photo by Joe on Unsplash

சிலரோ அதிக சூடான நீரில் ஆவி பிடித்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று, தண்ணீரை 100 டிகிரி செல்சியஸில் கொதிக்க வைத்து அப்படியே ஆவி பிடிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது வெந்நீர் உடல் மீதோ, கண்களிலோ பட்டு கொப்புளங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா காலத்தில் சிலர் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளைக்கூட போர்வையைப் போர்த்தி ஆவி பிடிக்க வைக்கின்றனர். வெந்நீரைச் சரியாகக் கையாளத் தெரியாத குழந்தைகளைத் தனியே ஆவி பிடிக்க வைக்கும்போது அவர்கள் சூடான நீரை மேலே கொட்டிக்கொள்வதற்கான ஆபத்து அதிகம். அதனால் குழந்தைகளை ஆவிபிடிக்க வைக்கும்போது பெற்றோர்கள் கூடவே இருக்க வேண்டும்.

முகப்பொலிவு முதல் கர்ப்பப்பை ஆரோக்கியம் வரை... நலம் தரும் நல்லெண்ணெய்... யாருக்கு, எவ்வளவு?

ஆவி பிடிக்க ஓரளவுக்குக் கொதிக்க வைத்த வெந்நீர் மட்டுமே போதுமானது. அதில் தைலம், மாத்திரைகள் அல்லது பச்சிலைகளைச் சேர்க்கத் தேவையில்லை. அதுபோல் தினமும் ஆவிபிடிக்கக் கூடாது. உங்களுக்கு ஜலதோஷம் அல்லது மூக்கடைப்பு ஏற்பட்ட நேரத்தில் மட்டும் செய்தால் போதுமானது.

Steam Inhalation
Steam Inhalation
Photo: IStock

ஒருவேளை நீங்கள் ஆவி பிடிக்கும்போது வெந்நீர் உடல் மீது கொட்டி கொப்புளங்களையோ காயங்களையோ ஏற்படுத்தினால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். தவிர வெந்நீர் கொட்டியதால் ஏற்படுத்திய காயத்தில் இங்க், தோசை மாவு என்று எதையாவது தேய்த்து நீங்களே வைத்தியம் செய்துகொள்ளக் கூடாது."

அடுத்த கட்டுரைக்கு