Published:Updated:

Doctor Vikatan: கொரோனா பாதிப்புக்குப் பின் குறைந்த கேட்கும் திறன்; குணப்படுத்த முடியுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

``கொரோனா பாதிப்புக்குப் பின் காதுகளின் கேட்கும் திறன் குறைந்துவிட்டதுபோல உணர்கிறேன். தொற்றுக்கும் கேட்கும் திறனுக்கும் தொடர்புண்டா?"

- மகேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பி.நட்ராஜ்
மருத்துவர் பி.நட்ராஜ்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ்.

``கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலின் பல உறுப்புகளும் பாதிக்கப்பட, செயலிழக்க வாய்ப்புள்ளது. கொரோனா தாக்கத்தின் விளைவாக ரத்த நாளங்களில் ரத்தம் உறையலாம். இந்த ரத்தம் உறைதல் பாதிப்பானது எந்தப் பகுதியில் நிகழ்கிறதோ, அந்த உறுப்பு செயலிழக்கும் அபாயம் உள்ளது.

எந்த ஒரு வைரஸ் தொற்றிலும் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். அதே போலதான் கொரோனா வைரஸ் தொற்றிலும் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. ஆனாலும், இது மிகவும் அரிதான பிரச்னை. ஆயிரத்தில் ஒருவருக்கு என்ற எண்ணிக்கையில்தான் பாதிக்கும். அம்மை உள்ளிட்ட மற்ற வைரஸ் தொற்றுகளைப் பொறுத்தவரை இந்தப் பாதிப்பு குழந்தைகளிடம் கொஞ்சம் அதிகமிருப்பதைப் பார்க்கிறோம். வைரஸ் தொற்றானது உள் செவியைத் தாக்குவதால் இப்படி நிகழ்கிறதா அல்லது ரத்தம் உறைவதால் ஏற்படுகிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கோவிட் வைரஸ் தொற்றில் ரத்தம் உறைதல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கோவிட் தொற்று நமக்கெல்லாம் சற்று புதியது என்பதால் இது தொடர்பான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கோவிட் சிகிச்சைக்கு கொடுக்கப்படும் அளவுக்கதிமான மருந்துகளும் காரணமாக இருக்கக்கூடும்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

கேட்கும் திறன் இழப்பு என்பது பெரும்பாலும் நிரந்தர பாதிப்பாகவே இருக்கிறது. குறிப்பாக, செவி நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் அது நிரந்தர பாதிப்பாகிவிடும். குணப்படுத்த முடியாது. காக்ளியர் இம்ப்ளான்ட் சிகிச்சை அல்லது ஹியரிங் எய்டு பயன்படுத்துவதுதான் தீர்வாக இருக்கும். அபூர்வமான பிரச்னையான இதில் இரண்டு காதுகளும் பாதிக்கப்படுவதும் அபூர்வமான நிகழ்வுதான் என்பதால் அரிதாகப் பாதிக்கப்படுவோரும் ஒரு பக்க கேட்கும் திறனை வைத்துச் சமாளிக்க முடியும். மற்றபடி ஏற்கெனவே கேட்கும் திறனில் பாதிப்புள்ளோருக்கும் இந்தப் பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கேட்கும் திறனில் பாதிப்பை உணரத் தொடங்கிய உடனே, தாமதிக்காமல் மருத்துவரை அணுகினால் ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகள் கொடுத்துப் பார்க்கலாம். குணமானாலும் ஆச்சர்யமில்லை."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு