Published:Updated:

குழந்தைகள் கண்டிப்பாக மொபைல் பார்க்கக் கூடாத நேரம்... எச்சரிக்கும் ஆயுர்வேத மருத்துவர்! #Video

குழந்தைகளைப் பாதிக்கும் மொபைல்
குழந்தைகளைப் பாதிக்கும் மொபைல் ( மாதிரிப்படம் )

சமூகத் தொடர்பு குறைந்துபோனதும் நண்பர்கள் வட்டம் இல்லாததும்தான் இதற்குக் காரணங்கள். பதற்றம், மன அழுத்தம், தனிமை போன்றவையும் அதிகமாக மொபைல் பார்ப்பதற்கான காரணங்கள்.

ஆறாவது விரலாக மாறி, கையோடு ஒட்டிக்கொண்டு மக்களை ஆக்கிரமித்துவிட்டன மொபைல் போன்கள். மொபைல் போனில் நல்ல பல விஷயங்கள் இருந்தாலும், அதனால் ஏற்படும் தீங்குகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை மொபைல் பயன்படுத்தினாலும் குழந்தைப் பருவத்தில் மொபைலால் அதிக பாதிப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார் குழந்தைகள்நல ஆயுர்வேத மருத்துவர் செந்தி அரசி. இதுகுறித்து அவர் கூறுகையில், ``டிவி, மொபைல், லேப்டாப் பார்ப்பது கடந்த ஐந்தாறு ஆண்டுகளைவிட இப்போது அதிகரித்துள்ளது.

சமூக தொடர்பு குறைந்துபோனதும், நண்பர்கள் வட்டம் இல்லாததும்தான் இதற்குக் காரணங்கள். பதற்றம், மன அழுத்தம், தனிமை போன்றவையும் அதிகமாக மொபைல் பார்ப்பதற்கான காரணங்கள். பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான தொடர்பு குறைந்துபோனது குழந்தைகள் மொபைல் பார்ப்பதற்கு மிக முக்கியக் காரணம். மொபைல் போன் பார்க்கும் குழந்தைகள் தவறான வழிகளுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் பெற்றோர் குழந்தைகளிடம் சில விஷயங்களைப் பார்க்கக் கூடாது என்பதைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

குழந்தைகள்நல ஆயுர்வேத மருத்துவர்  செந்தி அரசி
குழந்தைகள்நல ஆயுர்வேத மருத்துவர் செந்தி அரசி

டிவி, மொபைல் பார்த்தபடியே சாப்பிடுவது குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் அமெரிக்க அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அமைப்பு வழிகாட்டி நெறிமுறையை வழங்கியுள்ளது.

அந்த நெறிமுறைப்படி 2 வயதுவரை உள்ள குழந்தைகளை மொபைல், டிவி, லேப்டாப் போன்றவை பார்க்க அனுமதிக்கவே கூடாது. 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளை ஒரு மணி நேரம் மொபைல், டிவி, லேப்டாப் போன்றவை பார்க்க அனுமதிக்கலாம். 6 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை 2 மணி நேரம்வரை டிவி, மொபைல், லேப்டாப் பார்க்க அனுமதிக்கலாம். அதற்கு மேல் பார்க்க விட வேண்டாம்.

சின்ன வயதில் குழந்தைகளின் எலும்பு மென்மையாக இருப்பதால் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்பட்டு, உடலில் கட்டிகள் ஏற்படலாம். எதிர்காலத்தில் அது கேன்சர் கட்டியாகக்கூட மாறவாய்ப்பு உள்ளது. டிவி, மொபைலைக் கையில் கொடுத்து குழந்தைகளைச் சாப்பிட வைப்பது இன்று வழக்கமாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு உணவு அருந்தக்கூடாது. ஆசார்யர் சரஹர் தனது சரஹர் சம்ஹிதை என்ற ஆயுர்வேத நூலில், சாப்பிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை விவரித்துள்ளார். சாப்பிடும்போது பேசக்கூடாது, சிரிக்கக் கூடாது, ரொம்ப மெதுவாகவும் அதி வேகமாகவும் சாப்பிடக் கூடாது, சாப்பிடும்போது உணவின் மீது கவனம் இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகளைச் சொல்லியிருக்கிறார். மொபைல் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் இந்த அனைத்து விதிமுறைகளும் மீறப்படுகின்றன.

மொபைல் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் அதிக உணவு எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படும். அதனால் உடல் பருமன் ஏற்படும். சின்ன வயதிலேயே உடல் பருமன் ஏற்பட்டால் பின்னர் குறைப்பது கடினம். மொபைல் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் மூளை தவறான சிக்னல்களை அனுப்புவதால் சுவை உணர்வும், சாப்பிட்டோம் என்ற திருப்தியும் ஏற்படாமல் போகும். அதனால் அதிகம் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உடல் பருமனால் எதிர்காலத்தில் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு