Published:Updated:

`குளிர்காலத்திலும் இருவேளை குளியல் அவசியம்... ஏன் தெரியுமா?' - விளக்கும் இயற்கை மருத்துவர்!

குளிர்காலத்தில் வியர்ப்பதில்லையே... வியர்த்தால்தானே உடல் அழுக்காகும்? அழுக்கைப்போக்கத்தானே தினமும் ஒரு முறையோ, இரண்டு முறையோ குளிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அது தவறு.

எந்த சீஸன் என்றாலும் ஒரு குளியல் போட்டால் போதும் உடம்புக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ஆனால், குளிர்காலத்தில் மட்டும் நம்மில் சிலர் `வியர்க்கவில்லையே... ஃபிரெஷ்ஷாகத்தானே இருக்கிறோம்' என்று நினைத்துக்கொண்டு இரண்டு வேளை குளியலை ஒரு வேளையாக்குவார்கள். இன்னும் சிலர் குளிருக்கு பயந்துகொண்டு ஒருவேளை குளியலையும் `நாளைக்கு குளிச்சுக்கலாம்' என்று தள்ளி வைத்துவிடுவார்கள். குளிர்காலத்திலும் குளியல் கட்டாயம் என்கிற இயற்கை மருத்துவர் யோ. தீபா அதன் சிறப்புகள் பற்றிச் சொல்கிறார்.

இயற்கை மருத்துவர் யோ. தீபா
இயற்கை மருத்துவர் யோ. தீபா

கழிவுகள் வெளியேறும்!

குளிர்காலத்தில் வியர்ப்பதில்லையே... வியர்த்தால்தானே உடல் அழுக்காகும்? அழுக்கைப்போக்கத்தானே தினமும் ஒரு முறையோ, இரண்டு முறையோ குளிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், வியர்க்கவில்லையென்றாலும், நம் உடலானது சருமத்தின் வழியாக இறந்த செல்களைத் தினமும் வெளியேற்றும். குளித்தால்தான் இறந்த செல்கள் முழுமையாக வெளியேறும்.

கிருமிகளிடமிருந்து தப்பிக்க...

சிலர் வெளியிடங்களுக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தவுடன், முகம், கை கால் மட்டுமே கழுவுவார்கள். இது போதாது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது நம் மீது பலவிதமான பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒட்டிக்கொள்ளும். கொரோனா மட்டுமல்ல, இதுபோல பலகோடி கிருமிகள் உலகத்தில் இருக்கின்றன. அவற்றுடன் வீட்டுக்குள் வந்தால் மொத்த குடும்பமும் பாதிக்கப்படும். அதனால், குளிருக்கு பயந்து வீட்டுக்கு வந்தவுடன் குளிக்காமல் இருக்காதீர்கள்.

Sleep
Sleep
Photo by Kinga Cichewicz on Unsplash

ஆழ்ந்த தூக்கத்துக்கு...

காலையில் குளிப்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியம் இரவில் குளிப்பதும். புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உடல் சோர்வு நீங்கும். இரவில் ஆழ்ந்த தூக்கம் வரும். இது எல்லா சீஸனுக்கும் பொருந்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹார்மோன்களைத் தூண்டிவிட...

சோப், குளியல்பொடி, மஞ்சள் ஆகியவற்றின் வாசனையானது உடலில் இருக்கிற ஹார்மோன்களைத் தூண்டிவிடும். அதனால், இருவேளை குளியல் நல்லது.

Soap
Soap
Image by timokefoto from Pixabay

குளிர்கால குளியல்

குளிர்காலத்தில் நம் சருமத்தில் இயற்கையாகச் சுரக்கிற சீபம், வெளிப்புறத்திலிருந்து நம் சருமம் வழியாக உடலுக்குள் நுழைய முயல்கிற கிருமிகளைத் தடுத்துவிடும். தலையிலும் இதேபோன்ற எண்ணெய் போன்ற சுரப்பு இருக்கும். நீண்ட நேரம் குளித்தால் இந்தச் சுரப்புகள் குறைந்துபோய், சருமமும் தலைப்பகுதியும் வறண்டு போய்விடும். சருமத்தில் மெல்லிய வெடிப்புகள் ஏற்படும். அதனால், குளிர்காலத்தில் நீண்ட நேரம் குளிக்கக் கூடாது. அப்படிக் குளித்தால் உடலில் இருக்கிற ஈரப்பதம் குறைந்துவிடும். 5 முதல் 7 நிமிடங்கள்தான் குளிர்கால குளியலுக்கான நேரம்.

கடலை மாவுக்கும் வாசனை சோப்புக்கும் நோ...

குளிர்காலத்தில் கடலை மாவு மற்றும் வாசனை அதிகமான சோப்புகளைப் பயன்படுத்திக் குளிக்கக் கூடாது. கடலைமாவு நம் சருமத்தில் இருக்கிற எண்ணெய்ப்பசையை நீக்கிவிடும். வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமென்பதற்காக சோப்புகளில் சேர்க்கப்படுகிற கெமிக்கல்ஸும் சருமத்தை வறட்சியடையச் செய்துவிடும். இவற்றைத் தவிர்ப்பதே நல்லது. மிதமான வாசனைகொண்ட சோப் என்றால் ஓகே.

இயற்கை சோப்!

வேப்பிலை,

மஞ்சள்,

துளசி,

செம்பருத்தி,

ரோஜா இதழ்கள் ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் இருக்கிற குளியல் சோப்பில் சிறிதை மட்டும் டபுள் பாய்லிங் முறையில் உருக்கி, அதனுடன் அரைத்த மூலிகை விழுதைப்போட்டு நன்கு கலந்துகொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவி, அதில் இந்தக் கலவையை ஊற்றி வைத்துவிட்டால் மறுநாள் காலை மூலிகை சோப் ரெடி. குளிர்காலத்தில் நார்மல் சோப்புக்கு பதில் இந்த சோப்பைப் பயன்படுத்தலாம்.

சீயக்காயும் கொத்துமல்லிச்சாறும்...

குளிர்காலத்தில் பொடுகு பிரச்னை வரும். எண்ணெய்க் குளியலின்போது ஷாம்பூவுக்குப் பதில் சிகைக்காய்க்கு மாறிக்கொண்டால், இந்தப் பிரச்னை கட்டுப்படும். கண்டிஷனர்க்கு பதில் கொத்துமல்லிச் சாற்றால் முடியை அலசலாம்.

coriander leaves
coriander leaves
Photo: Vikatan / Preethi Karthik
Vikatan

வெந்நீரைவிடத் தண்ணீர்தான் பெஸ்ட்!

குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதற்குத்தான் எல்லாரும் விரும்புவார்கள். ஆனால், இயற்கை மருத்துவத்தின்படி எல்லா சீஸனிலும் வெந்நீரைவிட நார்மல் வாட்டர்தான் குளியலுக்கு ஏற்றது. அதாவது, குழாயிலிருந்து தண்ணீரைப் பிடித்து அப்படியே குளிப்பதுதான் சரி. அப்போதுதான் நம் உடலில் இருக்கிற கழிவுகள் முழுமையாக வெளியேறும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குளிக்கும்போது சுருங்குகிற ரத்த நாளங்கள், சில நிமிடங்களில் விரிய ஆரம்பிக்கும். இதனால் ரத்த நாளங்களில் இருக்கிற அடைப்புகள் நீங்கும். குறிப்பாக, உடம்பு முழுக்க நல்லெண்ணெய் தடவிக்கொண்டு 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றுவிட்டு குழாய் தண்ணீரில் குளித்தால் உடலின் மூன்று தோஷங்களும் பேலன்ஸ் ஆகும். வளர்சிதை மாற்றம் நடக்கும். தசை சோர்வு நீங்கும். அதே நேரம் பனிக்காலத்தில் குழாயில் வருகிற தண்ணீர் குளிக்க முடியாத அளவுக்கு ஜில்லென்று இருந்தால், வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

யாரெல்லாம் வெந்நீரில் குளிக்க வேண்டும்?

ஆஸ்துமா, சைனஸ், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் இந்த சீஸனில் கட்டாயம் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். இவர்களைப்போலவே, 15 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வெந்நீர் குளியல்தான் சரி.

Child
Child
Image by PublicDomainPictures from Pixabay
Vikatan

எப்படிக் குளிக்க வேண்டும்?

எந்த சீஸன் என்றாலும், எந்தத் தண்ணீரில் குளித்தாலும் பாதங்களில், தொடையில், தோளில், கடைசியாகத் தலையில் என படிப்படியாகத்தான் உடலில் தண்ணீர் ஊற்ற வேண்டும். எடுத்தவுடனே தலையில் தண்ணீர் ஊற்றக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு