Published:Updated:

பிரசவத்திற்குப் பின் ஹார்மோன் மாற்றத்தால் பெரிதாகும் மூக்கு? மருத்துவர் சொல்வது என்ன?

நுஸ்ரத் ஜஹான் ( Instagram Photo: @nusratchirps )

``இந்தப் பிரச்னை குழந்தைகளுக்கு ஏற்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி அதிகரித்து, உயரத்தைத் தாறுமாறாக அதிகரிக்கும். பெரியவர்களுக்கு ஏற்பட்டால் உயரம் அதிகரிக்காது. ஆனால், உடலின் சில பாகங்கள் பெரிதாவது, விரிவடைவது போன்ற மாற்றங்கள் நடக்கும்."

பிரசவத்திற்குப் பின் ஹார்மோன் மாற்றத்தால் பெரிதாகும் மூக்கு? மருத்துவர் சொல்வது என்ன?

``இந்தப் பிரச்னை குழந்தைகளுக்கு ஏற்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி அதிகரித்து, உயரத்தைத் தாறுமாறாக அதிகரிக்கும். பெரியவர்களுக்கு ஏற்பட்டால் உயரம் அதிகரிக்காது. ஆனால், உடலின் சில பாகங்கள் பெரிதாவது, விரிவடைவது போன்ற மாற்றங்கள் நடக்கும்."

Published:Updated:
நுஸ்ரத் ஜஹான் ( Instagram Photo: @nusratchirps )

வைக்கம் முகமது பஷீரின் `உலகப் புகழ்பெற்ற மூக்கு' என்ற சிறுகதைக்குப் பிறகு, அரசியல் பிரமுகரின் மூக்கு ஒன்று பிரபலமாகியிருக்கிறது. வங்காள நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நுஸ்ரத் ஜஹான் நடத்தும் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் சமூக வலைதளங்களில் அவரின் ஃபாலோயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதில் ஒருவர் நுஸ்ரத் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அவர், ``நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன் என்று பரவும் தகவல் பொய்யானது. பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால் எனது மூக்கின் அளவு பெரிதாகிவிட்டது" என்று தெரிவித்திருந்தார்.

நுஸ்ரத் ஜஹான்
நுஸ்ரத் ஜஹான்
Instagram Photo: @nusratchirps

பெண்களின் உடலில் பருவமடைவது முதல் மெனோபாஸ் வரை ஹார்மோன்கள் ரோலர் கோஸ்டராக மாறிச் செயல்படும். அப்படியிருக்கும்போது ஹார்மோன் மாற்றங்களால் இதுபோன்ற உடலுறுப்புகள் பெரிதாவது போன்ற மாற்றங்கள் எல்லாருக்கும் ஏற்படுமா என்று நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை மருத்துவர் ஸ்ருதி சந்திரசேகரிடம் கேட்டோம்.

``ஹார்மோன் மாற்றங்களால் உடலுறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால், இந்த நிகழ்வு மிகவும் அரிதாகவே நடக்கும். 2 லட்சம் பேரில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை ஏற்படலாம் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மூக்கு மட்டுமல்லாமல் உடலின் பிற பகுதிகளான கை, கால், நெற்றி, தாடை போன்ற இடங்களிலும் மாற்றங்கள் நடைபெறும்.

இந்தப் பிரச்னை குழந்தைகளுக்கு ஏற்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி அதிகரித்து, உயரத்தைத் தாறுமாறாக அதிகரிக்கும். பெரியவர்களுக்கு ஏற்பட்டால் உயரம் அதிகரிக்காது. ஆனால், உடலின் சில பாகங்கள் பெரிதாவது, விரிவடைவது போன்ற மாற்றங்கள் நடக்கும்.

மருத்துவர் ஸ்ருதி சந்திரசேகர்
மருத்துவர் ஸ்ருதி சந்திரசேகர்

மூளையின் அடிப்பகுதியில் சிறிய பட்டாணி அளவில் பிட்யூட்டரி சுரப்பி காணப்படும். இந்தச் சுரப்பிதான் அனைத்து சுரப்பிகளுக்குமான `மாஸ்டர் கிளாண்டு' என்று அழைக்கப்படுகிறது. இதில் சுரக்கும் ஹார்மோன்கள் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

அப்படி பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone) அதிகமாகச் சுரப்பதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்று உடலுறுப்புகளின் தோற்றத்தில் மாறுபாடு ஏற்படும் பிரச்னைக்கு `அக்ரோமெகாலி' (Acromegaly) என்று பெயர். இது ஒரே நாளில் மாறக்கூடிய விஷயம் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.

ஆண், பெண் இருவருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். எடை அதிகரிப்பது, முகப்பரு, அதீத வியர்வை, எண்ணெய்ப்பசையான சருமம், ரத்த அழுத்தம் அதிகரித்தல், சர்க்கரைநோய், குறட்டை போன்ற அறிகுறிகள் ஏற்படும். பெண்களுக்கு இதனுடன் மாதவிடாய் கோளாறுகளும் ஏற்படும். குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் திடீரென்று மிக உயரமாக வளருவார்கள்.

Health (Representational Image)
Health (Representational Image)
Photo by Chelsea shapouri on Unsplash

ஆண்களுக்கு ஏற்பட்டால் உடல் பாகங்கள் விரிவடைவது, அதீத வியர்வை, எண்ணெய்ப்பசை உள்ள சருமம், தசை பலவீனம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரையுடன் ஹார்மோன் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

அந்தப் பரிசோதனையில்தான் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து தேவைப்பட்டால் வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். ஒருவேளை பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி உருவாகி இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தினால் அதை அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டும்.

இந்த பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால் கை, கால் வலி, சர்க்கரைநோய், மாதவிடாய் பிரச்னைகள், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்'' என்றும் கூறினார்.