Published:Updated:

உயிரையே பறிக்குமா கருக்கலைப்பு மாத்திரைகள்? சென்னை அதிர்ச்சி சம்பவமும் எச்சரிக்கையும்!

கருக்கலைப்பு மாத்திரைகள் மிகவும் ஆபத்தானவை, அவற்றை சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பதைக் காரணங்களுடன் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையைச் சேர்ந்த எட்டுமாத கர்ப்பிணி, அந்தக் கருவைக் கலைக்க தானாகவே மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டதன் விளைவாக உயிரிழந்திருக்கிறார். அவரது கர்ப்பப்பையில் ஓட்டைகளும் தொற்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கருவைக் கலைக்க சுய மருத்துவத்தை நாடும் பெண்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். யாரோ சொன்னார்கள், யாருக்கோ கைகொடுத்தது என்ற நம்பிக்கையில் அதே மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தாமும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். கருக்கலைப்பு மாத்திரைகள் மிகவும் ஆபத்தானவை, அவற்றை சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பதைக் காரணங்களுடன் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

``கருவைக் கலைப்பது சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் நான் வரவிரும்பவில்லை. அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட முடிவு. அப்படி அபார்ஷன் செய்வது என்ற முடிவை எடுக்கும் பெண்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற வேண்டியது அவசியம். அபார்ஷன் செய்வதற்கு முன் கரு எத்தனை வாரங்கள் வளர்ச்சியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டியது மிக முக்கியம். கர்ப்பத்தின் ஆரம்ப நாள்களில் அபார்ஷன் செய்தால் ரிஸ்க் குறைவு. குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அபார்ஷன் செய்வதால் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். 7 - 8 மாதங்களில் செய்யப்படுகிற அபார்ஷன் கிட்டத்தட்ட பிரசவம் மாதிரியானது. ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பரிசோதனைகள் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக மருந்துகள் வைத்து டெலிவரி போன்றுதான் அதைச் செய்ய முடியும்.

கருக்கலைப்பு செய்வது என முடிவெடுத்துவிட்டால் முதலில் கணவன், மனைவி இருவருமாக மருத்துவரைச் சந்தித்துப் பேச வேண்டும். எந்தக் காரணத்துக்காகக் கருவைக் கலைக்க நினைக்கிறார்கள் என்பதை மருத்துவரிடம் சொல்லி, அதிலுள்ள ரிஸ்க்குகளையும் அலசி ஆராய்ந்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப ஒருமித்த முடிவெடுக்க வேண்டும். அப்படியில்லாமல் மெடிக்கல் ஷாப்புகளில் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் அபார்ஷனுக்கான மாத்திரைகளை வாங்கி, வீட்டிலேயே பயன்படுத்துவது மிக ஆபத்தானது.

கர்ப்பிணி (Representational Image)
கர்ப்பிணி (Representational Image)

அபார்ஷன் என்பது அவ்வளவு சீரியஸான விஷயமா என்று கேட்டால், நிச்சயம் சீரியஸானதுதான். ஒரு பெண் கருத்தரித்ததுமே அவளது உடல், அந்தக் கருவை எப்படி நல்லபடியாக வளர்த்து, ஆரோக்கியமான பிரசவத்தை நோக்கி நகர்த்தலாம் என்று தயாராகும். அதுதான் இயற்கை. அந்த இயற்கைக்கு எதிராக ஒரு விஷயத்தைச் செய்ய நினைக்கும்போதுதான் பிரச்னையே. அபார்ஷன் என்பது ஒரு பெண்ணின் உரிமை என்றாகிவிட்டது. உரிமை என்பதைவிடவும், அந்தக் குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவெடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கருவைக் கலைக்க நினைத்தால் தம்பதியர் இருவரும் சேர்ந்து மருத்துவரை அணுகி, பாதுகாப்பான முறையில் அபார்ஷன் செய்துகொள்வதுதான் சரியானது.

மருத்துவமனைக்கோ, கிளினிக்குக்கோ நேரில் சென்று அபார்ஷன் செய்துகொண்டால் யார், என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். உங்களை அங்கே யாரும் ஜட்ஜ் செய்யப்போவதில்லை. இன்னன்ன காரணங்களுக்காக அபார்ஷன் செய்யலாம் எனச் சில விதிகள் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதாவது, 20 வாரங்களுக்குள்ளான கரு என்றால் அபார்ஷன் செய்துகொள்ளலாம், கரு வளர்ச்சியில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் கலைக்கலாம் என்றெல்லாம் அறிவுறுத்தல்கள் இருக்கின்றன. தெரிந்தோ, தெரியாமலோ கர்ப்பமாகிவிட்ட பெண்கள், அந்தக் கரு வேண்டாம் என நினைத்தால் முதல் 3 மாதங்களுக்குள் அபார்ஷன் செய்துகொள்வது பாதுகாப்பானது.

Abortion (Representational Image)
Abortion (Representational Image)
Image by Jeff Jacobs from Pixabay

கருக்கலைப்பு மாத்திரைகள் மிக எளிதாக மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. பெரும்பாலான மருந்துக்கடைகளில் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் இந்த மாத்திரைகளை விற்பதில்லை. அதையும் மீறி சிலர் சட்டத்துக்குப் புறம்பாக இந்த மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இந்த மாத்திரைகள் நிறைய பக்கவிளைவுகளைக் கொண்டவை. உதாரணத்துக்கு பால் குடிக்கிற குழந்தை இருக்கும்பட்சத்தில் ஒரு பெண் இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. சுயமாகக் கருக்கலைப்பு மாத்திரை எடுக்கும்போது சிலருக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்து, கர்ப்பப்பையை சுத்தம் செய்ய வேண்டி வரலாம். எனவே, ஒரு மாத்திரையில் முடிந்துவிடக்கூடிய அளவுக்கு இதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியமாக இல்லாமல் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு