Published:Updated:

`பதஞ்சலியின் Coronil-ல் கொரோனா என்ற வார்த்தையே இல்லை!' - தடைக்கான காரணம்

Coronil
News
Coronil

Coronil மருந்துக்காக முறைப்படியாக எந்த அனுமதியையும் பதஞ்சலி தரப்பு வாங்கவில்லை. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு, இருமல், சுவாசப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற பெயரிலேயே மருந்துக்கு உரிமம் பெற்றுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குத் தடுப்பூசியும், மருந்தும் கண்டுபிடிப்பது தொடர்பாக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்துவருகின்றன. “இதுவரை எந்த ஒரு மருந்தும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ கண்டறியப்படவில்லை” என்று உலக சுகாதார நிறுவனமே அறிவித்துள்ளது.

corona
corona

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி, அதை அறிமுகப்படுத்தவும் செய்தார் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். அவருக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் 'கொரோனா கிட்’ எனும் பெயரில் 'கொரோனில் அண்ட் ஸ்வாசரி' (Coronil and Swasari) என்ற ஆயுர்வேத மருந்தை கொரோனவுக்கான தீர்வு என்று கூறி ஹரித்வாரில் அறிமுகப்படுத்தியிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த ஆயுர்வேத மருந்து குறித்துப் பேசிய பாபா ராம்தேவ், "'கொரோனா பாசிட்டிவ்' நிலையில் இருந்த 69 பேர் எங்கள் கொரோனா கிட்டை பயன்படுத்திய மூன்றே நாள்களில் 'கொரோனா நெகட்டிவ்' நிலைக்குச் சென்றுள்ளனர். ஒரே வாரத்தில் 100 சதவிகிதம் பேருக்குத் தொற்று இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, இந்தப் பரிசோதனையை நேரடியாக நாங்கள் செய்யவில்லை. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ‘நிம்ஸ்’ பல்கலைக்கழகம்தான் செய்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளாலும் ஏன், உலக சுகாதார நிறுவனத்தாலும்கூட சாதிக்க முடியாததை நாங்கள் சாதித்திருக்கிறோம். இதில் அனைவரும் பெருமிதம் அல்லவா அடைய வேண்டும்?” என்றும் கூறியுள்ளார்.

'பதஞ்சலி' பாபா ராம்தேவ்
'பதஞ்சலி' பாபா ராம்தேவ்

பதஞ்சலி ஆய்வு நிறுவனத்தின் குழுவும், நிம்ஸ் பல்கலைக்கழகத்தின் குழுவும் சேர்ந்து Coronil மருந்து ஆய்வு பரிசோதனையை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. 95 கொரோனா நோயாளிகளுக்கு இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்கள் என மொத்தம் 280 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர்களில் 100 சதவிகிதம் பேர் குணமாகிவிட்டனர் என்றும் பதஞ்சலி தரப்பு சொல்கிறது. ஆனால், சிகிச்சை, மருத்துவ ஆய்வு தொடர்பான முழுமையான விவரங்களை அவர்கள் மருத்துவ நிறுவனங்களுக்கும், அரசு தரப்பிற்கும் அளிக்கவில்லை என்பதால் பதஞ்சலி நிறுவனத்தின் Coronil மருந்து குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Coronil மருந்துக்காக முறைப்படியாக எந்த அனுமதியையும் பதஞ்சலி தரப்பு வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்புப் பிரிவான ‘திவ்யா பார்மசி’, உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் இருக்கிறது. இதன் சார்பில்தான் உத்தரகாண்ட் அரசின் உரிமம் வழங்கும் அமைப்பிடம் Coronil மருந்து குறித்த விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மாநிலத்தின் உரிமம் வழங்கும் அதிகாரி கூறும்போது, “ஜூன் 10-ல் சில மருந்துப் பொருள்கள் தொடர்பாக அனுமதி கோரி பதஞ்சலி தரப்பிடமிருந்து எங்களுக்கு விண்ணப்பம் வந்தது. அதில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு, இருமல், சுவாசப் பிரச்னை ஆகியவை தொடர்பாகத்தான் குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர கொரோனா என்ற வார்த்தையே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

corona
corona

“இறுதி அனுமதி கிடைப்பதற்கு முன்னர், பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்திருக்கக்கூடாது. இது தொடர்பான ஆவணங்களை அவர்களிடமிருந்து கேட்டு வாங்கியிருக்கிறோம். விரைவில் இது தொடர்பாக முடிவெடுப்போம்” என்று ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், 'அமிர்தவல்லி, துளசி, அஷ்வகந்தா ஆகியவற்றைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக, அமிர்தவல்லி எந்த வகையான வைரஸையும் கொல்லக்கூடியது என்றும்' பதஞ்சலியின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் வீடியோ பதிவிட்டு விளக்கமளித்துள்ளார் பாபா ராம்தேவ். ஆனால் Coronil மருந்து பரிசோதனை குறித்து மருத்துவ விளக்கங்கள் எதுவும் தரப்படவில்லை.

கொரோனாவுக்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள்? இந்த நோய்த்தொற்று எப்போது முடிவுக்கு வந்து இயல்வு வாழ்க்கைக்குத் திரும்புவோம் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களிடையே இதுபோன்ற விஷயங்கள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைகின்றன.

பதஞ்சலி நிறுவனத்தின் Coronil மருந்து மற்றும் அதன் மீது ஏழும் சர்ச்சைகள் குறித்து பொது மருத்துவர் அரவிந்த ராஜிடம் பேசினோம்.

மருத்துவர் அரவிந்த ராஜ்
மருத்துவர் அரவிந்த ராஜ்

"பொதுவாக மக்களிடம் ஒரு மருந்தைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவதற்கு முன்பு அந்த மருந்து Clinical Trails, Double Blind Trails உள்ளிட்ட பலகட்ட ஆய்வு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதாவது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு மருந்து கண்டறியப்பட்டால் உடனடியாக அதனை மனிதர்களிடத்தில் கொடுத்து சோதனை செய்யக் கூடாது. அதற்கு முன், முதல் கட்டமாக மருத்துவ ஆய்வகங்களில் அந்த மருந்து சோதனை செய்யப்பட வேண்டும். அடுத்ததாக மனித குரோமோசோமோடு ஒத்துப்போகும் எலி போன்ற உயிரினங்குகளுக்குக் கொடுத்து அவற்றுள் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டும். அதன் பிறகே Double Blind பரிசோதனை செய்யவேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு, எந்த நோய்க்காக மருந்து கண்டறியப்பட்டுள்ளதோ அந்த நோயினால் பாதிக்கப்பட்ட 100 நபர்களைத் தேர்வு செய்து அவர்களை 50, 50 நபர்களாக, இரண்டு குழுக்களாகப் பிரித்து அவற்றில் ஒரு குழுவினருக்கு நாம் கண்டறிந்துள்ள மருந்தைக் கொடுக்க வேண்டும். மற்றொரு குழுவினருக்கு அந்த மருந்தை வழங்கக் கூடாது. சில நாள்கள் கழித்து இரண்டு குழுவினரையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் கண்டறிந்துள்ள மருந்தை எடுத்துக்கொண்டவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன... நோய் குணமாகியுள்ளதா.. போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஒருவேளை அந்த மருந்து நோயைக் குணப்படுத்தும் திறனுடையது என்றால் மட்டுமே அதற்கு முறையான உரிமம் வாங்கி மக்களிடையே புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

 Test
Test

இதுபோன்ற ஆய்வுகளும் அது குறித்த தரவுகளும் பதஞ்சலி Coronil மருந்து விஷயத்தில் முறையாக வெளியிடப்படவில்லை. தாங்கள் மேற்கொண்டதாக அவர்கள் அளித்த ஆய்வுகள் மிக மேம்போக்காக உள்ள காரணத்தால் பல மாநிலங்களில் இந்த மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

Coronil மருந்துக்கு அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது சிலர் டெக்ஸாமெத்தாசோன் (Dexamethasone) ஸ்டீராய்டு மருந்து பற்றி கேள்வி எழுப்பினர். இதனை மட்டும் கொரோனாவுக்கான மருந்தாக ஏன் ஏற்றுக்கொண்டீர்கள் என்று கேட்ட அவர்களுக்கு நாங்கள் தந்த விளக்கம் இதுதான். அதாவது டெக்ஸாமெத்தாசோன் கொரோனவிற்கான தீர்வு மருந்தாக அறிவிக்கப்படவில்லை. கொரோனா தொற்றினால் தீவிரமாக பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே டெக்ஸாமெத்தாசோன் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் இது தற்போது கண்டறியப்பட்ட மருந்தும் இல்லை.

Medicine
Medicine
Representational Image

பல வருடங்களுக்கு முன்பாகவே கண்டறியப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பொதுவாக நுரையீரலைப் பாதிக்கும் பல்வேறு நோய்க்கிருமிகள் நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நமக்கு எதிராகவே தூண்டி சில ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர்(Autoimmune Disorder) பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனைச் சரிசெய்யப் பலகாலமாக டெக்ஸாமெத்தாசோனும் ஒரு ஸ்டீராய்டு மருந்தாகப் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. அவ்வளவே! ஆனால் பதஞ்சலி Coronil மருந்து விஷயம் அப்படியல்ல. Coronil என்ற பெயர் 'கொரோனாவிற்கான தீர்வு இதுவே' என்ற பொய்யான பிம்பத்தை மக்களிடம் நிறுவுகிறது. இது போன்ற கொள்ளைநோய் காலத்தில் இப்படியாக மக்களைத் தவறாக வழிநடத்துவது ஆபத்தானது.

மேலும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு, இருமல், சுவாசப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற பெயரிலேயே Coronil மருந்துக்கு உரிமம் பெற்றுள்ளனர். வேறு ஒரு நோயைக் குணப்படுத்தும் மருந்து என்று உரிமம் வாங்கி மற்றொரு நோய்க்கான மருந்து என்று விளம்பரப்படுத்துவதே பெரிய குற்றம். சட்டம் 1954, Drugs and Magic Remedies (Objectionable Advertisements) Act என்பதன் கீழ் இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்ய முடியும். இப்படியாக நிறைய குளறுபடிகள் உள்ள காரணத்தினால் ஆயுஷ் இந்த மருந்தை கொரோனாவுக்கான மருந்து என விளம்பரப்படுத்துவதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

corona
corona

முறையான மருத்துவ ஆய்வுகள், தரவுகள் எதுவும் இன்றி எந்த மருந்தினையும் மக்களிடையே அறிமுகப்படுத்தவே கூடாது. மீறி விளம்பரப்படுத்தி மக்களிடையே புழக்கத்திற்குக் கொண்டுவரும் பட்சத்தில் அது விரும்பத்தகாத மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்" என்று எச்சரிக்கிறார் மருத்துவர் அரவிந்த ராஜ்.