குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்பு அதிகமா... மருத்துவம் சொல்வது என்ன?

``குளிர்காலத்தில் மாரடைப்புக்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாக மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அனுபவ ரீதியாகவும் அதைப் பார்த்து வருகிறோம்." என்கிறார் இதயநோய் மருத்துவர் கே.சையது அப்துல் காதர்.
கோடைக்காலத்தைக் காட்டிலும் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்கின்றன சில ஆய்வுகள். இதயம் சம்பந்தப்பட்ட இதய வலி, இதயத்தில் பாரம் ஏற்பட்டதைப் போன்ற உணர்வு உள்ளிட்ட பிரச்னைகளோடு புறநோயாளிகளாக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை குளிர்காலத்தில் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது. மேலும், தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.

குளிர்காலத்துக்கும் மாரடைப்புக்கும் என்ன தொடர்பு, குளிர்காலத்தில் வரும் மாரடைப்புகளைத் தடுக்க முடியுமா என்று விளக்குகிறார் இதயநோய் மருத்துவர் கே.சையது அப்துல் காதர்.
``குளிர்காலத்தில் மாரடைப்புக்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாக மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அனுபவ ரீதியாகவும் அதைப் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாரடைப்பு அறிகுறிகளோடும், மாரடைப்பு ஏற்பட்டும் வழக்கத்தைவிட அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். குளிர் நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
இதய ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பு படிமம் (Cholesterol Blocks) சிதைந்து பரவத் தொடங்கும். அவ்வாறு பரவும் கொழுப்பு ரத்தக்குழாய்களில் ரத்த உறவை ஏற்படுத்தும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. குளிர்காலத்தில் குளிர்ச்சி அதிகரிக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்கும் தன்மை அதிகரிக்கும். அதனால் கொழுப்புப் படிமம் சிதைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதனால்தான் குளிர்காலத்தில் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

பொதுவாகவே குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் போன்ற ஃப்ளூ வகை நோய்த்தொற்றுகள் அதிகமாக ஏற்படும். அந்தத் தொற்றுகளுக்கு காரணமான சில வைரஸ்கள் ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்பு சிதைவதற்கு காரணமாக அமையும். அதனால் சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு மாரடைப்பு வரலாம்.
குளிர்காலத்தில் உடலுழைப்பு மிகவும் குறைந்துவிடும். குளிர் காற்று, குளிர்ந்த சுற்றுச்சூழலில் வேலை செய்யும்போது வழக்கத்தைவிட சற்று கடினப்பட்டு வேலைகளைச் செய்ய வேண்டி வரும். இவை இரண்டுமே மாரடைப்புக்கான காரணமாக இருக்கின்றனர். சில ஆய்வுகளிலும் இவை நிரூபிக்கப்பட்டுள்ளன.
யாருக்கு ரிஸ்க் அதிகம்?
45 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்குப் பொதுவாகவே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாகக் குளிர்காலத்திலும் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ரிஸ்க் சற்று அதிகமே. ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கும் அவர்களின் இதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
நியூ நார்மலும் மாரடைப்பும்
வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றுவோருக்கு வேலை தொடர்பான அழுத்தம் அதிகரிக்கிறது. நீண்ட நேர வேலை, தூங்காமல் வேலை பார்ப்பது ஆகியவற்றால் தூக்கமின்மை ஏற்படும். தூக்கமின்மையால் மனஅழுத்தத்தைக் கொடுக்கும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புப் படிமம் சிதைந்து, ரத்த உறைவை உண்டாக்கி, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றுவதால் உடலுழைப்பு முற்றிலும் பாதிக்கப்படும்.

வேலைக்குச் செல்வது, வருவது, மாடிப்படி ஏறுவது போன்ற சிறிய சிறிய நடவடிக்கைகள்கூட குறைந்துவிடும். வீட்டிலிருக்கும்போது பெரும்பாலானவர்களால் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தையும் பின்பற்ற முடிவதில்லை. நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.
வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் என்னுடைய நோயாளிகள் பலருக்கு உடல் எடை அதிகரிப்பு, கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் மாரடைப்புக்கான காரணிகளாக அமைகின்றன. கோவிட்-19 தொற்றினாலும் இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.
தடுக்க முடியுமா?
அதிக ரிஸ்க் பட்டியலில் இருப்பவர்கள் தங்களின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கொலஸ்ட்ரால் இருந்தால் அதற்கான சிகிச்சைகள், மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமாகச் செய்வதைக் காட்டிலும் குளிர்காலத்தில் அதிக கடின வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற விஷயங்களை குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டும். புகைப்பழக்கம் இருப்பவர்கள் அதைக் கைவிட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வாய்ப்புள்ளது.

எப்படிக் கண்டறிவது?
நடு நெஞ்சுப் பகுதியிலோ வலது, இடது பக்க நெஞ்சிலோ வலி ஏற்படலாம். நெஞ்செரிச்சல், நெஞ்சுப் பகுதி கனமாக இருப்பது போன்று உணர்தல், நெஞ்சு வலியுடன் வியர்த்தல், மூச்சுத்திணறல், நடந்தால் நெஞ்சு வலி அதிகரித்தல். கீழ்த்தாடையிலிருந்து தொப்புள் வரை எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் மாரடைப்பாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்றார்.