Published:Updated:

``சசிகலாவுக்கு முன்கூட்டியே பரிசோதனை மேற்கொள்ளப்படாதது ஏன்?" - மருத்துவர் எழிலன் எழுப்பும் கேள்வி

சசிகலா
சசிகலா

சசிகலாவின் உடல்நல குறைபாட்டுக்குப் பின்பு அரசியல் காரணங்கள் உள்ளனவா இல்லையா என்பதைத் தாண்டி இந்தச் சம்பவங்கள் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப்போக்கையே எடுத்துரைக்கின்றன

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, சிறையிலுள்ள சசிகலா, தனது தண்டனைக் காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகவுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அப்போது முதலில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் சசிகலாவுக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானது.

சசிகலா
சசிகலா

ஆனாலும், ஒரு வார காலமாக அவருக்குத் தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக சிறைத்துறை சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து முதல்கட்டமாகச் சிறை மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து பெங்களூரு சிவாஜி சாலையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் தொடர் சிகிச்சைக்காகவும் சி.டி ஸ்கேன் பரிசோதனைக்காகவும் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சசிகலா.

இந்நிலையில் சசிகலா உடல்நிலை தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் ``சி.டி ஸ்கேன் முடிவுகளில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. உடலின் சர்க்கரை அளவு கூடியிருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். நுரையீரலின் பாதிப்பு 16/25 என்ற அளவில் இருப்பதால், அவருக்குத் தீவிர சிகிச்சை தேவையென்றும் அதோடு, அவர் மருத்துவர்களின் தொடர் கணிக்காணிப்பில் இருக்க வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மருத்துவ அறிக்கை
மருத்துவ அறிக்கை

சி.டி ஸ்கேனை அடுத்து செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே, நடப்பு அரசியலோடு சசிகலாவின் உடல்நிலையை இணைத்து சமூக வலைதளங்களில் சந்தேகக் கேள்விகள் அலையடிக்க ஆரம்பித்தன.

தண்டனை முடிந்து விடுதலையாகும் நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட இந்தத் தொற்று பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், சசிகலா விஷயத்தில் என்னதான் நடக்கிறது... அந்த மருத்துவ அறிக்கையின் பின்னணி என்ன... என்பது குறித்து மருத்துவரும், மருத்துவ செயற்பாட்டாளருமான எழிலனிடம் பேசினோம்.

மருத்துவர் எழிலன்
மருத்துவர் எழிலன்
`சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சந்தேகங்களை எழுப்புகிறது!’ - ஜவாஹிருல்லா

``சிறைச்சாலை என்பது தனிமைப்படுத்தப்பட்ட ஓரிடம். சசிகலா இருந்த சிறையில் யாருக்குமே கொரோனா தொற்று இல்லாத நிலையில், அவருக்கு மட்டும் எப்படி திடீர் தொற்று வந்தது என்பதே சந்தேகத்துக்குரிய விஷயம். சிறையில் பணிபுரியும் காவலர்கள் அல்லது துப்புரவுத் தொழிலாளர்கள் யாருக்காவது கொரோனா தொற்று இருந்து அவர்கள் மூலமாகப் பரவியிருக்கலாம் என்று கூறப்படும் பட்சத்தில், சிறைச்சாலையில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யாரும் பின்பற்றவில்லை என்பதுதானே உண்மை.

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறைச்சாலையில் ஒரே கூரைக்குக் கீழ் உள்ளார்கள். இந்நிலையில் அங்கிருந்த ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், விடுதலையாகும்வரை சசிகலா கைதிதான். அவரின் மருத்துவ அறிக்கைகளை சிறைத்துறைதான் வெளியிட வேண்டும். ஆனால், மருத்துவ அறிக்கையை வெளியிட்டிருப்பது விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம். இதுவே பெரும் விந்தையாக இருக்கிறது.

சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, கொரோனா தொற்று ஏற்பட்ட உடனேயே நுரையீரல் தீவிரமாகப் பாதிக்கப்படாது. தொற்று ஏற்பட்டு ஒருவார காலம் சென்ற பிறகே நுரையீரல் செல்கள் வைரஸால் தீவிரமாகப் பாதிப்படையும். அதனால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முந்தைய நாள்களில் அவருக்கு கொரோனவுக்கான அறிகுறிகள் வெளிப்பட்டிருக்க வேண்டும். மேலும் சசிகலாவுக்கு ஒருவார காலமாகத் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆதரவாளர்களை நோக்கிக் கையசைக்கும் சசிகலா
ஆதரவாளர்களை நோக்கிக் கையசைக்கும் சசிகலா

ஆனால், மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகே சி.டி ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள முதிய வயதுடைய, ஏற்கெனவே நீரிழிவு, தைராய்டு போன்ற உடல்நல பிரச்னைகள் உள்ள ஒருவருக்குத் தொடர்ந்து 7 நாள்களுக்கு நிமோனியா காய்ச்சல் இருந்த நிலையில் அவருக்கு முன்கூட்டியே சி.டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளாதது ஏன்?

சசிகலாவின் உடல்நல குறைபாட்டுக்குப் பின்பு அரசியல் காரணங்கள் உள்ளனவா இல்லையா என்பதைத் தாண்டி இந்தச் சம்பவங்கள் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப்போக்கையே எடுத்துரைக்கின்றன" என்கிறார் மருத்துவர் எழிலன்.

அடுத்த கட்டுரைக்கு