Published:Updated:

பெண்களை அதிகம் பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்... எப்படி எதிர்கொள்வது? #PCOSAwarenessMonth

pcos
pcos

பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) வந்தால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். இதனால் முன்பிருந்த அழகு தன்னைவிட்டுப் போய்விட்டதாகப் பெண்கள் வருத்தப்படுவார்கள்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) அல்லது சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைக்கான விழிப்புணர்வு மாதம் இது.

கர்ப்பப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சின்னச் சின்னதாக நீர்க்கட்டிகள் தோன்றுகிற நிலையைத்தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்று சொல்கிறோம். இந்த நிலையில், சினைப்பையின் சுவர்கள் தடிமனாகி விடுவதாலும் நீர்க்கட்டிகளின் பெருக்கத்தாலும், கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும்.

மரபணு பிரச்னை, ஹார்மோன் சமச்சீரின்மை, மாசுபட்ட காற்றை சுவாசிப்பது, தவறான வாழ்க்கைமுறை என்று சினைப்பை நீர்க்கட்டி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. டீன் ஏஜ் பருவத்தில்தான் இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது. சில பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்த பிறகும் வருகிறது.

பிசிஓஎஸ் பாதிப்பு இருந்தால் உடல் பருமன், ஹார்மோன் பிரச்னைகள், மாதவிடாய் ஒழுங்கின்மை, குழந்தையின்மை, தேவையில்லாத இடங்களில் முடி வளர்ச்சி ஏற்படுவது, தலையில் அதிகமாக முடி உதிர்வது போன்ற பிரச்னைகள் வரும். இதனால் சம்பந்தப்பட்ட பெண்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுவார்கள். சினைப்பையில் நீர்க்கட்டி மற்றும் மனஅழுத்தத்துக்கான தீர்வுகள் குறித்து மகப்பேறு மருத்துவர் வாணி ஷியாம் சுந்தரிடம் பேசினோம்.

மகப்பேறு மருத்துவர் வாணி ஷியாம் சுந்தர்
மகப்பேறு மருத்துவர் வாணி ஷியாம் சுந்தர்

உருவம் மாறுவதால் மனஅழுத்தம் வரும்!

``பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) வந்தால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். இதனால் முன்பிருந்த அழகு தன்னைவிட்டுப் போய்விட்டதாகப் பெண்கள் வருத்தப்படுவார்கள். இது முதல் மனஅழுத்தம். மாதவிடாய் ஒழுங்காக வராது என்பதால், அம்மாக்கள் `என்னாச்சு, ஏன் வரல' என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பதால் அது இன்னொரு மன அழுத்தம். அடுத்ததாக, பிசிஓஎஸ் இருப்பவர்களுக்கு அதிகமாக முடி கொட்டும். குறிப்பாக, தலை உச்சியில் அதிகமாகக் கொட்டும். இதனால் சிலருக்கு வழுக்கை விழுந்ததுபோல் ஸ்கால்ப் தெரிய ஆரம்பிக்கும். இன்னும் சிலருக்கு பூனை முடி போல மெலிதாக மீசை, தாடி எல்லாம் வளர ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கை குறைவாலும் மன அழுத்தத்தாலும் சோர்ந்துபோய்விடுவார்கள்.

உடனே மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்!

பிசிஓஎஸ் அறிகுறிகளில் ஒன்றிரண்டு இருந்தாலும் உடனடியாக மகப்பேறு மருத்துவரைப் பார்த்துவிடுங்கள். அவர் உடனடியாக ஹார்மோன் பரிசோதனை செய்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார். பிசிஓஎஸ் ஒரு சிலருக்கு நீரிழிவு வரை பாதிப்பு ஏற்படுத்துவதால் ஆரம்பத்திலேயே மருத்துவரைச் சந்தித்துவிட்டால் ஆறு மாதங்களில் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.

Representational Image
Representational Image

திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள்!

பிசிஓஎஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு மாதவிடாய் ஒழுங்கின்மையும் இருக்கும் என்பதால் சிகிச்சை எடுத்து பிசிஓஎஸ் கட்டுக்குள் வந்தவுடனே திருமணம் செய்துகொள்வது நல்லது. ஒருவேளை பிசிஓஎஸ் மறுபடியும் வந்தால் மறுபடியும் சிகிச்சையெடுத்து அதைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகுதான், திருமணம், குழந்தைப்பேறு என்று யோசிக்க முடியும். என் அனுபவத்தில் பிசிஓஎஸ்ஸுக்கு சிகிச்சையெடுத்து முதல் குழந்தை பெற்ற பெண்கள், உடல் பருமன் காரணமாக மறுபடியும் பிசிஓஎஸ் வந்ததால் வருடக்கணக்கில் சிகிச்சை எடுத்து அதன் பிறகு, இரண்டாவது குழந்தை பெற்றதும் நடந்திருக்கிறது.

இவற்றைத் தவிருங்கள்!

உடல் எடை அதிகமாவதற்குக் காரணமான மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைத்துவிடுங்கள். குறிப்பாக பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள். தற்போது வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்கிற பழக்கம் இருக்கிறது. பிசிஓஎஸ் வருவதற்கு இது முக்கியமான காரணம்.

pcos
pcos

டயட்டில் இருங்கள்!

உங்கள் உடல் பருமனுக்கு ஏற்ற டயட்டை மருத்துவரிடம் கேட்டு ஃபாலோ செய்யுங்கள். ஒருவேளை பிசிஓஎஸ் ஆரம்ப நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தை முடிந்த அளவு குறைத்துவிட்டு, காய்கறிகள், கீரைகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள்!

நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா என்று உங்களுக்குப் பிடித்த பயிற்சி ஒன்றைத் தினமும் செய்யுங்கள். சிகிச்சையோடு உடற்பயிற்சியும் சேரும்போது பாதிப்புகளிலிருந்து சீக்கிரம் வெளியே வருவீர்கள்.

pcos
pcos
பஞ்சாப்: `எனக்கு பயமில்லை!' திருடர்களை மடக்கி பிடித்த 15 வயது சிறுமி

பிசிஓஎஸ் கட்டுக்குள் வந்துவிட்டால் மன அழுத்தமும் சரியாகிவிடுமா?

இது நபருக்கு நபர் மாறுபடும். சிகிச்சையின்போது சரியான டயட் எடுத்து, உடற்பயிற்சி செய்து, உடல் எடையைக் குறைந்து முடி உதிர்வது நின்றுவிட்டால் தானாகவே மன அழுத்தமும் சரியாகிவிடும். ஒருவேளை சிகிச்சையின்போது மருத்துவர் சொல்கிறபடி நீங்கள் கேட்கவில்லையென்றால் உடல் எடையும் குறையாது; முடி உதிர்வதும் நிற்காது. இதுபோன்ற நேரங்களில் மனஅழுத்தம் தொடரவே செய்யும். பிசிஓஎஸ் பிரச்னையை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும். அது மருத்துவர்களின் கைகளில் மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் கைகளிலும் இருக்கிறது."

அடுத்த கட்டுரைக்கு