`கோவாக்சினுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அதை எடுத்துக்கொண்டது ஏன்?' - விளக்கும் ரவீந்திரநாத்
தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.
தமிழகத்தில் காணும் பொங்கல் தினத்திலிருந்து முன்களப் பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் கண்டறியப்பட்ட கோவிஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியை எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், தடுப்பூசி குறித்து போதிய ஆராய்ச்சி தரவுகள் இல்லை. அரசு அவசர கதியில் தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது என்று கூறி வந்த நிலையில், மருத்துவச் செயற்பாட்டாளரும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவரும் அவரின் மனைவியும் செயற்பாட்டாளருமான மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் இருவரும் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். தடுப்பூசி விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்துவிட்டு தற்போது அதைப் போட்டுக்கொண்டது ஏன் என்று ரவீந்திரநாத்திடம் கேட்டோம்.

கோவாக்சின் தடுப்பூசியைப் பொறுத்தவரை, பரிசோதனை முறையில்தான் போடுகின்றனர். இருப்பினும் அதைப் போட்டுக்கொள்வதற்கு போதிய தன்னார்வலர்கள் கிடைக்கவில்லை. மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் நிலையில், அதைப் போட்டுக்கொள்வதன் மூலம் பரிசோதனைக்கு ஒத்துழைத்தால்தான் தடுப்பூசியைப் பற்றிய முடிவுக்கு வரமுடியும்.
இந்த தடுப்பூசி 50 சதவிகிதம் செயல்திறன் வாய்ந்தது என்று நிரூபிக்கப்பட்டால்கூட அது மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும். மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. செயல்திறனை அறிவதற்காகத்தான் பரிசோதனை நடத்தப்படுகிறது. பாதுகாப்பானது என்பதால் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். மேலும், தடுப்பூசிக்கு எதிரான மனநிலை மேலோங்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊசியைப் போட்டுக்கொண்டோம்.
இந்தப் பரிசோதனை முடிவுகளை அரசு விரைவில் வெளியிட வேண்டும். இரண்டு தடுப்பூசிகளில் எதைப் போடவேண்டும் என்று பொதுமக்கள் தேர்வு செய்ய முடியாத நிலை இருக்கிறது. உற்பத்தி அதிகரித்த பின்னர் தேர்வு செய்யும் உரிமையை மக்களுக்கு அளிக்கவேண்டும்" என்றார்.

பக்கவிளைவுகள் ஏற்பட்டதா?
கோவிட் -19 தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என்று கேட்டோம்.
தசை வலிமை, ஒவ்வாமை, காய்ச்சல் என எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. ஊசி போட்ட இடத்தில் வலிகூட இல்லை. தற்போது காரில் பயணம் செய்து திருச்சி சென்று கொண்டிருக்கிறேன். 'அப்சல்யூட்லி ஆல் ரைட்!'.
என் மனைவிக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. என் மகன் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு மட்டும் லேசான காய்ச்சல் இருந்தது" என்றார்.