Published:Updated:

`நாங்களும் மனுஷங்கதான்ல?' - முன்களப் பணியாளர்களின் ஒருநாள்; ஒரு மருத்துவரின் பதிவு!

உங்களைப்போல மருத்துவர்களும் ரத்தமும் சதையுமான உயிர்கள்தாம். என்றாவது இயல்புநிலை திரும்பிவிடாதா என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கும் அழகான குடும்பம் ஒன்று வீட்டில் காத்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம் குடும்பத்தினருக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ யாராவது ஒருவருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுவிட்டால்கூட நமது நிம்மதி போய்விடுகிறது. அவர்கள் குணமடைந்து இயல்புக்குத் திரும்பும் வரை நாம் நாமாக இருப்பதில்லை. அதிலும் மரணங்கள் ஏற்பட்டுவிட்டால் கேட்கவே வேண்டாம். அந்தச் சூழலிலிருந்து விடுபடுவது மிகவும் சிரமமாகிவிடுகிறது. வீட்டில் ஓரிருவரைப் பார்ப்பதற்கே இவ்வளவு சிரமப்படுகிறோம்.

முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் நிலையை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? மருத்துவமனைக்குள் நுழைந்தது முதல் நோயாளிகளின் கதறல், திணறல், வலி, மரண ஓலங்கள் எனத் தினம்தோறும் அதுபோன்ற சூழலுக்குள் நுழைந்து வெளியேறுகிறார்கள். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றால் நம் குடும்பத்தினருக்கு நம்மால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற குற்றவுணர்ச்சி வேறு. தொடர்ந்து சுமார் ஓராண்டுக்கும் மேலாக இதுபோன்ற நிலையிலேயே மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதால் அவர்களில் பலர் தீவிர மனஅழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மனஅழுத்தத்திலிருக்கும் மருத்துவர்களைப் பற்றிய ஒரு மருத்துவரான என்னுடைய நேரடி ரிப்போர்ட் இது.

 ஜெயஸ்ரீ ஷர்மா
ஜெயஸ்ரீ ஷர்மா

மரணத்துக்கு நான் காரணமா?

டாக்டர் சௌமியா பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். அன்று இரவு பணிக்கு வர வேண்டிய மற்றொரு மருத்துவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் என உறுதியானதால் அவரால் பணிக்கு வர முடியவில்லை. அதனால் தன்னுடைய முறை இல்லாவிட்டாலும் சௌமியா பணிக்குச் சென்றார். பாதுகாப்பு கவசம் வழக்கமான வேகத்தில் பணி செய்யவிடாமல் தாமதப்படுத்தியது. இரவு நேரத்தில் ஒரே சமயத்தில் இரண்டு நோயாளிகளுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் மூச்சுவிட மட்டுமல்ல உயிர்பிழைக்கவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

யாருக்கு முதலில் உதவுவது? பணியில் இவர் மட்டுமே இருக்கிறார். ஒரு விநாடி யோசித்து இருவரில் வயது குறைவான, பிழைத்துவிடக் கூடும் என்ற 48 வயது நோயாளியைக் கவனிக்கத் தொடங்குகிறார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர் சிறிது பாதுகாப்பான நிலைக்கு வந்ததும் அடுத்த நோயாளியை நோக்கி ஓடினார் சௌமியா.

அடுத்தவர் 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் முதியவர். தன்னுடைய கடைசி நிமிடங்களில் இருந்தார். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பயனில்லை. படுக்கையிலேயே உயிரிழந்தார் அந்த முதியவர். அடுத்த நாள் காலை மருத்துவர் சௌமியாவின் மனது ஒரு நிலையில் இல்லை. ஒரே நேரத்தில் தன்னால் இருவரையும் கவனிக்க முடியாததால்தான் அந்தப் பெரியவர் இறக்கும்படி நேர்ந்ததோ எனக் குற்றவுணர்ச்சி அழுத்தத் தொடங்குகிறது. இரவு முழுவதும் கண் விழித்துப் பணி செய்த போதும் காலையில் வீட்டில் உறக்கம் துளியும் இல்லை. தீவிர மனஅழுத்தத்துக்கு ஆளானார். மனநல ஆலோசகரின் உதவியுடன் மீண்டு வருவதற்கு 15 நாள்கள் தேவைப்பட்டன ஒரு மருத்துவருக்கே. தற்போது மனமும் உடலும் தேறி மீண்டும் இப்போது கோவிட் பணிக்குச் சென்று வருகிறார்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

தொடர் மரணங்கள்!

முதலாம் ஆண்டு பட்ட மேற்படிப்பு மாணவியும் இளம் மருத்துவருமான ஷீலா அன்று அவசரப் பிரிவில் பணியிலிருந்தார். அன்று காலையிலிருந்து ரத்தத்தில் ஆக்ஸிஜன் மிகவும் குறைவான சிக்கலான நிலையில் வந்து, காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே நான்கைந்து பேர் இறந்தனர். மருத்துவக் கல்லூரியில் மாணவியாகச் சேர்ந்தது முதல் இத்தனை மரணங்களை ஒரே நாளில் பார்த்ததில்லை.

உயிரிழந்தவர்களின் சொந்த பந்தங்களுக்கு இறப்புக்கான காரணத்தை விளக்கி, மரணம் சம்பந்தப்பட்ட கோப்புகளை எழுதி எழுதி மனம்சோர்ந்துவிட்டார். அழுத்தம் தாங்க முடியாமல் தன்னுடைய பொறுப்பு மருத்துவரை கைப்பேசியில் விளிக்கிறார். தாங்க முடியாமல் அழுகிறார். அவருடைய சீனியர் மருத்துவர் ஆறுதல் கூறி மனநல ஆலோசகரின் ஆலோசனையைப் பெறும்படி செய்கிறார். அத்துடன் வேறு துறைக்கு பணி மாற்றியும் கொடுக்கப்பட்டது. தற்போது ஓரளவு மனம் தேறினாலும் இன்னும் மனப்பதற்றமும் மனச்சோர்வும் அவரை விட்டு முழுவதுமாக நீங்கவில்லை என்கிறார்.

மனதை இளக்கிய பிஞ்சுகளின் கதறல்!

சீனியர் மருத்துவரான டாக்டர் ராகுல் அன்று காலை பணிக்குச் செல்கிறார். அப்போது ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்படும் 40 வயது பெண்மணியையும் அவருடன் கூட இருக்கும் இரு குழந்தைகளையும் பார்க்கிறார். எல்லா வார்டுகளிலும் காலை ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்தபோது அந்தப் பெண்மணி இறந்துவிட்டார். அவரைச் சுற்றி நின்று குழந்தைகள் அழுது கொண்டிருக்கின்றனர். தன் குழந்தைகளின் வயதொத்த அந்தப் பிஞ்சுகளின் அழுகை அவர் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பெண்மணி முன்பே வந்திருந்தால் ஒருவேளை காப்பாற்றி இருக்கலாம் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் மனதில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. சில நாள்களாகத் தூங்க முடியாமலும் எதிலும் கவனத்தைச் செலுத்த முடியாமலும் அவதியுறுகிறார் டாக்டர் ராகுல். மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு சிறிது சிறிதாகத் தேறி மீண்டும் தன்னுடைய கடமைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

கொரோனா நோயாளிகள்
கொரோனா நோயாளிகள்

அலட்சியத்தைப் பார்த்ததும் ஆத்திரம்!

அன்று இரவுப் பணி டாக்டர் ராகேஷுக்கு மிகுந்த சவாலாக இருந்தது. ஒரு நிமிடம்கூட கண்ணை மூட முடியவில்லை. பல நோயாளிகள் இரவு முழுவதும் ஆக்ஸிஜன் குறைவால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதும் அதில் சிலர் இறந்துபோவதும், மருத்துவமனையில் பலருக்கு இடம் இல்லை என்று திருப்பி அனுப்புவதும் எனப் பரபரப்பான இரவாக மாறியிருந்தது.

பணி முடித்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தவரின் கார் சிக்னலில் நின்றது. அருகில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் முகக்கவசம்கூட அணியாமல் பேசி சிரித்தபடி நின்றிருந்தனர். தன்னுடைய வாகனத்திலிருந்து இறங்கிய ராகேஷ், அந்த மூன்று இளைஞர்களையும் சரமாரியாக திட்டத் தொடங்கிவிட்டார். மூவரும் சேர்ந்து ராகேஷை தாக்கத் தொடங்க அதற்குள் மற்ற பயணிகளும், சிக்னலில் நின்றிருந்த டிராஃபிக் காவலரும் வந்து அவர்களைப் பிரித்துவிட்டனர்.

முகக்கவசம் அணியாத மூவரையும் அங்கேயே நிற்க வைத்து அவர்களுக்கு அபராதமும் விதித்து முகக்கவசம் அணியச் செய்தனர் காவலர்கள். அதற்குப் பிறகுதான் ராகேஷ் மனது சமாதானப்பட்டது. எத்தனை பேர் இந்த நோயால் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள் துளிக்கூட கவலையோ பயமோ இல்லாமல் முகக்கவசம் அணியாமல் வருவதைப் பார்க்கும்போது என்னால் தாங்க முடியவில்லை என்று ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் டாக்டர் ராகேஷ். ஒருவார ஓய்வு, மனநல ஆலோசகரின் உதவியின் மூலம் பழைய நிலைக்குத் திரும்பினார்.

குடும்பம் பாதிக்கப்படுமா?

டாக்டர் ரம்யா கோவிட்-19 பாசிட்டிவ்வான கர்ப்பிணிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார். குழந்தை நல்லபடியாகப் பிறந்துவிட்டது. சிசேரியனில் அந்தப் பெண்ணுக்கு. கர்ப்பப்பை தேவையான அளவு சுருங்காமல் ரத்தப்போக்கு அதிகமாகிக்கொண்டேபோகிறது. அந்தப் பெண்ணுக்குத் தேவையான சிகிச்சையளித்தபடியே சில மணி நேரம் கடக்கிறது. டாக்டர் ரம்யா அணிந்திருந்த பாதுகாப்பு கவசமும் தலைக்கு அணியும் முகமூடியும் கண்ணாடியும் மிகுந்த எரிச்சல் ஊட்டுவதாகத் தோன்றின. தன்னுடைய தலைக் கவசத்தையும் கண்ணாடியையும் உதவியாளரைக் கழற்றச் சொல்கிறார்.

மீண்டும் சிகிச்சையைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாதுகாப்பான ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஆயிற்று. வீடு திரும்பியவருக்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. பாதுகாப்பு கவசங்களை எடுத்துவிட்டோமே நமக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற எண்ணம் குடைந்துகொண்டே இருந்தது. அடுத்த நாளிலிருந்து தொண்டைவலி, தலைவலி மூச்சடைப்பது போன்ற எண்ணங்கள் வந்துகொண்டே இருந்தன.

COVID-19 patient/ Representation Image
COVID-19 patient/ Representation Image
AP Photo / Jae C. Hong

தன்னால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று வந்துவிடுமோ என்ற பயம் அவர் நிம்மதியைக் குலைத்தது. ஆனால், அவர் பயந்தது போல் நோய்த்தொற்று பாதிக்கவில்லை. இருந்தாலும் வீட்டில் எல்லோரிடமும் விலகி தனி அறையில் தனக்குத்தானே ஒரு கூட்டுப் புழுவாக வாழ ஆரம்பித்தார். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் மறதி நோய்க்கு ஆளானார். 15 நாள்கள் ஓய்வும் சிகிச்சையும் அவரை மீட்டெடுத்தன.

இந்த ஐந்து சம்பவங்களும் வெறும் சாம்பிள் போலத்தான். தினம் பல மருத்துவர்களும் செவிலியர்களும் இதுபோன்ற பல சம்பவங்களால் தங்கள் மனநலத்தை இழக்கின்றனர். பலர் மனஅழுத்தத்தோடு தொடர்ந்து பணியாற்றிக்கொண்டே இருக்கின்றனர். கட்டுப்பாடுகளை மீறி, பாதுகாப்பு விஷயங்களை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருப்பவர்கள் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்! உங்களைப்போல மருத்துவர்களும் ரத்தமும் சதையுமான உயிர்கள்தாம். என்றாவது இயல்புநிலை திரும்பிவிடாதா என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கும் அழகான குடும்பம் ஒன்று வீட்டில் காத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு