Published:Updated:

``நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்?" - டாக்டர் ஷர்மிகா விளக்கம்

ஷர்மிகா
News
ஷர்மிகா

"என் அம்மா டெய்சி சரண் பாஜகவில் இருப்பதால்தான் என்னை விமர்சிக்கிறார்கள். மாட்டுக்கறி சாப்பிட்டால் எல்லா நோயும் வரும்னு சித்த மருத்துவம் சொல்லுது. என் அம்மா என்னை தைரியமாக ஹேண்டில் பண்ணச்சொன்னார்." - டாக்டர் ஷர்மிகா பேட்டி

``நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்?" - டாக்டர் ஷர்மிகா விளக்கம்

"என் அம்மா டெய்சி சரண் பாஜகவில் இருப்பதால்தான் என்னை விமர்சிக்கிறார்கள். மாட்டுக்கறி சாப்பிட்டால் எல்லா நோயும் வரும்னு சித்த மருத்துவம் சொல்லுது. என் அம்மா என்னை தைரியமாக ஹேண்டில் பண்ணச்சொன்னார்." - டாக்டர் ஷர்மிகா பேட்டி

Published:Updated:
ஷர்மிகா
News
ஷர்மிகா
“மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசிவரும் டாக்டர் ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன், 2022 டிசம்பர் 31ம் தேதி விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

செய்தி வெளியாவதற்கு முன்பே டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது அதுகுறித்து, பேச மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நம்மை தொடர்புகொண்டு பேசினார் டாக்டர் ஷர்மிகா.

“சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேரணும்ங்குற நல்ல நோக்கத்துலதான் தொடர்ந்து நான் விழிப்புணர்வூட்டிக்கிட்டு வர்றேன். ஆனா, நான் டாக்டரே இல்லை என்பதுபோல் பரப்பிவருகிறார்கள். நான், சென்னையிலுள்ள தனியார் சித்த மருத்துவக்கல்லூரியில்தான் பி.எஸ்.எம்.எஸ் எனப்படும் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படித்துள்ளேன். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்தா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன். எனது பதிவு எண் போட்டு யார் வேண்டுமானாலும் பரிசோதித்துக்கொள்ளலாம். நான், சித்த மருத்துவத்தில் என்ன படித்தேனோ அதைத்தான் யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் பேசிவருகிறேன்.

ஷர்மிகா சரண்
ஷர்மிகா சரண்
Sarpana B.

சித்த மருத்துவத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ‘நோயில்லா நெறி' என்ற புத்தகத்தில் 'மாட்டு இறைச்சியால் சகல நோயும் வரும்' என்று உள்ளது. எனது பாடத்தில் படித்ததைத்தான், நானும் கூறினேன். உடல் உழைப்பு உள்ளவர்கள் ஆட்டு இறைச்சியோ, மாட்டு இறைச்சியோ எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். பலரும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யுறோம். அதனாலதான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேன். அவர்களும் மாட்டுக்கறி குறித்துதான் கேள்வி கேட்டார்கள். இதுக்குப்போயி, என்னை பாஜகவோட தொடர்புபடுத்தி விமர்சிக்கிறாங்க. நான், ஒரு மருத்துவராத்தான் பேசுறேன். ஏன், என்னை பாஜக 4ட இணைச்சு பேசணும்?

ஷர்மிகா சரண்
ஷர்மிகா சரண்

“குலோப் ஜாமூன் ஒன்று சாப்பிட்டால் ஒரே நாளில் 3 கிலோ எடை கூடும் என்று சொல்லியிருக்கிறீர்களே? இது எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? தமிழக அரசு வழங்கிய சித்த மருத்துவ நூலில் உள்ளதா?”

“அப்படி சொன்னது ஒரு ஹியூமன் எரர்தான். சிறு தவறுதலா சொல்லிட்டேன். எல்லா டாக்டரும் இப்படி பேசுறதுதான். இதுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதேபோல, ஒருநாளைக்கு நாலு ஸ்பூன் நெய் சாப்பிடவேண்டும் என்று சொல்லியிருந்தேன். நாலு ஸ்பூன் நெய்யை உருக்கி சாப்பிட்டுட்டு சுடு தண்ணீர் குடிச்சுட்டு வாக்கிங் போனா கண்டிப்பா முகம் பொலிவாகிடும். இதை, டிப்ஸா சொல்றேன். நிறைய பேரு ஃபாலோ அப் பண்ணி எனக்கு ஃபோட்டோவும் அனுப்புறாங்க. இதுல தப்பே கிடையாது. நான் பி.எஸ்.எம்.எஸ் படிச்சிருக்கேன். எல்லா நோய்களுக்குமான அறிவும் உள்ளது. தினமும் புதுசு புதுசா நோய்கள் வருது. புதிய விஷயங்களை படிக்கிறோம். சித்த மருத்துவ புத்தகத்தில் இருப்பதை மட்டும்தான் சொல்லவேண்டும்னா நான் மருத்துவமே பார்க்கமுடியாது”.

“குப்புறப் படுத்தா பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் என்று வரும் என்று எந்த புத்தகத்தில் உள்ளது?”

“குப்புறப் படுத்தா மார்பகப் புற்றுநோய் வரும் என்று சித்த மருத்துவத்தில் நேரடியா சொல்லப்படல. ஆனால், அனைத்து உடல் உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் செல்லவேண்டும் என்பதால், நாம் அணியும் ஆடைகளை தளர்ந்து போடவேண்டும் என்றும் ஒருக்களித்துப் படுக்கவேண்டும் என்றும் 'நோயில்லா நெறி' புத்தகம் கூறுகிறது. மார்பக புற்றுநோய் வருவதற்கு 50 காரணங்கள் இருந்தால், அதில் இது ஒன்றும் இருக்கலாம். இதை இப்படித்தான் சொல்லமுடியும்".

ஷர்மிகா சரண்
ஷர்மிகா சரண்
Sarpana B.

“நுங்கு சாப்பிட்டால் பெண்களின் மார்பகம் பெரிதாகும்னு சொல்லியிருக்கீங்களே?”

“நுங்கு குளிர்ச்சியானது. குளிர்ச்சியான உணவு எடுத்தால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால் மார்பகம் பெரிதாகும். நிறைய பெண்கள், `மார்பகம் பெரிதாக இல்லையே என்ன செய்வது?' என்று கேட்கிறார்கள். மார்பகம் சிறிதாக இருப்பது ஒரு குறையே இல்லை. ஆனால், கேட்பவர்களுக்கு எப்படி சொல்லாமல் இருக்கமுடியும்? அப்படிப்பட்ட பெண்கள் பயன்படுத்திக்கொள்ளட்டுமே? இது சித்த மருத்துவத்தில் நேரடியாக இல்லை. சித்த மருத்துவ புத்தகத்தில் இருப்பது மட்டும்தான் சொல்லவேண்டும் என்றால் நாங்கள் என்னைக்கு முன்னேறுவது?”.

“தவறான மருத்துவக்குறிப்புகளை சொல்கிறீர்கள் என்று சோஷியல் மீடியாக்களில் உங்களை ட்ரோல் பன்றாங்களே எப்படி பார்க்குறீங்க?”

“என்னுடைய ஒரே நோக்கம் நல்ல விஷயங்களைப் பரப்புறதுதான். என் அம்மா டெய்சி பாஜகவில் இருப்பதால் வெறும் 10 சதவிகிதம் பேர் விமர்சனம் செய்றாங்க. 90 சதவிகிதம் பேர் என்னை பாராட்டுறாங்க. பாஜக அரசியலாலதான் எனக்கு கெட்டப்பேரு ஏற்படுத்துறாங்க. இல்லைன்னா வந்திருக்காது. என் அம்மா, பாஜகவுல இருக்கிறதால இனிமே கொஞ்சம் விழிப்புணர்வா இருக்கணும். கொஞ்சம் வெள்ளந்தியா பேசிட்டேன். இனிமேல் பொறுப்புணர்வோட தெளிவா பேசுவேன். என்னை எல்லோரும் பூமரு, உருட்டுன்னு விமர்சிக்கிறாங்க. இப்படியெல்லாம் பேசவேணாம். உங்களுடைய விமர்சனங்களை அன்பா வெளிப்படுத்துங்க, நான் கேட்டுக்கிறேன். ஆனா, இதையெல்லாம் எங்கம்மா டெய்சி சரண் ‘தைரியமா ஹேண்டில் பண்ணு’ அப்படின்னு சொன்னாங்க”.

டெய்சி சரண்
டெய்சி சரண்

“நீங்கள் சொல்வதற்கு மருத்துவ ரீதியாக எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. பிரபலப்படுத்திக்கொள்வதற்காக இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்" என்று உங்களை மருத்துவராக பணி செய்வதற்காக பதிவு செய்துள்ள, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் கூறியிருக்கிறாரே?”

“எனக்கு பிரபல படுத்திக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதேபோல், என்னுடைய பேட்டிகளை எல்லாம் பெய்டு புரமோஷன் என்று சோஷியல் மீடியாக்களில் பலர் சொல்கிறார்கள். நான், ஒரு ரூபாய் கூட கொடுத்து பேட்டி கொடுக்கல”.

“மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக பேசும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’னு இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் எச்சரித்திருக்கிறாரே?”

“இணை இயக்குனருக்கு என் மீது நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது. ஆனால், நம்ம சித்த மருத்துவத்திலிருந்து ஒரு பொண்ணு வளர்ந்து வர்றாங்கன்னு அவர் என்னிடமே சொல்லியிருக்கலாம். ஆனால், என்னுடைய கருத்துகளை புரிஞ்சுக்காம, அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னது எனக்கு வருத்தத்தைதான் ஏற்படுத்தியது”.