Published:Updated:

கொரோனா... பொதுக் கழிப்பிடங்களிலும் முகக்கவசம் அவசியமா?! மருத்துவர் டிப்ஸ்

கழிவறை
கழிவறை

கொரோனா: டாய்லெட் சீட் கவரைத் தொடவேண்டாம். கழிவறையை உபயோகித்த பின் மூடியை மூடிவிட்டு ஃப்ளஷ் செய்தால் நுண்ணுயிர்கள் வெளியில் வராது.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கில், தற்போது சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மெள்ள மெள்ள இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் மக்கள். கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்னர் நாம் வெளியில் எங்காவது சென்றால் அவசரத் தேவைக்கு பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவோம். தற்போதைய நிலை வேறு.

Coronavirus
Coronavirus

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நாம் அதிகப் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தொற்றுள்ள ஒருவர் இருமும்போதோ, தும்மும்போதோ அந்த நீர்த் திவலைகள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவுகிறது. நீர்த்திவலைகள் படிந்துள்ள இடங்களை நாம் தொடும்போதும் அந்தத் தொற்று நம் கைகளுக்கு வந்து பின்னர் நம் கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளைத் தொடும்போது, நமக்குள்ளும் தொற்று பரவுவதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது காற்றின் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

சாதாரணமாகவே கழிவறையில் உள்ள காற்று மூலம் மூச்சுப்பாதையை பாதிக்கும் இன்புளூயென்ஸா போன்ற வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது. உதாரணத்துக்கு அம்மைநோயுடன் ஒருவர் ஓர் அறைக்குள் வரும்போது அந்த அறையில் உள்ள காற்று இரண்டு மணி நேரத்திற்கு தொற்று ஏற்படுத்தும் வல்லமை உள்ளதாக இருக்கும்.

தொற்றுநோய் மருத்துவர் சித்ரா
தொற்றுநோய் மருத்துவர் சித்ரா

கழிவறையைப் பயன்படுத்திவிட்டு ஒருவர் ஃப்ளஷ் செய்யும்போது பல நுண்ணுயிர்கள் வெளியேறுகின்றன. ஒவ்வொருமுறை ஃப்ளஷ் செய்யும்போதும் அந்த நுண்ணுயிர்கள் காற்றில் ஒரு நிமிடம்வரை இருக்கின்றன. இந்த கொரோனா வைரஸ் காலத்தில் பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துவதை எல்லோராலும் முற்றிலும் தவிர்க்க முடியாது. இயற்கை உபாதைகளை அடக்குவது ஆரோக்கியக் கேடு. அதே நேரத்தில் பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பான சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* பல கழிவறைகள் இருக்கும் கழிவறைப் பகுதியை உபயோகியுங்கள். காரணம் அங்கே காற்றோட்டம் அதிகமாக இருக்கும்.

* ஒரே ஒரு கழிவறைதான் இருக்கும்பட்சத்தில், முன்னர் யாரோ ஒருவர் கழிவறையை உபயோகித்திருந்தால், அவர் கழிவறையை விட்டுச் சென்ற ஒரு நிமிடம் கழித்து உள்ளே செல்லவும். காரணம் அவர்கள் ஃப்ளஷ் செய்தபிறகு ஒரு நிமிடம்வரை அங்கு நுண்ணுயிர்கள் இருக்கும் என்பதால் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

* டாய்லெட் சீட் கவரைத் தொடவேண்டாம். கழிவறையை உபயோகித்த பின் மூடியை மூடிவிட்டு ஃப்ளஷ் செய்தால் நுண்ணுயிர்கள் வெளியில் வராது.

கழிவறை
கழிவறை

* மாதவிடாய் நேரத்தில் நாப்கின்களை டிஸ்போஸ் செய்யும் குப்பைத் தொட்டி, மூடியுடன் இருந்தால், அதை வெறும் கைகளால் திறக்காமல் டிஷ்யூ அல்லது டாய்லெட் பேப்பரால் திறக்கவும்.

* கழிவறையின் கதவுகளைத் திறந்து வெளியில் வந்தவுடன் சானிட்டைஸரால் கைகளைச் சுத்தப்படுத்துங்கள்.

பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய மேலும் சில விஷயங்களை வலியுறுத்துகிறார் தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா.

கொரோனா காலம்... எந்தெந்த உடல்நல சிக்கல்களுக்கு மருத்துவமனை செல்லலாம்? ஒரு வழிகாட்டல்!

பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தும்போது, முகக் கவசம் மிக அவசியம். கழிவறை காற்றோட்டமாக உள்ளதா என்று உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் உபயோகிக்கும் முன்னர் ஒருமுறை ஃப்ளஷ் செய்ய வேண்டும்.

வெஸ்டர்ன் டாய்லெட்டைவிட இந்தியக் கழிவறைகளை உபயோகிப்பதே சிறந்தது என்பேன். ஆனால் தற்போது பல இடங்களிலும் மேற்கத்தியக் கழிவறைகளே இருப்பதால் அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொதுக் கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லாத பட்சத்தில் பணியாளர்களை அழைத்துச் சுத்தப்படுத்தச் சொல்ல வேண்டும். அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல், கனிவாகக் கூறவேண்டும்.

பப்ளிக் டாய்லெட்
பப்ளிக் டாய்லெட்

கழிவறையை உபயோகித்த பின்னர் சுத்தமான நீரால் சோப்பு உபயோகித்து கைகளைக் கழுவ வேண்டும்.

கைகளுக்கு சோப்பு போடும்போது அந்தக் குழாய்க்கும் சோப்பு போட்டு சுத்தப்படுத்த வேண்டும் பின்னர் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

நாம் உபயோகித்த பின்னர் அடுத்தவர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக கழிவறை சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியதும் அவசியம்.

விமானங்களில் பயணம் செய்யும்போதும் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது இதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

கழிவறை சுகாதாரம் என்பது இந்த கொரோனா காலத்துக்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் அவசியமானதே!

அடுத்த கட்டுரைக்கு