Published:Updated:

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் தலைவலி... மாத்திரை எடுத்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

தலைவலி

கர்ப்பகாலத்தில் தலைவலி என்பது பரவலாக பலரும் சொல்கிற பிரச்னைதான். கிட்டத்தட்ட 30 சதவிகிதப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தலைவலி வருகிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலிக்குப் பல காரணங்கள் உள்ளன.

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் தலைவலி... மாத்திரை எடுத்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

கர்ப்பகாலத்தில் தலைவலி என்பது பரவலாக பலரும் சொல்கிற பிரச்னைதான். கிட்டத்தட்ட 30 சதவிகிதப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தலைவலி வருகிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலிக்குப் பல காரணங்கள் உள்ளன.

Published:Updated:
தலைவலி

Doctor Vikatan: என் தங்கையின் வயது 25. ஆறு மாத கர்ப்பிணி. அவளுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது. கடுமையான வலியால் துடிக்கிறாள். பெயின் கில்லர் போட்டால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என பயப்படுகிறாள். கர்ப்ப காலத்தில் இப்படி தலைவலி வருவது இயல்பானதா? மாத்திரை போடலாமா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி...

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

கர்ப்பகாலத்தில் தலைவலி என்பது பரவலாக பலரும் சொல்கிற பிரச்னைதான். கிட்டத்தட்ட 30 சதவிகிதப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தலைவலி வருகிறது. பிரசவத்துக்குப் பிறகும் சில பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் இருந்தது போன்ற தலைவலி தொடர்கிறது.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். முதல் ட்ரைமெஸ்ட்டரில், அதாவது கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் வரும் தலைவலிக்கான காரணங்கள் முற்றிலும் வேறாக இருக்கலாம். அதற்கடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்ட்டரில் ஏற்படும் தலைவலிக்கான காரணங்கள் வேறாக இருக்கலாம்.

தலைவலியை பிரைமரி, செகண்டரி என இரண்டாகப் பிரிக்கலாம். பிரைமரி என்பது எந்தக் காரணமும் இன்றி தானாகவே வருவது. உதாரணத்துக்கு மைக்ரேன் தலைவலி, டென்ஷனால் ஏற்படும் தலைவலி, கொத்துத் தலைவலி போன்றவை கர்ப்பகாலத்தில் வரலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே ஒரு பெண்ணுக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருந்தால், கர்ப்பம் தரித்த பிறகு அது குறித்து மருத்துவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். 26 சதவிகித கர்ப்பிணிகளுக்கு டென்ஷன் காரணமாகவே தலைவலி வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஒரு சிலருக்கு மைக்ரேன் தலைவலியானது, கர்ப்பமான பிறகு குறையவும் தொடங்கும்.

அடுத்தது செகண்டரி தலைவலி. கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஏதோ ஒரு சிக்கல், அதன் தொடர்ச்சியாக வரும் தலைவலி இந்த ரகம். கர்ப்பிணிக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதனால் தலைவலி வரலாம். இதை `ப்ரீஎக்ளாம்சியா' என்று சொல்வோம். இது சற்று ஆபத்தானது என்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சிலருக்கு தலைவலி மிதமாக இருக்கலாம், சிலருக்குத் தீவிரமாக இருக்கலாம். மைக்ரேன் பிரச்னை இருப்பவர்களுக்கு அந்தத் தலைவலி வருவதற்கு முன் கண்களை மறைப்பதுபோல தோன்றும். கண்களில் லைட் ஃபிளாஷ் அடிப்பது போலத் தெரியலாம்.

Headache
Headache

முதல் ட்ரைமெஸ்ட்டரில் ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி வரலாம். புரொஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால் வலி வரலாம். உடல் எடையில் ஏற்றம் இருப்பதாலும் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பதாலும்கூட தலைவலி வரலாம். சரியாகச் சாப்பிடாதது, தூக்கமின்மை, உடலியக்கம் இல்லாதது போன்றவையும் காரணமாகலாம். சீஸ் போன்ற பால் பொருள்கள் சாப்பிடும்போது வலி அதிகரிக்கும் என்பதால், தலைவலி இருப்போர் இந்த உணவுகளைத் தவிர்த்து ஓய்வெடுப்பதன் மூலம் வலியிலிருந்து தப்பிக்கலாம்.

இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரிலும் சரியாகச் சாப்பிடாதது, ஓய்வில்லாதது, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் தலைவலி வரலாம். 6 முதல் 8 சதவிகிதம் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் உயர் ரத்த அழுத்தம் பாதிக்கிறது. கர்ப்பகால உயர் ரத்த அழுத்தத்தை அலட்சியம் செய்தால் ப்ரீஎக்ளாம்சியா எனப்படும் வலிப்பு பாதிப்பு வரலாம். இதனால் குறைமாதப் பிரசவம், நஞ்சு பிரிவது, குழந்தைக்கு ரத்த ஓட்டம் செல்லாதது என பல பிரச்னைகள் வரலாம்.

இவை தவிர சைனஸ் பிரச்னை, மூளையில் உள்ள ரத்தக் கட்டி, இதய பாதிப்புகள், மூளையில் ஏற்படும் தொற்றுநோய் போன்றவற்றாலும் தலைவலி வரலாம். எனவே, கர்ப்பகாலத்தில் தலைவலி வந்தால், முதலில் அதற்கான காரணத்தை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். செகண்டரி தலைவலிக்கான காரணங்களில் ஏதேனும் இருப்பது தெரிந்தால் அதற்கான சிகிச்சை எடுக்கப்பட வேண்டும்.

கர்ப்பத்துக்கு முன்பும் தலைவலி பாதிப்பு இருந்து, அது கர்ப்பத்திலும் தொடர்கிறது என்ற நிலையில், பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தலைவலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது, ஓய்வு, மசாஜ் போன்றவை உதவும்.

தலைவலி
தலைவலி

தலைவலியுடன் காய்ச்சலோ, வாந்தி, மயக்கமோ இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பார்வை மங்குதல், வலி தீவிரமாவது, வலி அதிகரித்து மயக்கம் வருவது, நீண்ட நேரம் வலி, அடிக்கடி வலி போன்ற நிலைகளில் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் உங்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவுகளைப் பரிசோதிப்பதுடன், கண்களையும் டெஸ்ட் செய்வார். தேவைப்பட்டால் ஸ்கேன் எடுத்தும் பிரச்னைக்கான காரணத்தை உறுதிசெய்வார்.

பாராசிட்டமாலை தவிர வேறு மருந்துகள் எடுக்க வேண்டாம். மருத்துவரின் அறிவுரையின்றி நீங்களாகவே மருந்துக் கடைகளில் தலைவலி என்று சொல்லி மாத்திரை வாங்கிச் சாப்பிட வேண்டாம். ஏனெனில், அப்படி நீங்கள் எடுக்கும் மருந்துகளில் சில வயிற்றிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.