தொழில்நுட்பம் பல வழிகளில் நம் வாழ்க்கையை எளிதாகவும் வசதியாகவும் மாற்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வசதிகளின் அதிகப்படியான உபயோகத்தால் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம். இயர்போனை மாட்டிக்கொண்டு நடப்பது, வாகனம் ஓட்டுவது, இரவில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவது போன்றவை ஃபேஷனாகவும் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் மாறிவிட்டன.
100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் அதிக சத்தத்துடன் இயர்போன் உபயோகிப்பதால் காதுகேளாமைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO). குறிப்பாக, 35 வயதுக்குக் கீழ் உள்ள இளைஞர்கள் இயர்போன்களை அதிகமாக உபயோகிக்கிறார்கள். அதில் 50% பேர் அதிக சத்தத்தில் அதைப் பயன்படுத்துகின்றனர். 40% பேர் கிளப்புகள் மற்றும் பார்களில் அதிக ஒலி அளவுகளுக்கு வெளிப்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு காது கேட்பதில் குறைபாடோ, நிரந்தரமாகக் காதுகேட்காமல் போகும் அபாயமோ ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒரு விழிப்புணர்வுப் பதிவை வெளியிட்டிருந்தது. அதில் முக்கியமானவை...

காதுகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நடு காது என்பது காது திரையின் உள்ளேயிருக்கும் வெற்றிடத்தைக் குறிக்கும். அதில் மூன்று சிறிய எலும்புகள் இருக்கும். அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கும். உள்காதில் நத்தை வடிவில் `காக்லியர்’ (Cochlear) என்ற உறுப்பு இருக்கும். அதில் சிறு சிறு நரம்புகள் இருக்கும். அந்தச் சிறிய நரம்புகள் இணைந்து, பெரிய நரம்பாகி, மூளையைச் சென்றடையும். ஒலியைக் காது மடல் உள்வாங்கி, துவாரத்தின் வழியாக உள்ளே அனுப்பி காதின் திரையிலுள்ள எலும்புகளில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வு உள்காதுக்குள் சென்று, அங்குள்ள திரவத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் அங்குள்ள நரம்புகளில் பிரதிபலிக்கும். இதையடுத்து அங்கு சிறிதாக ஒரு மின்னோட்டம் ஏற்பட்டு, ஒலியாக மாற்றமடைந்து மூளையைச் சென்றடையும்.
இயர்போன் மூலம் அதிக சத்தத்துடன், நீண்ட நேரம் பாட்டு கேட்கும்போது அந்த அதிர்வு தொடர்ந்து சிறு நரம்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அந்த நரம்பு செல்கள் உணரும் திறனை இழக்கும். இயர்போன் காதில் உள்ள மெழுகை காதின் உட்பகுதிக்கு தள்ளுவதால் காதில் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. நம் உடலில் எங்காவது காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் மீண்டும் செல்கள் உயிர்பெற்று அந்த இடம் சரியாகி விடும், ஆனால், அதிக சத்தத்தால் காதின் உள்பகுதியில் உள்ள நரம்புச் செல்கள் இறந்துவிட்டால் அவை மீண்டும் உருவாவதில்லை. எனவே, நிரந்தரமாகக் காதுகேளாமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபாதிப்பை எப்படிக் குறைப்பது?
சத்தங்கள் டெசிபல் அளவில் அளக்கப்படுகின்றன. 60 டெசிபல்களுக்கு குறைவாகக் கேட்டால் காது பாதிப்பு அடைவதிலிருந்து பாதுகாக்கப்படும். ஆனால், 85 டெசிபலுக்கு மேல் சத்தங்களை மீண்டும் மீண்டும் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். எனவே, 50 டெசிபலுக்கு குறைவாகவும், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக இயர்போன் பயன்படுத்துவதும் பாதுகாப்பானது. இயர்போன்களுக்கு பதில் ஹெட்போன்களைப் பயன்படுத்தலாம். ஹெட்போனை காதுகளுக்குமேல் வைத்துக் கேட்பதால் அதிலிருந்து வெளியாகும் சத்தம் செவிப்பறையில் நேரடியாகப் பாதிப்பை உண்டாக்காது

இடைவெளி கொடுங்கள்!
ஹெட்போனோ, இயர்போனோ... தொடர்ந்து கேட்காமல் இடைவெளிவிட்டு கேட்டால் நல்லது. அரை மணி நேரம் கேட்டால் 5 நிமிட ஓய்வும், ஒரு மணி நேரம் கேட்டால் 10 நிமிட ஓய்வும் கொடுத்தால் நல்லது. இயர்போனை மற்றவர்களுடன் கண்டிப்பாகப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். காதில் தொற்று ஏற்படாமல் இருக்க தினமும் இயர்போனை சுத்தம் செய்ய வேண்டும். கேட்பதைப் பாதுகாப்பானதாக மாற்றினால் செவித்திறன் இழப்பைத் தடுக்கலாம்.
இயர்போன் பயன்பாடு காதுகளைப் பாதிப்பது குறித்து சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுபாஷினி பார்த்திபனிடம் கேட்டோம்:
``உலகம் முழுவதும் உள்ள 12 வயது முதல் 35 வயது நபர்கள் இயர்போன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவதால் உலக சுகாதார நிறுவனம் இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. முன்பு தொழிற்துறைகளில் வேலை செய்பவர்களுக்கு அதிக சத்தம் கேட்பதால் காதுகளில் பாதிப்பு ஏற்படும். இப்போது வாழ்க்கைமுறை முழுவதும் மாறிவிட்டதாலும், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதாலும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக இயர்போன் பயன்படுத்துகிறார்கள். இதனால் வரும் பின்விளைவுகள் அதிகம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
செவித்திறன் இழப்புக்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமானது அதிகமாக சத்தம் கேட்பதுதான். சத்தம் வெளிப்படும் அளவு, நாம் கேட்கும் நேரம் இவற்றைப் பொறுத்துதான் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 85 டெசிபல்தான் கேட்க வேண்டும். இதுதான் அதிகபட்ச வரையறை. 100 டெசிபல் அளவில் கேட்கும்போது அதற்கான நேரத்தைக் குறைத்துக்கொள்ளலாம். பார், கிளப்புகளில் அதிக சத்தத்துக்கு வெளிப்பட நேர்ந்தால் இயர்ப்ளக்ஸ் பயன்படுத்தலாம். இது 5 முதல் 45 டெசிபல் வரை சத்தத்தின் அளவைக் குறைத்துவிடும்.

தற்போது, ஆன்லைன் வகுப்புகளுக்காகச் சிறிய குழந்தைகளும் ஸ்மார்ட்போன், இயர்போன் பயன்படுத்துவதால் தலைவலி, காதுவலி போன்ற பாதிப்புகள் வருகின்றன. குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்கும் வேளைகளில் தொலைக்காட்சி மற்றும் அதிக தொந்தரவு விளைவிக்கும் இடையூறுகளை அப்புறப்படுத்திவிட்டு அவர்களுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். அப்போது இயர்போன் இல்லாமல் குறைந்த சத்தத்துடன் அவர்களால் வகுப்பைக் கவனிக்க முடியும்.
காதுகளைச் சுத்தம் செய்யத் தேவையே இல்லை. காது தன்னைத் தானே சுத்தம் செய்யும் திறன் பெற்றது. ஒருவேளை காதில் தெரியும்படி அழுக்குகள் இருந்தால் அதை ஒரு காட்டன் துணி வைத்து வெளியில் தள்ளிவிடலாம். பட்ஸ் பயன்படுத்தக் கூடாது. கேட்கும் திறனை இழந்துவிட்டால் அது வயதுக்கு ஏற்றாற்போல் பாதிப்புகளை ஏற்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாது. அவர்களின் நடத்தையில் (behavioural issues) பாதிப்பு வரலாம்.

பெரியவர்களுக்கு அவர்களின் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். மனஅழுத்தம், பதற்றம் போன்றவை வர நேரிடலாம். நடைப்பயிற்சி, சைக்கிளிங், வாகனம் ஓட்டுதல் போன்ற சமயங்களில் இயர்போன் பயன்படுத்துவதால் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாது. இதனால் விபத்துகளும் ஏற்படலாம். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் `பிளே சேஃப்' ஆப்ஷன் இருக்கிறது. அதைப் பயன்படுத்தியும் சரியான சத்தத்தில் கேட்கிறோமா என்று பார்க்கலாம். செவித்திறன் இழப்பு தடுக்கக்கூடிய ஒன்றுதான். அதனால் முன்னெச்சரிக்கை அவசியம். ஒருமுறை திறனை இழந்துவிட்டால் அதை மீட்க முடியாது" என்கிறார் மருத்துவர் சுபாஷினி பார்த்திபன்.
- கே.ஜெயராமன், ரேகா ஸ்ரீ ஜே.பி