Election bannerElection banner
Published:Updated:

`லாக்டௌன் நாள்களில் தலைவலி...என்ன காரணம்?' - நரம்பியல் மருத்துவர் சொல்லும் யோசனை

தலைவலி
தலைவலி

அதிக நேரம் செல்பேசியிலும் தொலைக்காட்சியிலும் பொழுதைக் கழிப்பதால், குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தலைவலி உண்டாகிறது. கண்களில் பிரச்னை இருந்தலும் குழந்தைகளுக்குத் தலைவலி ஏற்படும்.

வார இறுதியைக் குடும்பத்துடன் கழிக்கலாம் என்று எண்ணிய நாள்கள் மாறிவிட்டன. இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்ற ஏக்கமும் எதிர்பார்ப்புமே எல்லோரிடமும் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

60 நாள்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று நம்மை ஊரடங்குக்குள் கட்டிப்போட்டுள்ளது. வெயிலில் செல்வதில்லை, வெளியுலக டென்ஷனும் இல்லை. ஆனாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழலில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைவலியால் பாதிக்கப்படுவதை கேள்விப்படுகிறோம். இதுகுறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.பாலமுருகனிடம் பேசினோம்.

 நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் எம். பாலமுருகன்
நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் எம். பாலமுருகன்

" ஊரடங்கின் காரணமாக நம் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. உண்ணுதல், உறங்குதல், தொலைக்காட்சி, செல்பேசி என்று இருப்பதால், உடல் உழைப்பு குறைந்து தலைவலி ஏற்படுகிறது. வீட்டுக்குள் இருப்பதால் காற்றோட்டம் குறைவதாலும் தலைவலி வருகிறது.

வேலைகளில் கவனச்சிதறல் ஏற்படுகிறதா? - இந்த 10 நிமிட விதிமுறையைப் பின்பற்றுங்கள்!

வீட்டிலிருந்து அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு, மனஅழுத்தம் அதிகம். அலுவலகம் சென்று வேலை செய்வதைவிட, வீட்டில் இருந்து வேலை செய்வோரின் பணிச்சுமை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அலுவலகத்திற்குப் பயணம் செய்யும் நேரம், தற்போது வேலைநேரமாக மாறியிருப்பதால், வேலைப்பளு கூடி மனஅழுத்தம் அதிகமாகி தலைவலி உண்டாகிறது.

வீட்டு வேலை, அலுவலக வேலை என இரண்டுக்கும் இடையில் தங்களுக்கென நேரம் செலவழிக்க இயலாமல் போவதும் தலைவலிக்குக் காரணம். இன்னொரு பக்கம், வேலை எதுவும் இல்லாமல் பொழுதைக் கழிப்பது, உறவுகளில் விரிசல் ஆகியவற்றாலும் தலைவலி உண்டாகிறது.

Stress
Stress

அதிக நேரம் செல்பேசியிலும், தொலைக்காட்சியிலும் பொழுதைக் கழிப்பதால், குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தலைவலி உண்டாகிறது. கண்களில் பிரச்னை இருந்தாலும் குழந்தைகளுக்குத் தலைவலி ஏற்படும்.

வயதானவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்தால் தலைவலி வரும். ரத்த அழுத்தத்துக்கான வழக்கமான மருந்துகளைத் தவறாமல் எடுத்துவந்தாலே இந்தத் தலைவலியைத் தவிர்க்கலாம். சிலருக்கு, இந்த ஊரடங்கின் காரணமாக மருந்து வாங்க முடியாமல் ரத்த அழுத்தம் அதிகமாகி, தலைவலியால் அவதிப்படும் நிலையும் உள்ளது.

எந்நேரமும் படுத்துக்கொண்டே இருப்பது, படுத்துக்கொண்டே செல்பேசியைப் பார்ப்பது, விளையாடுவது ஆகியனவும் தலைவலியை உண்டாக்கும்.

Sleeping
Sleeping
Image Credit: Freepik

இரவு விரைவாகத் தூங்கி, காலை சீக்கிரம் எழுவது, வேலைக்குச் சென்றால் எப்படி இருப்போமோ அதே சுறுசுறுப்புடன் செயல்படுவது, உடற்பயிற்சி செய்தல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதல் என்று வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். டி.வி மற்றும் செல்பேசியோடு செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்றினால், தலைவலியைத் தவிர்க்கலாம்'' என்கிறார், மருத்துவர் பாலமுருகன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு