Published:Updated:

செரிமானம் முதல் சருமப் பொலிவு வரை... வெறும் வெந்நீர்ல இவ்ளோ விஷயம் இருக்கு!

Hot water
Hot water

நம் உடலில் வைரஸால் ஏற்படும் நச்சுத்தன்மை உள்ள கழிவுகளை வெளியேற்ற (Detoxification) வெந்நீர் அருந்துவது பெரிதும் உதவுகிறது.

கொரோனா காலத்தைத் தொடர்ந்து இப்போது மழைக்காலமும் தொடங்கிவிட்டதால் நம் உடலுக்கு இன்னும் கொஞ்சம் `எக்ஸ்ட்ரா கேர்' அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உடல்நலத்தை பாதுகாக்கும் எளிமையான விஷயங்களில் ஒன்று, வெந்நீர் அருந்துவது. அதுவும் நோய்க்கிருமிகள் பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் வெந்நீர் அருந்த வேண்டியதை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுள் முதன்மையானதாகப் பரிந்துரை செய்கிறார்கள் மருத்துவர்கள்.

Corona
Corona

சளி, காய்ச்சல் என்றாலோ, உடல் எடையை குறைக்கவோதான் நம்மில் பெரும்பாலானோர் வெந்நீர் அருந்துகிறோம். ஆனால் மழை, வெயில், பனி என எக்காலத்திற்கும் ஏற்றது வெந்நீர். இது நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாப்பதில் தொடங்கி உணவு செரிமானம், சீரான ரத்த ஓட்டம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைவரை நமக்குப் பல உடல்நலப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தருகிறது. அதனால் தினமும் வெந்நீர் அருந்தினால் நம் ஆரோக்கியத்தில் குறிப்பிடத் தகுந்த நல்ல மாற்றங்களைக் காண முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வெந்நீர் அருந்துவது ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்துவதில் எத்தகைய பங்கு வகிக்கின்றது என்பது குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் இயற்கை மருத்துவர் தீபா.

இயற்கை மருத்துவர் தீபா
இயற்கை மருத்துவர் தீபா

``வளர்சிதை மாற்றங்களில் தண்ணீர் முக்கிய இடம் வகிப்பதால் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். இதில் மூன்று லிட்டர் தண்ணீராகவும், மீதமுள்ள அரை லிட்டரை பழங்கள் அல்லது நீர் சார்ந்த உணவுப் பொருள்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் நாள் முழுக்கத் தண்ணீர் அருந்தாமலோ, குறைந்த அளவில் மட்டும் தண்ணீர் எடுத்துக்கொண்டாலோ அவருக்குக் கண்ணெரிச்சல், தலைவலி, தொண்டை வறட்சியில் தொடங்கி உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration) மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசமான கட்டத்திற்குச் செல்வதுவரைகூட ஏற்படலாம்.

அதனால் தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீரை மறக்காமல், மறுக்காமல் குடிக்க வேண்டியது கட்டாயம். இதனை குளிர்ந்த நீராக எடுத்துக்கொள்வதைவிட, வெந்நீராக எடுத்துக்கொள்வது சிறந்தது. ஏனெனில் வெந்நீர் ஓர் உணவுப் பொருளாக இருப்பதைக் காட்டிலும் சிறந்த மருந்துப் பொருளாக இருக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது. இதனை இயற்கை மருத்துவத்தில் `உஷா பானம்' என்பார்கள்.

Hot water
Hot water

காலை நேரத்தில் 5-7 மணியளவில் நம் பெருங்குடல் முழு இயக்கத்தில் இருக்கும். இந்த நேரத்தில் வெந்நீர் எடுத்துக்கொண்டால் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படவே செய்யாது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருள்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு ஏற்படும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருள்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலையில் குடிக்கும் வெந்நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் சில துளிகள் தேனோ அல்லது சிறிதளவு சர்க்கரையோ கலந்து அருந்தினால் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்-சியும், இரும்புச்சத்தும் கிடைக்கும். இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்புத்திறனும் மேம்படும்.

நம் தொண்டை அல்லது உணவுக் குழலில் ஏதேனும் நோய்க் கிருமிகள் இருந்தால் அவற்றால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தன்மை வெந்நீர் அருந்துவதால் ஓரளவு குறைகிறது.

வெந்நீர் அருந்துவதால் உணவுக்குழல், குடல்பகுதி விரிவடைந்து, நாம் உண்ணும் உணவுப் பொருள் எந்தவித சிக்கலும் இன்றி சுமுகமாக உள் செல்கிறது.

hot water with lemon
hot water with lemon

வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது. போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.

நன்றாகக் கொதிக்கவைக்கப்பட்ட வெந்நீரை அப்படியே சுடச்சுடக் குடிக்காமல், ஆறவைத்துக் குடிக்கும் பதத்திற்கு வந்த பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். கொதிக்கக் கொதிக்க இருக்கும் வெந்நீரை ஆற வைப்பதற்காக அதனுடன் கொதிக்கவைக்கப்படாத குளிர்ந்த நீரைச் சேர்க்கக் கூடாது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெந்நீர் அருந்தலாம். அதுவும் இந்த கோவிட் நேரத்தில் குளிர்ந்த நீரை அருந்துவதைக் காட்டிலும் வெந்நீர் அருந்துவது ஆரோக்கியமானது அதே நேரத்தில் பாதுகாப்பானதும்கூட" என்கிறார் இயற்கை மருத்துவர் தீபா.

கொரோனா: உடலில் ஆன்டிபாடி உருவானாலும் `மறுதொற்று' ஏற்படலாம்... அலெர்ட்!

வெந்நீர் அருந்துவதன் அவசியம் குறித்து நம்மிடம் பேசிய பொது மருத்துவர் சுந்தர ராமன்,

``இது மழைக்காலத்தின் தொடக்கம். பல்வேறு வைரஸ் காய்ச்சல்களின் தொடக்கக் காலம் என்றும் வைத்துக்கொள்ளலாம். கொரோனாவிலேயே அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நாம், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்களையும் மறந்துவிடக் கூடாது.

பொது மருத்துவர் சுந்தர ராமன்
பொது மருத்துவர் சுந்தர ராமன்

சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தக் கூடிய அடினோ வைரஸ், ரைனோ வைரஸ் போன்ற பல்வேறுபட்ட நோய்க்கிருமிகளிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்வதற்கான எளிய வழிமுறைகளில் ஒன்று வெந்நீர் அருந்துவது.

பெரும்பாலான நோய்க்கிருமிகள் நம் தொண்டையின் வழியாகவே உடலுக்குள் செல்கிறது. வெந்நீர் அருந்துவதன் மூலம், அல்லது உப்பு கலந்த வெந்நீரைக் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் அந்த நோய்க்கிருமிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

மேலும் நம் உடலில் வைரஸால் ஏற்படும் நச்சுத்தன்மை உள்ள கழிவுகளை வெளியேற்ற (Detoxification) வெந்நீர் அருந்துவது பெரிதும் உதவுகிறது" என்றார்.

எளிமையான `வெந்நீர் மருந்தால்' பெறக்கூடிய ஆரோக்கிய பலன்களை இனி தவறாமல் பெறுவோம்!

அடுத்த கட்டுரைக்கு