நம் முன்னோர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு இயற்கையான பல முறைகளைப் பின்பற்றினார்கள். மலச்சிக்கல் ஏற்பட்டால் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் போன்ற வீட்டில் உள்ள எளிய பொருள்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
தற்போது விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட பிறகும் மலச்சிக்கலுக்கு மட்டுமன்றி பல நோய்களுக்கும் தீர்வாக இயற்கை முறையில் எனிமா பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த சிகிச்சையை வீட்டிலேயே செய்துகொள்ளலாம் என்பது போன்று சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவ, அது குறித்து தெளிவுபடுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவரும் பேராசிரியருமான எஸ்.டி.வெங்கடேஷ்வரன்.

``ஒரு மனிதன் காலை எழுந்தவுடன் தானாகவே மலம் கழித்துவிட வேண்டும். இதுதான் மனிதனின் ஆரோக்கியத்துக்கு முதல்படி. மலச்சிக்கல்தான் பல நோய்களுக்கும் காரணமாக அமைகிறது. ஒரு மனிதனுக்கு கழிவுகள் (மலம்) வெளியேறாமல் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். வயிற்றுப்பகுதியில் வாயு, செரிமானமின்மை, பசியின்மை போன்ற உபாதைகள் வரலாம். வயிற்றுப்பகுதி நிரம்பி இருத்தல், வாயில் எச்சில் சுரந்துகொண்டே இருத்தல், நாக்கில் கசப்புதன்மை போன்ற பாதிப்புகளை உணர்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமலக்குடல் சரியில்லாத நேரங்களில் தலைவலி ஏற்படலாம். தலைவலிக்கான மருந்தை எடுத்துக்கொண்டாலும் இது சரி ஆகாது. இதற்குக் காரணம் மலச்சிக்கல்தான். அசுத்தம் நம் உடலில் அதிகமாகச் சேரும்போது கிருமிகளின் இனப்பெருக்கம் அதிகமாகும். இதனால் புதுப்புது நோய்களும் வரலாம். இந்தப் பாதிப்புகளையெல்லாம் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் மூலநோய் ஏற்பட்டுவிடும். பிறகு, ஆசனவாய் அருகே புண் வரலாம். அது நீண்ட நாள்கள் இருக்கும்போது மலக்குடல் புற்றுநோயாக மாறலாம். மலக்குடல் புற்றுநோய்க்கு காரணம் மலச்சிக்கல்தான் என்பதை இன்றைய நவீன மருத்துவம் அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறது.

கழிவுகளை (மலம்) வெளியேற்றுவதற்காக சிலர் பேதி மாத்திரை போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். இவை பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. செயற்கை ரசாயனம் (கெமிக்கல்) கலந்த மருந்துகளை உட்கொள்வதால் குடலில் அரிப்புத்தன்மையைத் தூண்டிவிடும். எனிமா என்பது நீர்சிகிச்சை முறையில் வரும் முக்கியமான பிரிவு. இது மலக்குடலை சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இந்தச் சிகிச்சையைச் செய்வதற்கு எனிமா கிட் அல்லது எனிமா கேன் பயன்படுத்துவார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த முறையில் சுத்தமான வெதுவெதுப்பான நீர் மலக்குடலில் செலுத்தப்படும். ஐந்து நிமிட இடைவெளியில் மலக்குடலில் உள்ள அனைத்துக் கழிவுகளும் தானாகவே வெளியேறிவிடும். வேப்பிலை, துளசி, கஷாயம் போன்று இதுவும் ஓர் இயற்கை சிகிச்சை முறைதான். இந்த முறையில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. இதன் மூலம் செலுத்தப்படும் தண்ணீர் சிறுகுடலில் செல்லாமல் மலக்குடலை மட்டும் சுத்தம் செய்யும். இதில் பல வகைகள் உண்டு.

சிலருக்கு வெதுவெதுப்பான நீர் மட்டும். வயிற்றில் கிருமிகள், குடலில் பூச்சிகள் இருந்தால் அவர்களுக்கு வேப்பிலை போன்ற மூலிகை கலந்த தண்ணீர் பயன்படுத்தி குடல் சுத்தம் செய்யப்படும். வேறு ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் தேன், மோர் போன்றவற்றைப் பயன்படுத்தி எனிமா சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல் இருப்பவர்கள் இதை எடுத்துக்கொண்டால் காய்ச்சல் குறைவதோடு மிகவும் புத்துணர்ச்சியாக உணர்வார்கள்.
எந்த வயதினராக இருந்தாலும் இந்தச் சிகிச்சையை முதல்முறை செய்துகொள்ளும் முன்பு இயற்கை மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்பே முயல வேண்டும். ஒவ்வொருவரின் உடல்நிலை, எடை போன்றவற்றைப் பொறுத்தே எந்த அளவுக்கு நீரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படும். மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு, அவர்களாகவே மாதத்துக்கு ஒருமுறை இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.

இதயநோயாளிகள் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளக் கூடாது. மூலநோய் இருப்பவர்கள் இயற்கை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செய்துகொள்ளலாம். சிறுகுழந்தைகளுக்கு இது தேவையில்லை. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசிக்கலாம். இதைக் காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்" என்றார்.
எனிமா சிகிச்சை முறை குறித்து அவசரகால சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தரிடம் கேட்டோம்:
``நல்ல உணவே ஆரோக்கியத்துக்கு சிறந்த தீர்வு. பொதுவாகக் கழிவுகளை வெளியேற்ற முடியாதவர்களுக்கும், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும்தான் இந்த எனிமா சிகிச்சையைப் பயன்படுத்த வேண்டும்.
ஹோட்டல் உணவு, வெளி உணவுகள், துரித உணவுகள், நார்ச்சத்து இல்லாத உணவுகள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடும்போது அவை செரிமானம் ஆவதில்லை. அந்தக் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. முதியவர்கள் அதிக நாள்கள் கழிவுகளை வெளியேற்றாமல் இருப்பதால் அவர்களுக்கு குடலில் தொற்றுகள் ஏற்படலாம்.

இளம் வயதினருக்கு மூலநோய் உருவாக வாய்ப்பு உள்ளது. அப்போது, இந்த எனிமாவைப் பயன்படுத்தினால் மலம் சரியாக வெளியேற வாய்ப்புள்ளது.
மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமலிருக்க தினமும் ஒருவேளையாவது பழங்கள் சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு அதற்கான மருந்துகளைக் கொடுக்கும்போது கழிவுகள் (மலம்) வெளியேறிவிடும். சிலருக்கு மருந்து வேலைசெய்யாமல் இருந்தால் எனிமா பயன்படுத்தலாம். கழிவுகள் குறைந்தபட்சம் மூன்று நாள்களுக்கு மேல் வெளியேறாமல் இருக்கும்போது மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்" என்றார் அவர்.