Published:Updated:

அலர்ஜியை ஏற்படுத்துமா சானிடைஸர்? தெரிந்ததும் தெரியாததும்!

hand sanitizer
hand sanitizer

சானிடைஸர் நுண்ணுயிரிகளை மட்டுமே அழிக்கக் கூடியது. கைகளில் உள்ள தூசு, துகள்களை இதனால் நீக்க முடியாது என்பதால் கைகளில் மாசு நிறைந்திருக்கும்போது சோப்பு போட்டு தூய்மையான நீரில் கழுவுவதே சிறந்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்குவதற்கு முன்பே அனைவரின் கைகளிலும் ஹேண்ட் சானிடைஸர் புழங்கத் தொடங்கியது. 'சுவாசம் மற்றும் கைகளின் மூலமாகவே கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது' என்ற செய்தி வெளியான பிறகு மாஸ்க்கும், ஹேண்ட் சானிடைஸரும் கொரோனவை எதிர்த்துப் போராட முக்கிய ஆயுதங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

corona
corona

இதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைஸரைத் தொடர்ந்து உபயோகித்து வருகிறோம். இதற்கிடையே எந்த மாஸ்க் தரமானது, துணி மாஸ்க் பயனளிக்குமா என்பதுபோல் மாஸ்க் குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்தன. இதுபோல் தற்போது ஹேண்ட் சானிடைஸர் குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதாவது ஹேண்ட் சானிடைஸர் பற்றாக்குறை மற்றும் அதன் தேவையைப் பயன்படுத்தித் தரமில்லாத ஹேண்ட் சானிடைஸர்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒருவர் தொடர்ந்து அடிக்கடி ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்தும்போது அதனாலும் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவர் ஆனந்த்
மருத்துவர் ஆனந்த்

நாம் ஹேண்ட் சானிடைஸர் உபயோகிக்கும்போது என்னென்ன விஷயங்களை எல்லாம் நினைவில்கொள்ள வேண்டும்... தொடர்ந்து ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்துவதால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து அறுவை சிகிச்சை மருத்துவர் ஆனந்திடம் பேசினோம்.

* ஹேண்ட் சானிடைஸரில் ஐசோ புரோப்பைல் ஆல்கஹாலைத் தவிர்த்து அதன் நிறத்திற்காகவும், வாசனைக்காகவும் வேறு ஏதேனும் ரசாயனங்களும் சேர்க்கப்பட்டிருக்கலாம். இதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது சிலருக்கு சருமத்தில் எரிச்சல், வீக்கம், அரிப்பு போன்ற ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு அப்படி ஏற்படும் பட்சத்தில் சானிடைஸர் உபயோகிப்பதை நிறுத்திவிட வேண்டும்.

Hand sanitizer
Hand sanitizer
வீடே மருத்துவமனை... உணவே மருந்து... கொரோனாவுடன் வாழ்வதற்கு தயாராகுங்கள்!

* ஹேண்ட் சானிடைஸரில் ஜெல், லிக்யூட் என்று இரண்டு வகை இருக்கின்றன. இதில் லிக்யூட் சானிடைஸர், கைகளில் தேய்த்த பிறகு சில நிமிடங்களில் காற்றில் உலர்ந்துவிடும். ஆனால் ஜெல் சானிடைஸர் உலர்வதற்குச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். அதுவரையில் கையில் பிசுபிசுப்புத்தன்மை இருக்கும். இது உலர்வதற்கு முன்னால் கண்களையோ, முகத்தையோ கைகளால் தொடக் கூடாது.

* அப்படித் தொடும் பட்சத்தில் சானிடைஸரில் உள்ள ரசாயனம் கண்களை பாதிக்கலாம். வாயின் வழியே உடலுக்குள் சென்று வாந்தி, வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

* ஹேண்ட் சானிடைஸர் நுண்ணுயிரிகளை அழிக்கக்கூடிய திறன் வாய்ந்தது என்பதால் இதைத் தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தும்போது இயற்கையாகவே நம் கைகளில் இருக்கும், உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய நுண்ணுயிரிகளும் அழிந்துபோய்விடும்.

* சானிடைஸரில் இருக்கும் ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மையுடையது என்பதால் சமையலறையில் சானிடைஸரை வைப்பதையோ, கைகளில் சானிடைஸரைத் தேய்த்துவிட்டு உடனே கேஸ், ஸ்டவ், கேண்டில் போன்றவற்றைப் பற்ற வைப்பதை அவசியம் தவிர்க்கவும்.

Handwash
Handwash

* ஒவ்வொரு முறையும் ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்தும்போது இரண்டு அல்லது மூன்று துளிகள் மட்டுமே கைகளில் விட வேண்டும். கைகளில் நிரம்பி வழியும் அளவிற்கு எடுக்கக் கூடாது.

* சானிடைஸர் நுண்ணுயிரிகளை மட்டுமே அழிக்கக் கூடியது. கைகளில் உள்ள தூசு, துகள்களை இதனால் நீக்க முடியாது என்பதால் கைகளில் மாசு நிறைந்திருக்கும்போது சோப்பு போட்டு தூய்மையான நீரில் கழுவுவதே சிறந்தது.

* சானிடைஸர் உபயோகித்துக் கைகளைத் தூய்மைப்படுத்தியிருந்தாலும் உணவோ அல்லது தின்பண்டங்களையோ உண்பதற்கு முன்பு கட்டாயம் தண்ணீரால் கைகளைக் கழுவிவிட வேண்டும்.

* வீட்டில் சானிடைஸர் பாட்டில்களை நன்றாக மூடி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில், பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.

Hand sanitizer
Hand sanitizer

* தற்போது கடைகளில் தரமில்லாத ஹேண்ட் சானிடைஸர்கள் வலம் வரத் தொடங்கிவிட்டன என்பதால், நீங்கள் வாங்கும் சானிடைஸர்கள் தரமானவையா, காலாவதியாகாமல் இருக்கின்றனவா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும்.

* சிலர் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை என்று அடிக்கடி கைகளில் சானிடைஸர் தேய்ப்பதைக் காண முடிகிறது. அளவுக்கு மீறினால் சானிடைஸரும் நஞ்சுதான். அதனால் அவசியமான தருணங்களில் மட்டும் உபயோகிப்பது நல்லது.

`செப்டம்பர் இறுதியில் கொரோனா உச்சநிலை... அதன்பிறகு என்னவாகும்?' - கணிக்கும் மருத்துவர்

* வெளியில் சென்று வந்தாலோ, பிறரிடமிருந்து பணம் மற்றும் ஏதாவது பொருள்களை வாங்கினாலோ சானிடைஸர் பயன்படுத்தலாம். செல்லப்பிராணிகளைத் தொட்ட பிறகும் சானிடைஸர் பயன்படுத்திக் கைகளைச் சுத்தம் செய்துகொள்ளலாம்.

* சானிடைஸரைக் கைகளில் தேய்த்த பின்னர் சிறிது நேரம் காற்றில் உலரவிட வேண்டும். அது உலர்வதற்கு முன்னர் ஈரக் கைகளால் உங்கள் முகம், குழந்தைகள் மற்றும் உணவுப் பொருள்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Food
Food

* சானிடைஸர் நறுமணத்தை முகர்ந்துபார்ப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது அதிலுள்ள ரசாயனங்கள் மூக்கின் வழியே உடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது.

* முடிந்தவரை தூய்மையான தண்ணீரில் லிக்யூட் சோப் பயன்படுத்தி கைகளை நன்றாகத் தேய்த்துக் கழுவுவதே சிறந்தது. இயலாத பட்சத்தில் ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார் மருத்துவர் ஆனந்த்.

அடுத்த கட்டுரைக்கு