Published:Updated:

முழு ஓய்வு, குப்புறப்படுத்தல், சத்தான சாப்பாடு... தனிமைப்படுத்திக்கொள்வோர் செய்ய வேண்டியவை

Blood Test
Blood Test

ஒருவேளை வீட்டியிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டால் அடுத்து அவர்கள் செய்ய வேண்டியது என்ன?

கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று இத்தனை நாள்கள் வீட்டுக்குள் இருந்து ஏமாந்துபோனதுதான் மிச்சம்! நாளுக்கு நாள் `கொரோனா பாதிப்பு' அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், இனி வீட்டுக்குள் இருந்தால் சரிப்பட்டு வராது என்று வேலைக்காக அலுவலகமே செல்லத் தொடங்கிவிட்டோம்.

Corona test
Corona test
Representational Image

ஊரடங்கு கட்டுப்பாடுகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் காண முடிகிறது. இனி நமக்குத் தேவை `கொரோனா தொற்று வராமல் தற்காத்துக்கொள்வது எப்படி என்ற ஆலோசனைகளை விட `கொரோனா `பாசிட்டிவ்' என்று வந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?' என்ற அறிவுரைகளே!

ஒருவருக்கு `கொரோனா பாசிட்டிவ்' என்று வந்தால் அதிலிருந்து விரைவில் மீண்டுவர, பாதிக்கப்பட்டவர் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து பொது மருத்துவர் அரவிந்த ராஜிடம் பேசினோம்.

மருத்துவர் அரவிந்த ராஜ்
மருத்துவர் அரவிந்த ராஜ்

``நமக்கு நன்கு பரிச்சயமான யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதை தினந்தினம் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அதனால், இதுவரை கொரோனா தொற்று நம்மைத் தாக்காமல் இருப்பது எப்படி என்பதையே பேசிக்கொண்டிருந்த நாம், இனி நமக்கு `கொரோனா பாசிட்டிவ்' ஏற்பட்டால் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட அனைவருமே மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதில்லை என்று நாம் அறிவோம். கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் 1. அறிகுறிகள் இல்லாத நிலை (Asymptomatic). 2. லேசான அறிகுறிகள் உள்ள நிலை (Mild). 3. ஓரளவு மிதமான அறிகுறிகள் உள்ள நிலை (Moderate) மற்றும் 4. தீவிர நிலை (Severe) என்று நான்கு நிலைகளில் பிரிக்கப்படுகிறார்கள்.

அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கும் கொரோனா... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

நோயின் வீரியம் பொறுத்தும், அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் ஆணையின் பெயரிலும் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாமா அல்லது கொரோனா சிறப்பு முகாம்களுக்குச் செல்ல வேண்டுமா அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும்.

கொரோனா சிறப்பு முகாம்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோ செல்லும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையைப் பொறுத்து அதற்குத் தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் குணமடைந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

Hospital
Hospital

ஒருவேளை வீட்டியிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டால் அடுத்து அவர்கள் செய்ய வேண்டியது என்ன?

* கூடுமானவரையில் தனி அறையில் தங்கியிருங்கள். அந்த அறைக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம். தனி கழிவறையை உபயோகித்தல் மேலும் சிறப்பு. ஒருவேளை பொது கழிவறை என்றால் ஒவ்வொருமுறை நீங்கள் உபயோகித்த பின்பும் நன்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும்.

* உங்களுக்கென தனி தட்டு, டம்ளர் போன்றவற்றை உபயோகிக்கவும்.

* வீட்டிலிருக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் எக்காரணம் கொண்டும் செல்லக்கூடாது.

கொரோனா பரவலின்போது, முட்டை, சிக்கன், மட்டன் சாப்பிடலாமா? - அசைவம் குறித்த அலர்ட்!

* கொரோனா பாதித்தவர்கள் லேசான காய்ச்சல் இருக்கும்போது எக்காரணம் கொண்டும் கடுமையான வேலையோ, அதிக பளு தூக்குவது போன்ற செயல்களையோ செய்யக் கூடாது. கொரோனா நோய்க்கிருமி நுரையீரலைத் தாக்குவதால் அது பலவீனமாக இருக்கும். நாம் அதிக வேலை செய்கையில் நமக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும். அது நுரையீரலுக்கு அதிக வேலையைக் கொடுக்கும் என்பதால் தொற்று ஏற்பட்டவர்கள் எந்த வேலையையும் செய்யக் கூடாது. அவர்களுக்கு நல்ல தூக்கமும் ஓய்வும் அவசியம்.

* குப்புறப்படுத்து (Prone) தூங்குதல் நலம். அப்படியாகத் தூங்கும்போது நுரையீரல் நன்கு விரிவடையும். இதை Prone Ventilation என்று கூறுவர்.

அசைவ உணவுகள்
அசைவ உணவுகள்

* நல்ல புரதச்சத்து கொண்ட உணவை உட்கொள்ளவும். இவை நாம் நோயிலிருந்து விரைவில் மீள உதவும். கஞ்சி, ரசம் என்று சத்தற்ற உணவுகளைத் திணிக்க வேண்டாம். சைவ உணவுப் பிரியர்கள் சுண்டல், நட்ஸ் போன்றவற்றைப் புரதச் சத்துக்காக எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகள் உண்பவர்கள் இறைச்சி, முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

* காய்ச்சல் ஏற்படும்போது உடலில் நீரிழப்பு ஏற்படும். அதனால் நிறைய தண்ணீர் பருகவும். அதோடு உங்களுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளையும் தவறாமல் உட்கொள்ளவும்; சுய மருத்துவம் கூடாது.

சிறியவர்கள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை... நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வது எப்படி?

* கொரோனா பாதித்த இரண்டாம் வாரத்தில் தீவிர நிமோனியா (Pneumonia) போன்ற நுரையீரல் தொற்று ஏற்படலாம். ஆகவே, அந்த நேரத்தில் ஒருவேளை உங்களுக்கு மூச்சு வாங்குவதில் சிரமம் ஏற்பட்டால் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளவும்.

* கொரோனா குறித்த அச்சம் தரும் செய்திகளைப் பார்ப்பதை தவிர்க்கவும். நல்ல இசை, திரைப்படம் போன்றவற்றைத் தனியே கண்டு மன அமைதியைப் பேணவும்.

Corona Test
Corona Test

* ஒருவேளை நீங்கள் மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட வேண்டும்; முகாமுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறினால் தயவுசெய்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும். ஒருவார காலத்தில் நீங்கள் நலம் பெற்று வீடு திரும்பி மீண்டும் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

*அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொரோனா பாதித்த நபரையும் அவரது குடும்பத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். அவரும் நம்மைப் போன்றவர் என்ற மனிதம் கொண்டு செயல்படுங்கள். சமூக ஒத்துழைப்பு இங்கு மிக அவசியம். தீண்டாமையைப் போன்ற கொடிய நோய் வேறொன்றுமில்லை" என்கிறார் மருத்துவர் அரவிந்த ராஜ்.

அடுத்த கட்டுரைக்கு