Election bannerElection banner
Published:Updated:

கோவிட்-19: வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்வோர் அவசரத் தேவை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

COVID-19 patient
COVID-19 patient ( AP Photo / Jae C. Hong )

கொரோனா பாசிட்டிவ் என வந்ததும் பீதியாகும் மக்கள் பலர் எந்த மருத்துவ அறிவுறுத்தல்களும் இன்றி தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். தங்களுக்குத் தெரிந்த சுய வைத்தியத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

கோவிட்-19 நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் அறிகுறிகளற்றவர்களாக இருப்பார்கள் என்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வது (க்வாரன்டீன்) பரிந்துரைக்கப்படுகிறது. சிலர் தாங்களாகவே அந்த முடிவையெடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது. சென்னை கொடுங்கையூரில் மதனகோபால் என்ற நபருக்கு கோவிட் தொற்று உறுதியானது. தண்டையார்பேட்டை காலரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கூறிவிட்டு வந்துவிட்டார். இந்நிலையில் நேற்று அவர் திடீரென இறந்துவிட்டார்.

Mask
Mask
AP Illustration/Peter Hamlin

இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கும், மருத்துவ மனைகள் நிரம்பி வழியும் சூழலில் வீட்டில் க்வாரன்டீன் செய்துகொள்வதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறையின் கோவிட்-19 கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சம்பத்திடம் பேசினோம்.


கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவர அருகிலிருக்கும் Triage சென்டர்கள் செல்ல வேண்டும். கோவிட் தொற்றின் தீவிர தன்மையைப் பொறுத்து இந்த மையங்களில் இருக்கும் மருத்துவக் குழுவினர் வழி நடத்துவார்கள். சென்னையில் மட்டும் இதுபோன்று 12 மையங்கள் உள்ளன. யார்யார் வீட்டிலிருந்து தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும், யார்யார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த மருத்துவ குழுவினர் தெளிவுப்படுத்துவார்கள். Triage சென்டர்கள் என ஒன்று இருப்பதே கொரோனா தீவிரத்தின் இரண்டாவது அலையின்போதுதான் மக்களுக்குப் பரவலாகத் தெரிகிறது என்பது வருத்தமளிக்கிறது.

கொரோனா தீவிர பாதிப்பு இல்லாதவர்கள் மருத்துவமனைகளிலும், தீவிர பாதிப்பு உடையவர்கள் வீடுகளிலும் இருக்கிறார்கள். வீட்டில் தனியாக இருந்து தனிமைப்படுத்திக்கொண்டால் போதும், அவ்வளவு தானே என்ற புரிந்துணர்வே பலரிடம் இருக்கிறது. தற்சமயத்தில் இருக்கும் கொரோனா அறிகுறிகள் எப்போது திடீர் தீவிரமடையும் என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது. இப்படியான குழப்பங்களுக்கு மத்தியில் எந்த மாதிரியான மருத்துவ உதவிகளை கோவிட் பாசிட்டிவ் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவோடு இருக்க வேண்டியது அவசியம்.

சுகாதார கண்காணிப்பு அதிகாரி சம்பத்
சுகாதார கண்காணிப்பு அதிகாரி சம்பத்

கொரோனா பாசிட்டிவ் என வந்ததும் பீதியாகும் மக்கள் பலர் எந்த மருத்துவ அறிவுறுத்தல்களும் இன்றி தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். தங்களுக்குத் தெரிந்த சுய வைத்தியத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறு. Triage சென்டர்கள் இருப்பது தெரியாதவர்கள் அருகிலிருக்கும் கார்ப்பரேஷன் சென்டர்களைத் தொடர்புகொண்டால் அதன் முழு விவரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்" என்கிறார் சுகாதார கண்காணிப்பு அதிகாரி சம்பத்.

ஹோம் க்வாரன்டீனிலிருப்பவர்களுக்கென்றே `அம்மா ஹோம் கோவிட் கேர்' என்ற தனி பேக்கேஜ் திட்டத்தை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது. அதுபற்றி அம்மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர் ஆனந்த் குமாரிடம் பேசினோம்:

மருத்துவர் ஆனந்த் குமார்
மருத்துவர் ஆனந்த் குமார்

``இந்த பேக்கேஜ் வீட்டில் க்வாரன்டீனிலிருப்பவர்களுக்கு ரூ.2,000 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அதில் 24 மணி நேர மருத்துவ சப்போர்ட் வழங்கப்படும். அலோபதி மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், ஆயுஷ் மருத்துவர்கள் என அவசர உதவிக்கு தொடர்புகொள்வதற்கு யாராவது ஒருவர் இருப்பார்கள். மாநகராட்சியிலிருந்து வீட்டில் க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு கபசுர குடிநீர், அதிமதுர கஷாயம் கொடுக்கிறார்கள். அந்த கிட்டிலேயே தெர்மாமீட்டர், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் இருக்கும்.

நோயாளிகள் தினம்தோறும் அதைப் பயன்படுத்தி பரிசோதித்து அதை போட்டோ எடுத்து அவர்களுக்கென்று இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடுவார்கள். அதன் அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவமனையில் ஒரு கேஸ் ஷீட் மெயின்டெயின் செய்யப்படும். அவர்களுக்குத் தேவைப்படும் மருந்துகளை மருத்துவர்கள் பிரிஸ்கிரிப்ஷனில் எழுதி அனுப்பி வைத்து விடுவார்கள். அவர்கள் தங்கள் உறவினர்களிடமோ அவர்களுக்கான மாநகராட்சி தன்னார்வலரிடமோ அந்த மருந்தை வாங்கி வரச் சொல்லிப் பயன்படுத்துவார்கள்.

Covid-19 Vaccination
Covid-19 Vaccination

கோவிட்-19 தொற்று உறுதியானவுடன் அவர்களுக்கு சி.டி ஸ்கேன், அடிப்படை ரத்தப் பரிசோதனை ஆகியவற்றை எடுத்து அவர்கள் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிந்து விடுவோம். தமிழகத்தில் எந்த ஊரிலிருந்தாலும் பிரச்னை இல்லை. வெளியூரிலிருந்து கோவை, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்தவர்கள் கூட இதைப் பயன்படுத்தினார்கள். அஸ்ஸாம், ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து கூட நோயாளிகள் இந்த பேக்கேஜை பயன்படுத்தினார்கள். வெளியூரிலிருப்பவர்களுக்கு அந்தந்த ஊர்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது ஆய்வகங்களுடன் இணைந்து பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

வீட்டில் க்வாரன்டீனிலிருக்கும்போது அவர்கள் நிலையைக் கண்காணித்துக்கொண்டே இருப்போம். நிலைமை மோசமாகிறது என்றால் உடனடியாக க்வாரன்டீனிலிருந்து வெளியேறி மருத்துவமனையில் சேருமாறு பரிந்துரைப்போம். உடல்நிலை மேம்படும் பட்சத்தில் அந்தத் திட்டம் (பேக்கேஜ்) முடியும் வரை இந்தக் கண்காணிப்பு தொடரும். இந்தத் திட்டம் வெற்றிபெற்ற நிலையில் சென்னை மாநகராட்சியும் ஒரு நாளைக்கு 400 - 500 நோயாளிகளை இதே முறையில் கண்காணிக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.

Medical Emergency
Medical Emergency
`மூன்றாம் நிலை உருமாறிய கொரோனா இந்தியாவில் பரவுகிறதா?' - மருத்துவரின் விளக்கம்

இரண்டாவது அலை தீவிரமடையத் தொடங்கியதை அடுத்து மாநகராட்சியிலிருந்து க்வாரன்டீனிலுள்ளவர்களைக் கண்காணிக்க ஃபோகஸ் குழுக்கள் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டிருப்பார். அந்தத் தன்னார்வலரின் தொடர்பு எண்ணும் நோயாளியிடமிருக்கும். ஏதேனும் உதவியோ ஆலோசனையோ தேவைப்பட்டால் அவர்களிடம் பேசலாம். அது எதுவும் பயனளிக்கவில்லை என்றால் தமிழக அரசின் 24 மணி நேர ஆலோசனை சேவையான 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

தேவையான உதவிகளை அவர்கள் அளிப்பார்கள். பிரச்னை தீவிரமாகி மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைக்கலாம். இந்த இரண்டு எண்களையும் எந்த நேரத்திலும் மக்கள் மறந்துவிடக் கூடாது. இதுதவிர, அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து ஹெல்ப் லைன் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதையும் அறிந்து வைத்திருப்பது நல்லது" என்றார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு