Published:Updated:

``இரண்டாவது தாக்கம் தீவிரமாக இருக்கலாம்..!'' லாக்டௌனுக்கு பிறகான மருத்துவ வழிகாட்டல்

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு தொடர்பாக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்குகின்றனர் மருத்துவர்கள்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கில் சிறு தளர்வுகளும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஊரடங்கு தொடர்பாக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்குகின்றனர் மருத்துவர்கள்.

சென்னை தேசிய தொற்றுநோய் மையத்தின் உதவி இயக்குநரும் முன்னாள் ஆராய்ச்சியாளருமான மருத்துவர் R. ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை தொற்றுநோய் அறிவியலாளர் மருத்துவர் கந்தம் நாகார்ஜுனா ஆகியோர் தருகிற விளக்கங்கள்.

மருத்துவர் ராமகிருஷ்ணன்
மருத்துவர் ராமகிருஷ்ணன்

``சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும், சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதுமே நோயை எதிர்த்துப் போராட உதவும் சிறந்த ஆயுதங்கள். `வாழ்வதற்காக வாழ்வாதாரம்' என்ற நிலை மாறி `வாழ்வாதாரத்துக்காக வாழ்க்கை' என்ற நிலை உருவாகியுள்ளது. நம் நாட்டில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் அன்றாட உணவுக்காக, அன்றைய சம்பளத்தை நம்பி வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம், ஊரடங்கால் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.

சிறிது காலத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதைவிட நெடுநாள்களுக்கு சிறிய தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தலாம். ஊரடங்கு நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் நாடெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள், வல்லுநர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரை ஒரே தளத்தில் இணையத்தில் இணைக்கலாம். படிப்படியாக ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தும்போது அந்தத் தளர்வுகளுக்கு உரிய சட்டதிட்டங்களைத் தெளிவாக வரையறை செய்வது அவசியம். அவ்வாறு சரியாக வரையறை செய்யப்படாவிட்டால் இரண்டாம் முறை தொற்றின் தாக்கம் ஏற்படலாம். முதல் முறை வந்ததைவிட இரண்டாவதாக ஏற்படும் தாக்கம் தீவிரமாக இருக்கலாம்.

மருத்துவர் கந்தம் நாகார்ஜுனா
மருத்துவர் கந்தம் நாகார்ஜுனா

பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளவர்களுக்குப் பரிசோதனை:

கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை அனைத்து மக்களுக்கும் மேற்கொள்ளாமல், கோவிட் 19-க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் பணிபுரிபவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளவர்கள், தொற்றைக் கண்டறியும் ஆய்வகங்களில் பணிபுரிபவர்கள், மயானங்களில் பணிபுரிபவர்கள், தொற்று ஏற்பட்டவர்களின் உறவினர்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கான நுழைவுச்சீட்டின் மூலம் பயணம் செய்து வருபவர்கள், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆகியோருக்குப் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

கொரோனா தொற்று உள்ளதா என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கல்யாண மண்டபங்களில், சமுதாயக் கூடங்களில், விடுதிகளில் தனிமைப்படுத்தப் படலாம். தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறிகள் இல்லாதவர்களும் கொரோனா தொற்று சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள்
`கொரோனா பரிசோதனை வேகத்தை அதிகரிக்கலாம்!' -  தஞ்சை ஐ.ஐ.எஃப்.பி.டி-யின் நவீன கருவி

தொற்றால் இறந்தவர்களின் உடலைக் கையாளுதல்:

இவ்வாறான கொள்ளை நோய்த்தொற்று காலங்களில் ஏற்படும் அனைத்து மரணங்களும், பரிசோதிக்கப்பட்டால் அன்றி கொரோனாவால் ஏற்பட்ட மரணம் போலவே கருதப்பட வேண்டும். உடலைக் கையாளும் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு முழு பாதுகாப்புக் கவச உடை அவசியம். இறந்தவர்களின் உறவினர்கள் உடலைக் கையாளக் கூடாது. உடல், ஒளி புகும் நெகிழிப் பையில் அடைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்பே உறவினர்கள் பார்க்கலாம். பிணவறைகளில் உடல்களை வைத்திருக்கக் கூடாது. இதைத் தவிர்க்க மயானங்களை நீண்டநேரம் செயல்படுத்தலாம். இறுதிச்சடங்கில் 10 உறவினர்கள் சமூக இடைவெளி, கிருமிநாசினி கோட்பாடுகள் ஆகியவற்றைப் பின்பற்றி பங்கேற்கலாம்.

பாதுகாப்பான வழிமுறைகள்:

அரசாங்க ஊழியர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இருக்கும் தங்கள் துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசு மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

கல்வி நிறுவனங்கள் ஊரடங்கு மற்றும் அனைத்து தடைகளும் நீங்கிய பின்னரே செயல்பட வேண்டும். அதுவரை இணையவழியில் இயங்கலாம். சுற்றுலாத்துறை, பொழுதுபோக்குத் துறை, சமுதாயக் கூடல்கள் ஆகியன கடைசியாக திறக்கப்படுபவையாக இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் ரயில் மற்றும் விமான சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்படத் தொடங்கலாம்.

ஊரடங்கு
ஊரடங்கு
AP | Channi Anand
Two main weapons to combat COVID-19 and the preventive measures to follow during this crisis!

தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்கள் தொழிற்சாலையைத் தனிமைப்படுத்திச் செயல்படுத்த வேண்டும்.

பணியாளர்கள் அங்கேயே அருகில் தங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பச்சை மண்டலப் பகுதியில் வசிக்கும் பணியாளர்கள் மட்டுமே பணிக்கு அமர்த்தப்பட வேண்டும்.

உடல் வெப்ப பரிசோதனை மற்றும் உடல் நலப் பரிசோதனை தினமும் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.

தபால், கொரியர் போன்ற துறைகளில் இருந்து வரும் பொருள்கள் பலர் கைமாறி வருவதால் அவை கசிவு ஏற்படாத நெகிழிப் பைகளில் சுற்றப்பட்டு, கிருமி நாசினி தெளித்து வழங்கப்பட வேண்டும். அந்தப் பொருள்களை முதலில் இருந்து கடைசி வரை கையாள்பவர்கள். அனைவரும் பாதுகாப்புக் கவசம் அணிய வேண்டும். ரசீது கூட கை படாத வண்ணம் இருக்க வேண்டும். பொருள்களை வழங்குபவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பகுதியிலிருந்து வேறு பகுதிக்குச் செல்லக் கூடாது" என்றனர்.

மொழிபெயர்ப்பு: பா. கவின்

அடுத்த கட்டுரைக்கு