Published:Updated:

கொரோனா: `10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!’ - மருத்துவர்களின் நிலை?

மருத்துவர்கள்
மருத்துவர்கள் ( AP )

``தண்ணீர் குடிப்பது முதல் கழிவறைக்குச் செல்வது வரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். முடிந்தவரை தண்ணீர் குடிப்பதை அவர்கள் தவிர்ப்பதாகவே கூறுகின்றனர்.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் பாதிப்பு எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. அதாவது, பாதிப்பில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 25,000-த்தைக் கடந்துள்ளது. மருத்துவமனைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இந்த நெருக்கடியான சூழலில் பல மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்க மருத்துவமனையில் எத்தகைய நிலையில் மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதைப் பற்றிய கட்டுரைதான் இது.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று
Pixabay

கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டது என்பதால் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இதனால், கடுமையான வெயில் காலங்களில்கூட பாதுகாப்பு உடைகளை அணிந்தபடி தங்களது பணிகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ``சுமார் 40 டிகிரியில் இருக்கும் வெப்பநிலைக்கு இடையே பாதுகாப்பு உடைகளை அணிந்து பணி செய்வது மிகவும் கடினம். உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருக்கும். எனினும், நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சி செய்கிறோம்” என நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றைச் சேர்ந்த மருத்துவர் வாணி தெரிவிக்கிறார்.

கொரோனா: `உணவு, தண்ணீர் வழங்கவில்லை!’ - சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகள்

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 100 மருத்துவர்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் வேலைநேரம் குறைக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு தொடர்பான பொருள்களை வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். இந்த மருத்துவர்களின் மரணம் மருத்துவர்களிடையே மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், தங்களது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சில மாநிலங்களில் அரசின் அறுவுறுத்தலின் பேரில் சில மருத்துவமனைகள் ஏழ்மையான கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையளித்து வருகின்றனர். அதில் நொய்டாவைச் சேர்ந்த ஷார்தா என்ற மருத்துவமனையும் ஒன்று. அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைவரும் தலை முதல் கால் வரை பிளாஸ்டிக் பாதுகாப்பு உடைகளை அணிந்துள்ளதால் வியர்வையில் நனைந்தபடி பணிபுரிகின்றனர். குளிர்சாதன வசதிகளும் மருத்துவமனையில் இல்லாததால் மருத்துவர்கள் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தண்ணீர் குடிப்பது முதல் கழிவறைக்குச் செல்வது வரை மருத்துவர்கள், செவிலியர்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். முடிந்தவரை தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதாகவே அம்மருத்துவனை ஊழியர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்கள்!
மருத்துவர்கள்!
Claudio Furlan/LaPresse

நீண்ட நேரம் மருத்துவமனையில் வேலை செய்து வருவதால் தலைசுற்றல் மற்றும் வாந்தி எனப் பல பிரச்னைகளும் அவர்களுக்கு ஏற்படுவதாகக் கூறுகின்றனர். இந்தக் கொடுமையான சூழல் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது எனத் தெரிவிக்கின்றனர். சில ஊழியர்கள் அழுத்தம் தாங்க முடியாமல், தங்களது பணிகளை விட்டு சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனர். இதனால், மருத்துவ மாணவர்களையும் ஓய்வுபெற்ற ஊழியர்களையும் பணிக்கு அழைத்துவரும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். கொரோனா, ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இடையேயும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என வேதனை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

உதாரணமாக, மருத்துவர் வாணி கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இன்று வரை அவரின் குடும்பத்தினரைப் பார்க்கவில்லை என்கின்றனர். ஒவ்வொரு மரணம் அவரை ஆழமாகப் பாதித்து வருவதாகவும் கூறுகின்றனர். ``நோயாளிகள் பெரும்பாலும் மயக்கமடைகிறார்கள். சாப்பிட மறுக்கிறார்கள். எங்களுடன் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஆனால், நாங்கள் பொறுமையுடன் இருக்க முயற்சி செய்கிறோம். அன்புக்கு உரியவர்கள் தங்களுடன் இல்லாமல் இருப்பதால் கடுமையான மனஉளைச்சலில் அவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் இருக்க வேண்டியதாக உள்ளது. ஆனால், எங்களுடைய உறவினர்கள் எங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். பாராட்டவும் செய்கிறார்கள். அவர்களது பாராட்டு இன்னும் கடினமாக எங்களை உழைக்க வைக்கிறது” என்கிறார் மருத்துவர் அபிஷேக் தேஷ்வால்.

பிசிஆர், ஆன்டிபாடி, ஆன்டிஜென், சிடி ஸ்கேன்... கொரோனா பரிசோதனைகள் FAQ!
அடுத்த கட்டுரைக்கு