Published:Updated:

தேள்கடி, அரளிக்காய்... போலி மருத்துவ ஃபார்வேர்டுகளும் மருத்துவ அறிவுரையும்!

போலி ஃபார்வேர்டு
போலி ஃபார்வேர்டு

"சர்க்கரைநோய் 15 நாள்களில் குணமாகும், தீராத வியாதி தீர்க்கும் கோமியம், மூட்டுவலி விரட்ட எருக்கம் இலை, மிளகும் உப்பும் கலந்து சாப்பிட்டால் ஹார்ட்அட்டாக் வராது, கொரோனாவை விரட்ட இந்த மூலிகைகள் போதும்... இந்தப் போலிமருத்துவத் தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி தருகின்றன!" - மருத்துவர்கள்

'தமிழனா இருந்தா ஷேர் பண்ணு' என்பதில் ஆரம்பித்து 'உயிரோட இருக்கணும்னா ஷேர் பண்ணுங்க' வரை, ஃபார்வேர்டு மெசேஜ்களின் தொல்லைகளுக்கு எல்லையே இல்லை. இந்த 'ஷேர் ஹோல்டர்களி'டமிருந்து யாருடைய சோஷியல் மீடியா அக்கவுன்ட்டும் தப்ப முடியாத அளவுக்கு, எங்கும் நிறைந்திருப்பவர்கள் இவர்கள்.

மருத்துவம்
மருத்துவம்

'பதிமூணும் ஜோக்கரா இருந்தா எப்படிப்பா' என்பதைப்போல, பூராமே புளுகு மூட்டை ஃபார்வேர்டுகள்தான். சீரியல் நம்பரோடு மார்ஜின் எல்லாம் போட்டு திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள், முறுக்குக் கம்பியும் சிமென்ட்டும் கலந்து சிம்மக்கல்லில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத் தூண்... இப்படி எத்தனையோ 'வரலாற்று' ஃபார்வேர்டுகளைப் பார்த்த பெருமை நம் அனைவருக்குமே இருக்கும்.

`3000 ஆண்டுகள் பழைமையான மருத்துவம்’ - கொரோனாவுக்கு எதிராக பாரம்பர்ய முறையைக் கையில் எடுத்த சீனா

இவ்வளவு ஏன், ஃபேஸ்புக்கில் நகைச்சுவை பிரபலம் ஒருவர் எழுதிய ஜாலி செய்யுளை எடுத்துப்போட்டு, 'கொரோனா வைரஸ் பற்றி போகர் எழுதிய பாடல்' எனப் பரவி வரும் ஃபார்வேர்டு கூத்தைப் பார்க்கையில் 'இரக்கம் இல்லையா உங்களுக்கு' டைப் ஆத்திரம் வருது மக்களே!

வாட்ஸ்அப்பில், இந்த ஃபார்வேர்டு அராஜகத்துக்குக் கடிவாளம் போட, ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மேல் அனுப்பினால் கேள்விகேட்கும் அப்டேட்டை அந்நிறுவனம் கொண்டுவந்தது. ஆனாலும், 'ஃபார்வேர்டுகள்' வேகம் குறையாமல் ஃபார்வேர்டு ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன.

வரலாறு, ஆன்மிகம், செலிப்ரிட்டிகள் என்று வந்து கொட்டும் ஃபேக் ஃபார்வேர்டுகளை நம்புபவர்கள் நம்ப முடியாத எண்ணிக்கையில் இருக்கிறார்கள். போலி மருத்துவத் தகவல்கள் ஃபார்வேர்டு விஷயத்திலும் இது நடக்கும்போது, அதன் விளைவு விபரீதமாகிறது.

மருந்து மாத்திரை
மருந்து மாத்திரை

'நானும் வைத்தியன்தான்', 'மருத்துவ டிப்ஸ் சொல்றேன் பாரு', 'இதை செஞ்சா இந்த நோய் பறந்தே போயிடும்' என்றெல்லாம் வண்டி வண்டியாக ஏறி வருகிறார்கள் சோஷியல் மீடியா போலி மருத்துவர்கள். இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மையையோ, இது ஏற்படுத்தும் விளைவுகளையோ பற்றி யோசிக்காத மக்கள் பலர், அவற்றை நம்பவும் பின்பற்றவும் செய்கிறார்கள்.

'குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டாம்' என்பது முதல், 'வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம்' வரை இந்த ஃபார்வேர்டுகள், நம் சமுதாயத்தின் மருத்துவ முன்னேற்றத்துக்குக் குறுக்கே விழுந்து ஏற்படுத்தும் பின்னடைவுகள் புறந்தள்ள முடியாதவையாக ஆகிவருகின்றன.

சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் இது குறித்துப் பேசினோம். "இப்போதுள்ள ஸ்மார்ட்போன் உலகத்தில், உங்களுக்குத் தேவையோ இல்லையோ, தகவல்கள் உள்ளங்கையில் வந்து கொட்டியபடியே இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் நம்பிவிடக் கூடாது. குறிப்பாக, மருத்துவத் தகவல்களை நம்பகத்தன்மைகொண்ட தளங்களிலிருந்து வந்தால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். தரமான இதழ்களிலும் சேனல்களிலும் வலைதளங்களிலும் முறையான அங்கீகாரம் பெற்ற சிறந்த மருத்துவர்கள் சொல்லும் மருத்துவக் குறிப்புகளும் விளக்கங்களுமே சரியானவையாக இருக்கும். என்றாலும்கூட, அவற்றை எல்லாம் மனதில் குறித்துக்கொள்ளலாமே தவிர, சிகிச்சை தேவைப்படும் ஓர் உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது, அருகில் வசிக்கிற மருத்துவரை நேரில் அணுகுவதே சரி.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்
சித்த மருத்துவர் விக்ரம் குமார்

சோஷியல் மீடியா போலி மருத்துவர்களால், பாமர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு, தாங்கள் கேட்கும் ஒரு விஷயத்தை க்ராஸ் செக் செய்யவோ, அது பற்றிய மற்ற தரப்பு விளக்கங்களை அறியவோ வாய்ப்பு குறைவாக இருக்கிறது. எனவே, தங்களுக்கு வரும் ஃபார்வேர்டு தகவல்களையும் தாங்கள் பார்க்கும் வீடியோக்களையும் 'அட, இதுவரை இது தெரியாமப் போச்சே' என்கிற மனநிலையில் கண்மூடித்தனமாக நம்பிவிடுகிறார்கள்.

'இதைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் 15 நாள்களில் குணமாகும்', 'தீராத வியாதிகளை எல்லாம் தீர்க்கும் கோமியம்', 'எருக்கம்இலை போதும் மூட்டுவலியை விரட்ட', 'மிளகும் உப்பும் கலந்து சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது', 'கொரோனாவை விரட்ட இந்த மூலிகைகள் போதும்' என... வந்து கொட்டும் போலி மருத்துவத் தகவல்களைப் பார்க்கும்போது மருத்துவர்களாகிய எங்களுக்கு அதிர்ச்சியாகவும் பதற்றமாகவும் இருக்கிறது. காரணம், துளி உண்மையும் இல்லாத இவற்றை எல்லாம் மக்கள் நம்பி, தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வாகச் செயல்படுத்த ஆரம்பிக்கின்றனர். சர்க்கரைநோய், மூட்டு வலி என அவர்களுக்கு இருக்கிற நோய்களுக்கான சிகிச்சையை முறையாக எடுக்காமல் இப்படி மூடநம்பிக்கைகளைப் பின்பற்ற ஆரம்பிப்பதால், நோய் தீவிரமாகிக்கொண்டேதான் போகும். இன்னொரு பக்கம், இவற்றைப் பின்பற்ற ஆரம்பிப்பதே, இல்லாத உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கவும் செய்துவிடும்.

மொபைல்
மொபைல்

சித்த மருத்துவத்தில் மருந்தோ அதன் அளவோ மாறுபட்டால் அது ரிஸ்க். ஆனால், யூடியூப் சேனல்கள், பிளாகர்கள் எல்லாம் வைரலாக வேண்டும் என்பதற்காக, 'மூன்றே நாள்களில் நோய் குணமாக', 'கேன்சரைகூட விரட்ட' என்றெல்லாம் தங்கள் கற்பனையில் கன்டென்ட் தயாரிக்கிறார்கள். அரசுப் பேருந்துகளில் 'வெண்புள்ளிகளை இத்தனை நாள்களில் குணமாக்கலாம்' போன்ற சாத்தியமற்ற பொய் விளம்பரங்களை நம் சென்ற தலைமுறை பார்த்தது. அதன் அப்டேட்டடு வெர்ஷன்தான், பாப்அப் நோட்டிஃபிகேஷன்களில் வந்து விழும் மருத்துவக் குறிப்புகள்.

சுய மருத்துவம் பேராபத்து!

அரசும் காவல்துறையும் சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கினாலும், இதுபோன்ற போலி மருத்துவ ஃபார்வேர்டுகளை உருவாக்கி உலாவரச் செய்பவர்களைக் கண்டறிந்து களைவதோ, கடிவாளமிடுவதோ, அவர்களுக்குத் தண்டனை வழங்குவதோ இப்போதைய இணைய சூழலில் சாத்தியமில்லை. எனவே, மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார் டாக்டர் விக்ரம் குமார்.

பொது மருத்துவர் அருணாசலத்திடம், இது குறித்துத் தொடர்ந்து பேசுவதற்கு முன், சில 'அதிரி புதிரி ஹிட்' போலி மருத்துவ ஃபார்வேர்டுகள், இங்கே உங்கள் பார்வைக்கு...

* அரளிக்காய் மருத்துவம் - அரளிக்காயை மருந்தாகச் சொல்கிறது ஒரு ஃபார்வேர்டு. அதற்கும் சீரியஸாக, 'சூப்பர் தகவல்' என்று கமென்ட் செய்கிறார்கள் சில நெட்டிசன்கள்!

* தேள் கொட்டினால் சாவே இல்லை - 'ஒருமுறை உங்களைத் தேள் கொட்டினால், ஆயுளுக்கும் உங்களுக்கு மாரடைப்பு வரவே வராது' என்று சத்தியம் செய்கிறது ஒரு ஃபார்வேர்டு. இதற்காகத் தேளை வளர்க்கச் சொன்னாலும் அதற்கும் தயாராக இருக்கிறது ஒரு கூட்டம்!

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்
Vikatan

* 'பாம்பு கடித்து இறந்துவிட்டதாக நினைத்தவர்களைக்கூட உயிர்ப்பிக்கலாம் இப்படி' - புளுகோ புளுகான இந்த ஃபார்வேர்டு, உங்களுக்கும் வந்திருக்குமே?! தலையில் அடித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

* ஹார்ட் அட்டாக்கும் கல் உப்பும் - இதயநோய் நிபுணர்களுக்கே நெஞ்சடைப்பு ஏற்படுத்தும் பதிவு இது. கல் உப்பை வாயில் வைத்தால் ஹார்ட் அட்டாக் சரியாகுமாம். பிடித்தமான கவுண்டமணி டயலாக் போட்டு திட்டிக்கொள்ளவும்!

''இவற்றையெல்லாம் சிரித்து மட்டுமே கடந்துவிட முடியவில்லை. காரணம், மருத்துவ விழிப்புணர்வில் நம் மக்களை எல்லாம் பின்னோக்கிச் செல்லச் செய்யும் ஆபத்து இந்த ஃபார்வேர்டுகளில் உள்ளது'' என்று பேசத் தொடங்கினார் டாக்டர் அருணாசலம்.

''சொல்லப்போனால், இதுபோன்ற போலிகளால்தான் மருத்துவ உலகமே ஸ்தம்பித்து இருக்கிறது. பொதுவாக, நம் மக்கள் பெர்சனல் விஷயங்களில் யாரின் அறிவுரையையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதே மக்கள், இதுபோன்ற மூடநம்பிக்கையான மருத்துவத் தகவல்களை அப்படியே பின்பற்ற ஆரம்பிப்பது வருத்தத்துக்குரிய முரண். இந்த மனநிலை தொடர்ந்தால், மருத்துவர்களின் மீதும் மருந்துகளின் மீதும் அவர்களுக்கு அவநம்பிக்கை வளர்ந்துகொண்டே வரும். அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மருத்துவர் அருணாசலம்
மருத்துவர் அருணாசலம்

மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். ஃபார்வேர்டு மருத்துவத் தகவல்களைப் புறந்தள்ள வேண்டும். குறைந்தபட்சம், அதன் நம்பகத்தன்மை குறித்து தங்களின் மருத்துவர்களிடமாவது கேட்டுத் தெளிவுபெற வேண்டும். ஏதேனும் உடல்நலக் குறைபாடு என்றால் முதலில் குடும்ப மருத்துவர் அல்லது ஒரு பொது மருத்துவரை நாட வேண்டும். தேவைப்பட்டால் அவர் வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட பிரச்னைக்குரிய சிறப்பு மருத்துவரை நாட வேண்டும்" என்று வலியுறுத்துகிறார் டாக்டர் அருணாசலம்.

எந்த ஃபார்வேர்டு வந்தாலும் அதன்

ஃபேக்ட்செக் செய்வதே அறிவு!

அடுத்த கட்டுரைக்கு