Published:Updated:

கொரோனாவைத் தடுக்குமா ஆல்கஹால்? - வதந்திகளும் விளக்கமும் #CoronaAlert

கொரோனா
கொரோனா

வெந்நீரில் குளிப்பதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாமல் தடுக்க முடியும் என்பதும் வதந்தியே.

ஒரு தொற்றுநோய் பரவுகிறது என்றால், அது தொடர்பான சரியான தகவல்கள் பரவுவதைவிட, தவறான வதந்திகள்தான் எளிதில் மக்களைச் சென்றடைகின்றன. அப்படி, தற்போது பரவிக்கொண்டிருக்கும் வதந்தி என்னவென்றால், 'கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கு மது (ஆல்கஹால்) அருந்துங்கள்' என்பதுதான்.

மேலும், இந்தத் தகவலை உலக சுகாதார நிறுவனமே வெளியிட்டிருக்கிறது என்றும் அந்தச் செய்தி பரவிவருகிறது. இந்த வதந்தி, இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலும் பரவியிருக்கிறது.

Representational Image
Representational Image

இரானில், கொரோனா தடுப்புக்காக ஆல்கஹாலைக் குடித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு, 1979-ம் ஆண்டு முதல் மது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு, மது விற்பதும் அருந்துவதும் சட்டவிரோதமானது. இந்நிலையில், கொரோனா பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், ஆல்கஹால் குடிக்க வேண்டும் என்ற வதந்தி பரவியது. மது தடை செய்யப்பட்டுள்ளதால், தொழிற்சாலையில் பயன்படுத்தும் ஆல்கஹாலை (Industrial Alcohol) வாங்கிக் குடித்துள்ளனர்.

அது விஷமாகியதால், தற்போது 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுவிட்டது. இன்னும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அவர்கள் சிகிச்சைபெறும் மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்தியாவில் 50-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, நோய் தடுப்பு குறித்த எச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

தனிநபர் சுகாதாரம் பேணுதல், முகக்கவசம் அணிதல் என்று தடுப்பு நடவடிக்கைகளைக் கையாளுகின்றனர். அதற்கு நடுவில் இதுபோன்ற வதந்திகளும் பரவி, மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. ஆல்கஹால் கொரோனாவைத் தடுக்கும் என்பதை மறுத்துள்ள உலக சுகாதார நிறுவனம், மேலும் சில தவறான நம்பிக்கைகளுக்கும் விளக்கம் தந்திருக்கிறது.

சானிட்டைசர்
சானிட்டைசர்

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டால், ஆல்கஹால் மூலம் அதை நீக்க முடியாது. ஆல்கஹால், குளோரின் போன்றவற்றை உடல் முழுவதும் தெளித்துக்கொள்வதால் வைரஸை அழிக்க முடியாது. அப்படிச் செய்வதால் கண், வாய், மூக்கு, காது போன்ற இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். மேலும், அணியும் ஆடையிலும் அது சேதத்தை விளைவிக்கும். ஆல்கஹால், குளோரின் போன்றவை தரைகளுக்குச் சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படும். ஆனாலும் அவற்றைப் போதுமான கவனத்துடன் கையாள வேண்டும். ஆல்கஹாலை குடிப்பதற்கும் கொரோனா வைரஸ் நீங்குவதற்கும் எந்தத் தொடர்புமில்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

வெந்நீரில் குளிப்பதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாமல் தடுக்க முடியும் என்பதும் வதந்தியே. சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களைப் பயன்படுத்தினால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்பதெல்லாம் லாஜிக்கே இல்லாத வதந்தி என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Hot water bath
Hot water bath
கொரோனா வைரஸ் தீவிரத்தை அதிகப்படுத்தும் தவறுகள்! #VikatanPhotoCards

கொரோனா வைரஸ் போன்ற எந்தவித தொற்றும் பரவாமல் இருப்பதற்கு, ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட ஹேண்ட் சானிடைஸர்களைக் கைகளில் அடிக்கடி தேய்த்துக்கொள்வது அல்லது சோப் போட்டு கழுவ வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு