கொரோனா தடுப்பூசிக்கு முன் ஆன்டிபாடி டெஸ்ட் அவசியமா? - நிபுணர்கள் விளக்கம்

ஆன்டிபாடி டெஸ்ட் அனைவருக்கும் நிச்சயம் அவசியம்தானா?
ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துக்கொள்வது ரொம்ப நல்லது என்பது பொதுவான கருத்து. ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் அந்த வைரஸை அழிப்பதற்காக எதிர்த்துப் போராடும் சக்தி உடலில் தானாகவே உருவாகியிருக்கும்.
அந்த எதிர்ப்பு சக்தியான ஆன்டிபாடிக்களை அளவீடு செய்வது ஆன்டிபாடி டெஸ்ட். இன்னும் சிம்பிளாகச் சொன்னால், உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளச் செய்யப்படுவதுதான் ஆன்டிபாடி டெஸ்ட்.

இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆரம்பிக்கப்பட்ட ஆன்டிபாடி டெஸ்ட், கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் காலகட்டத்தில் அவசியமாக இருப்பதாகத் தெரிகிறது. கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் மறுக்காமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்தே ஆக வேண்டும் என்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் மறுபுறம் இருந்துவருகிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய முதல்நிலை பணியாளர்களிடமிருந்து தொடங்கப்பட்ட இந்த ஆன்டிபாடி டெஸ்ட்தான் கொரோனா தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்பட்ட இந்த நேரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
ஆன்டிபாடி டெஸ்ட் அனைவருக்கும் நிச்சயம் அவசியம்தானா என்பது குறித்தான சந்தேகங்களை விளக்குகிறார் மைக்ரோ பயாலஜிஸ்ட் டாக்டர் சரண்யா.

``ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் உடலில் தானாகவே ஆன்டிபாடிக்கள் உருவாகியிருக்கும். தொற்று ஏற்படாத பட்சத்தில் செயற்கையாகத் தடுப்பூசி மூலம் ஆன்டிபாடிக்களை மருத்துவர்கள் அதிகரிக்கச் செய்வார்கள். அப்படி உருவான ஆன்டிபாடிக்கள் எத்தனை காலம் வரை உடலில் நீடிக்கும் என்பதன் கால வரையறையை நம்மால் நிச்சயாமாகக் கூற முடியாது. ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துக்கொள்பவர்கள் தகுந்த கால இடைவெளியில் தொடர்ந்து டெஸ்ட் எடுத்துக்கொள்வது சிறப்பு.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் நேரம் ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துக்கொண்டு உடல் நிலையைத் தெரிந்துகொண்டால் அதற்கேற்றபடி நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதற்காகத்தான் தகுந்த கால இடைவெளியில் ஆன்டிபாடி டெஸ்டை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். அவ்வப்போது ஆன்டிபாடி டெஸ்டுகளை எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் எத்தனை கால இடைவெளியில் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் சரியாக இருக்கும் போன்ற விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்டிபாடிக்களின் அளவு உடலில் எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. திடீரென குறையவும் செய்யலாம், அதிகரிக்கவும் செய்யலாம். அதிகரித்தால் பிரச்னை இல்லை, குறைவாக இருந்தால் அதற்கேற்றபடி தடுப்பூசி எடுத்துக்கொள்வது முக்கியம்.
மூன்று மாத இடைவெளியில் ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்'' என்ற டாக்டர் சரண்யா ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்தேதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பதையும் தெரிவிக்கிறார்.
தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கும் அரசு, ஆன்டிபாடி டெஸ்டுகளை எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துவதில்லையே என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வர, இதுகுறித்து பொதுத்துறை சுகாதார கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சம்பத்திடம் பேசினோம்.
``தடுப்பூசிகளை அரசு கொடுப்பது அவசியம்தான். அதற்காகத்தான் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை மருத்துவர்கள் அறிந்துகொண்டு அதற்கேற்றபடி தடுப்பூசிகள் போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

முதலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை மக்கள் அடிக்கடி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அவசியமே இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அறிந்துகொண்டு அதற்கேற்றபடி தடுப்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டியவர்கள் மருத்துவர்கள்தாம். அதைத்தான் மருத்துவர்களும் செய்து வருகிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை மக்கள் அடிக்கடி டெஸ்ட் செய்து தெரிந்துகொள்ள அது தேவையில்லாத பதற்றத்தையே உண்டுபண்ணும். எனவே, ஆன்டிபாடி டெஸ்டுகளை மக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி அடிக்கடி செய்ய வேண்டியதில்லை" என்கிறார் டாக்டர் சம்பத்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள், விரிவான அலசல்களுக்கான விகடனின் சிறப்பு தேர்தல் களத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்க..!