Published:Updated:

`மழை... கொரோனா தாக்கத்தை அதிகப்படுத்துமா?' - மருத்துவரின் அறிவுரை!

மழையும் கொரோனாவும்
மழையும் கொரோனாவும்

கொரோனா தீவிரத்துக்கு வழிவகுக்குமா கோடை மழை? - மருத்துவர் பதில்

கோவிட் - 19 பரவுதலில், பல விதமான தகவல்களும், நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் இருந்துவருகின்றன. அவற்றில் முக்கியமானது, வெயிலில் / வெப்பத்தில் கொரோனா பரவுதல் குறைவாக இருக்கும் என்ற கருத்து.
மழை - கொரோனா வைரஸ்
மழை - கொரோனா வைரஸ்
``வெயிலுக்குக் கொரோனா கட்டுப்படும் என்று மக்கள் நம்பிக்கைகொள்ள வேண்டாம்!'' - உலக சுகாதார நிறுவனம்

முழுமையாக நிரூபிக்கப்படாத இந்தக் கருத்தை ஏற்க முடியாது என மருத்துவர்கள் சொல்லிவரும் சூழலில், இந்தக் கருத்தை பொய்யென்றும் அவர்களால் கூற முடியவில்லை. காரணம், வெப்பம் நிறைந்த ஒரு சில உலக நாடுகளில், கொரோனா பரவுதல் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. ஆகவே, அதை கோட்பாடாக முன்னிறுத்தி, கடந்த வாரங்களில், மருத்துவர் அல்லாத பலரும் `கொரோனா வெப்பத்தில் பரவாது' என சமூக வலைதளத்தில் சொல்லிவந்தனர். இந்த நிலையில், கடந்த இரண்டு மூன்று நாள்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மழை தொடங்கியதும், `மழையில் கொரோனா வேகமாகப் பரவிவிடுமோ' என்ற அச்சம் அனைவருக்கும் எழத்தொடங்கிவிட்டது.

தொற்றுநோயியல் மருத்துவர் சித்ராவிடம், மழை - வெயில் - கொரோனாவுக்கு இடையிலான தொடர்பு குறித்து கேட்டோம்.

தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா
தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா

``பருவநிலை மாற்றங்களுக்கும் கொரோனா பரவுதலுக்கும் தொடர்பிருப்பது இதுவரையில் எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், இப்போதைக்கு மக்கள் இம்மாதிரியான கருத்துகளை நம்ப வேண்டாம்.

`அதுதான் நிரூபிக்கப்படவில்லையே... ஒருவேளை மழைக்கு கொரோனா பரவிவிட்டால் என்ன செய்வது?' என சிலர் கேட்கலாம். கடந்த சில தினங்களாகப் பெய்துவருவது, கோடை மழை. கோடை மழை, தொடர்ச்சியான மழைக்காலத்தை நமக்குத் தராது.

என்றோ ஒரு நாள் பெய்யும் மழை, வைரஸ் பரவுதலையோ தொற்று அபாயத்தையோ எந்த விதத்திலும் அதிகரிக்காது.

ஆகவே, அதுபற்றி நினைத்து மக்கள் பயம் கொள்ள வேண்டாம்" என்றார்.

மழையோ வெயிலோ... அந்தந்தக் காலத்துக்கென சில தொற்றுகள் வேகமாகப் பரவுவது உண்டு. அந்த வகையில், இந்த கோடைக் காலத்திலும் சில சிக்கல்கள் ஏற்படலாம். ஏற்கெனவே நோய்த்தொற்று அதிகம் இருக்கும் சூழலில், சாதாரண தொற்று எதற்கும் இப்போது இடமளிப்பது சிக்கலாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தும்மல்
தும்மல்

எனில், இந்தக் கோடையை, கிருமி அபாயம் இன்றி பாதுகாப்பாக எப்படிக் கடப்பது?

மருத்துவர் சித்ராவிடமே கேட்டோம்.

``சுயசுத்தம் ரொம்ப முக்கியம். இந்தக் கோடையில், கூடுதலாக சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும். முகத்துக்கு கையைக் கொண்டுபோகும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். வீட்டு தரைத்தளத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

வெளி இடங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் நபர்கள், நிச்சயமாக வீட்டுக்கு வந்தவுடன் கை - கால் சுத்தத்தை உறுதிப்படுத்தவும். இந்த நேரத்தில், வீட்டு நபர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. சாதாரண சளி, இருமல் என்றாலும் அவர் உட்பட அந்த வீட்டில் இருப்பவர்கள் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். தும்மல், இருமல் ஏற்பட்டால் அருகிலிருக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். சுய மருத்துவம் மாபெரும் தவறு. அதனால் நீங்களாகவே எந்த மருந்தையும் வாங்கி உபயோகப்படுத்தாதீர்கள்.

உங்களுக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண இருமல் தும்மல்தானா, அல்லது வைரஸ் தொற்றா என்பதை நீங்களாக முடிவு செய்யாதீர்கள்.
தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா
மழை... கொரோனா
மழை... கொரோனா

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், புரதச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் - சி அதிகமிருக்கும் உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளவும். முக்கியமாக, பருப்பு வகைகள், பால், முட்டை, பழங்கள் - காய்கறிகள் ஆகியவை அவசியம். எந்த உணவும் நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் சூடாகச் சாப்பிடுங்கள்.

5G நெட்வொர்க்கால் கொரோனா பரவுமா ? புது கான்ஸ்பிரஸி தியரி சர்ச்சை | Corona
ஏற்கெனவே வேறு ஏதேனும் நோய் பாதிப்போடு இருப்பவர்கள், உங்கள் மருத்துவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள். எல்லாவற்றையும்விட முக்கியம், வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள். அதுமட்டுமே இப்போது உங்களை முழுமையாகக் காக்கும்" என்றார்.
அடுத்த கட்டுரைக்கு