Published:Updated:

`ஹெர்டு இம்யூனிட்டி' கோட்பாடு... இந்தியா வென்ற நோய்கள் முதல் பிரிட்டன் செய்த கொரோனா பிழைவரை!

Palace of Westminster in UK
Palace of Westminster in UK ( AP Photo / Kirsty Wigglesworth )

பெரும்பான்மையினரின் நோய்த்தடுப்பாற்றல், சிறுபான்மையினரையும் காக்கும் `ஹெர்டு இம்யூனிட்டி' கோட்பாடு!

உலகமே கோவிட் - 19 கொரோனாவிலிருந்து எப்படி மீள்வது என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், `கொரோனா இப்படித்தான் முடிவுக்கு வரும்' என மருத்துவர்கள், அறிவியலாளர்கள் எனப் பலரும் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்து வருகிறார்கள்.

அப்படியான ஒரு கோட்பாடுதான், ஹெர்டு இம்யூனிட்டி (Herd Immunity). அதென்ன ஹெர்டு இம்யூனிட்டி? கொரோனாவின் அழிவுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன?

நுரையீரல் மருத்துவர் பிரசன்னகுமார் தாமஸிடம் கேட்டோம்.

நுரையீரல் மருத்துவர் பிரசன்னகுமார் தாமஸ்
நுரையீரல் மருத்துவர் பிரசன்னகுமார் தாமஸ்

``மனித உடலில் எந்தவொரு நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், பாதிப்பு ஏற்பட்டவர்கள் குணமடைந்த பின்னர், குறிப்பிட்ட அந்த நோய்க்கிருமிக்கு எதிரான ஆன்டிபாடி அவர்கள் உடலில் இயற்கையாக உருவாகிவிடும். பிற்காலத்தில் மீண்டும் அதே பாதிப்பு அவர்களின் உடலில் ஏற்படாமலிருக்க அந்த ஆன்டிபாடி அவர்களுக்கு உதவும். நம் வீடுகளில், `ஒரு முறை அம்மை போட்டுவிட்டதென்றால், அடுத்த முறை அம்மை போடாது' என்று சொல்வோமில்லையா... அதே கான்செப்ட்தான்!

இந்த ஆன்டிபாடியானது, குறிப்பிட்ட ஒரு நோய் வருவதற்கு முன்பே, அதிலிருந்து தற்காத்துக்கொள்ள அந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படச்செய்ய செயற்கையாகவும் தரப்படலாம். பொதுவாக, உயிர்க்கொல்லி நோய்களுக்கு இப்படியான செயற்கை ஆன்டிபாடிகள் (தடுப்பூசி வடிவில்) தரப்படும்.

இந்தியாவில் பெரியம்மை, போலியோ போன்றவைக்கெல்லாம் அப்படித்தான் செயற்கையாக ஆன்டிபாடிகள் தரப்பட்டன, தரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கொரோனா தடுப்பு
கொரோனா தடுப்பு

மக்கள் அனைவருக்கும் இந்த ஆன்டிபாடிகள் தரப்பட்டுவிடும்பட்சத்தில், குறிப்பிட்ட நோயானது நாட்டிலிருந்து முழுமையாக அழிந்துவிடும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மக்கள் அனைவருக்குமே செயற்கை ஆன்டிபாடிகள் தரப்பட வேண்டும் என்றில்லை... பெரும்பான்மையினருக்குத் தரப்பட்டுவிட்டால்கூட போதும். மீதமுள்ள சிறுபான்மையினரும், நோய்க்கு எதிரானவர்களாகிவிடுவர்.

சில நேரங்களில், சில நோய்ப்பரவல்களின்போது பெரும்பான்மையினருக்கு ஆன்டிபாடிகள் இயற்கையாகவே உடலில் உருவாகிவிடும். இந்தப் பெரும்பான்மையினர் தாங்களும் குணமாகி, தங்களைச் சுற்றியுள்ள சிலரையும் தற்காத்துவிடுவர். இப்படியான வைரஸ்கள் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதால், சில நாள்களில் பரவல் தானாக வலுவிழந்து முடிவுக்கு வந்துவிடும்.

கொரோனா தற்காப்பு
கொரோனா தற்காப்பு

இப்படி, ஏற்கெனவே ஏற்பட்ட நோய்த்தொற்றாலோ, தடுப்பூசியாலோ நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பெரும்பான்மையான மக்கள் மூலமாக, அதைப் பெறாத சிறுபான்மையினரும் நோய்த்தொற்றிலிருந்து காக்கப்படுவதே, ஹெர்டு இம்யூனிட்டி கோட்பாடு" என்றார் டாக்டர் பிரசன்னகுமார் தாமஸ்.

நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவரின் ரத்த பிஸாஸ்மா ஆராய்ச்சி... கொரோனாவைக் கட்டுப்படுத்துமா?!

ஒருவேளை, மக்களுக்கு செயற்கையாகத் தரப்பட்டிருக்க வேண்டிய ஆன்டிபாடிகள் தரப்படாத சூழலில், பெரும்பான்மையானோர் குறிப்பிட்ட நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகிவிட்டால், அவர்களுக்கெல்லாம் இயற்கையாக ஆன்டிபாடிகள் உருவாகிவிடுமா?

``உருவாகலாம், உருவாகாமலும் போகலாம்" என்கிறார் பொது மருத்துவர் அர்ஷத் அகில்.
பொது மருத்துவர் அர்ஷத் அகில்.
பொது மருத்துவர் அர்ஷத் அகில்.

``இதில், ஆன்டிபாடிகள் உருவாகின்றனவா இல்லையா என்பதை சோதனை முயற்சியில் தெரிந்துகொள்வதெல்லாம் தவறு. காரணம், ஒருவேளை நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தால், அது அளவுக்கதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும். நோயாளிகளின் எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் போகும். சம்பந்தப்பட்ட நாட்டின் மருத்துவத் துறை, தன் நோயாளிகளைக் கையாள முடியாமல் திணறக்கூடிய சூழல்கூட உருவாகலாம். இந்த மருத்துவப் பிழை சூழல்தான், சமீபத்தில் பிரிட்டனில் நடந்தேறியுள்ளது (அது பற்றி கட்டுரையின் இறுதியில்)" என்று பேசத் தொடங்கினார் டாக்டர் அர்ஷத் அகில்.

``நாம் கடந்து வந்த பாதையில் அம்மை தொடங்கி மலேரியாவரை, அனைத்து நோய்களுக்குமே செயற்கையாக ஆன்டிபாடி தந்துதான், அந்தந்த நோய்க்கு எதிராக நம் மக்களை வலிமைப்படுத்தி உள்ளோம். ஒருவேளை இவற்றுக்குத் தடுப்பூசிகள் தரப்படாமல் போயிருந்தால், இன்றைக்கு அந்தக் கொள்ளைநோய்களுக்குக் கொள்ளைப் பேரை நாம் இழந்திருப்போம்.

கோவிட் - 19
கோவிட் - 19

எந்தவொரு நோய்க்குமே அதன் பரவும் விகிதத்தைப் பொறுத்துத்தான், அதற்கான ஆன்டிபாடி உடலில் இயற்கையாக உருவாக அனுமதிக்கலாமா அல்லது செயற்கையாக உடனடியாகத் தரப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். சாதாரண வைரஸ் வகை, தீவிர சிக்கல்களைத் தராத வைரஸ் என்றால், இயற்கையாக ஆன்டிபாடி உருவாக அனுமதிக்கலாம். ஆனால், இப்போது வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கோவிட் - 19 கொரோனாவுக்கு செயற்கை மருந்துதான் தரப்பட வேண்டும்.

̀ஆன்டிபாடியை செயற்கையாகத் தரலாமா, இயற்கையாக உருவாக அனுமதிக்கலாமா என்பதற்கான பதில் அது ஏற்படுத்தும் இறப்பு விகித்தத்திலிருந்து முடிவு செய்யப்பட வேண்டியது. அந்த வகையில் கோவிட் - 19 கொரோனா ஏற்படுத்திவரும் இறப்பு விகிதம் குறைவு என்பதால், இதற்கு இயற்கை ஆன்டிபாடி உருவாகக் காலம் தரப்படலாம்' என்று வாதிடுகிறார்கள் சிலர். ஆனால், `இறப்பு விகிதத்தின் அடிப்படையில் ஆன்டிபாடி குறித்து முடிவெடுக்கலாம்' என்ற கருத்து, முழுமையாக ஏற்கும் விஷயமல்ல. எந்தவொரு நோய்க்குமே அந்த நோயின் தாக்குதல் முற்றிலுமாக அழிந்த பின்னர்தான் இறப்பு விகிதம் கணக்கிடப்பட வேண்டும்.

கோவிட் - 19
கோவிட் - 19

அதுதான், முழுமையான தரவு முடிவாக இருக்கும். வைரஸ் பரவிக்கொண்டிருக்கும்போதே விகிதம் கணக்கிடப்பட்டால், அது அனுமானமாகத்தான் இருக்குமே தவிர, துல்லிய முடிவாக இருக்காது. இந்தக் கோட்பாடு, கோவிட் - 19 கொரோனா தாக்குதலுக்கும் பொருந்தும். அந்த வகையில், இந்த பேண்டெமிக்குக்கு செயற்கையாக ஆன்டிபாடி தரப்பட வேண்டும். அதாவது, தடுப்பூசி தேவைப்படுகிறது" என்றார் அவர்.

தடுப்பூசி, மருந்து, தாமதம்... கொரோனா சந்தேகங்களும் விளக்கங்களும்! #LongRead #FightCovid-19
கோவிட் - 19
கோவிட் - 19

இதில் சிக்கல் என்னவெனில், கோவிட் - 19 பாதிப்புக்கு தடுப்பூசி இன்னும் கண்டறியப்படவில்லை. ஒரு பக்கம் தடுப்பூசிக்கான ஆய்வுகள் அதிகரித்துக்கொண்டேயிருக்க, மற்றொரு பக்கம் நோயின் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆகவே தடுப்பூசிக்கு காத்திருக்கும் இந்தச் சூழலில், நாம் செய்ய வேண்டியதும், பின்பற்ற வேண்டியதும் சுயகட்டுப்பாடும் சமூக விலகலும் மட்டும்தான். முடிந்தவரை நம்மை நாம் சுத்தமாக வைத்துக்கொள்வோம். நோயிலிருந்து தற்காத்துக்கொள்வோம்.

கொரோனா தற்காப்பு
கொரோனா தற்காப்பு

சரி, பிரிட்டன் என்ன தவறிழைத்தது?

சோதனை முயற்சியாக, தனது மக்கள் தொகையில் பெரும்பான்மையானோரை நோய்த்தொற்றுக்கான இலக்காக ஆக அனுமதித்தது பிரிட்டன். `கோவிட் - 19 பாதிப்பு ஏற்படுபவர்களில், குறைவான சதவிகிதம் பேருக்கு மட்டும்தான் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது' என்ற தரவின் அடிப்படையில், தனது பெரும்பான்மை மக்கள் கோவிட் - 19 நோய்த்தொற்றால் லேசாகப் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை என நினைத்தனர் பிரிட்டனின் அறிவியலாளர்கள்.

லேசான பாதிப்பு தெரியவரும்போது, அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து குணப்படுத்திவிடலாம் என்றும், பெரும்பான்மை மக்களுக்கு முதற்கட்ட அடிப்படை சிகிச்சையளிப்பது சிரமமான காரியமாக இருக்காது எனவும் நினைத்தது பிரிட்டன். ஆனால் அவர்கள் எதிர்பாராவிதமாக, நோயாளிகள் எண்ணிக்கை மிக விரைவாகவும், தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கட்டுப்பாடின்றியும் அதிகரித்துவிட்டது. தனது பிழையை உணர்ந்த பிரிட்டன், `இயற்கையாக ஆன்டிபாடி உருவாக அனுமதிக்கலாம்' என்ற தனது ஹெர்டு இம்யூனிட்டி கோட்பாட்டை கைவிட்டது.

Representational Image
Representational Image

இப்போது அவர்களும், நம்மைப்போல லாக்டவுன் மற்றும் சமூக விலகலுக்குப் பழகிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும், முதல் கட்டத்தில் காட்டிய அலட்சியத்தின் விலையாக, இப்போது தொடர் ஆறு மாதகால லாக்டவுனுக்குள் சென்றுள்ளது பிரிட்டன்.

இவையாவும் இங்கு நிகழாமல் இருக்க, தடுப்பூசி வரும்வரையில், சுத்தமாக இருப்போம், விலகி இருப்போம், நம்மை நாமே தற்காத்துக்கொள்வோம்.
அடுத்த கட்டுரைக்கு