கோவிட்-19: ஹோமியோபதி மருந்தை சிறுநீரக தானமளித்தவர் எடுத்துக் கொள்ளலாமா? #DoubtOfCommonMan

மூலப்பொருளை பன்மடங்கு நீர்த்து வீரியப்படுத்தி மருந்து தயாரிக்கப்படுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.
கோவிட்-19 பெருந்தொற்று பரவியுள்ள சூழலில் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கு பல்வேறு மருந்துகளை மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைக்கிறது. அலோபதி மருத்துவம் அல்லாது இந்திய மருத்துவ முறைகளையும் ஆயுஷ் அமைச்சகம் அனுமதித்துள்ளது. அதன் பேரில் தமிழக அரசும் அதை அனுமதித்துள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளிலும் சிகிச்சையிலும் இந்திய மருத்துவ முறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஹோமியோபதி சிகிச்சையில் வழங்கப்படும் ஆர்சனிகம் ஆல்பம் - 30 சி என்ற மருந்து கோவிட்-19 தடுப்புக்கு உதவுமா, சிறுநீரக தானம் செய்தவர்கள் இந்த மருந்தைச் சாப்பிடலாமா என்று விகடனின் Doubt of Common man பகுதியில் செ.கௌதம் என்ற வாசகர் கேட்டிருந்தார்.

வாசகரின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் ஹோமியோபதி மருத்துவர் ஞானசம்பந்தம்:
"ஆர்சனிகம் ஆல்பம் என்ற ஹோமியோபதி மருந்து மத்திய, மாநில மாநில அரசுகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பலர் அதை எடுத்துக்கொண்டு பயன் பெற்றுள்ளனர். மருந்தை எடுத்துக்கொண்டவர்களின் கருத்துகளின் அடிப்படையில், 98 சதவிகிதம் பேருக்கு கோவிட்-19 தொற்று பாதிக்கப்படவில்லை.
ஆர்சனிகம் ஆல்பம் என்ற மருந்து ஆர்சனிக் ஆக்ஸைடு என்ற மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மூலப்பொருளைப் பன்மடங்கு நீர்த்து விரியப்படுத்தி மருந்து தயாரிக்கப்படுவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது. சிறுநீரக தானம் செய்தவர்கள், பிற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து மக்களும் எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக மருந்துகள் உடலில் ரத்தத்தில் கலந்து செயலாற்றத் தொடங்கும். ஆர்சனிகம் ஆல்பம் உள்ளிட்ட ஹோமியோபதி மருந்துகள் நரம்பு வழியாகச் செயலாற்றத் தொடங்கும். நரம்பில் தாக்கத்தை ஏற்படுத்தி மூளைக்குச் சென்றடையும். மூளையிலிருந்து தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு செயல்களைத் தூண்டிவிடும். அதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது.
எங்கு கிடைக்கும்?
தமிழக அரசின் 106 ஹோமியோபதி மருந்தகங்கள், அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்களிடம் இந்த மருந்துகள் கிடைக்கும்.

யாருக்கு, எவ்வளவு?
சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை ஒரே அளவு மருந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதத்துக்கு மூன்று நாள்கள் ஒரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆர்சனிகம் ஆல்பம் 30 சைஸ் என்றால் 4 உருண்டைகள், ஆர்சனிகம் ஆல்பம் 60 சைஸ் மருந்து என்றால் ஓர் உருண்டை எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிடுவதால் ஒரு மாதத்துக்கு நோயெதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும். மீண்டும் அடுத்த மாதம் இதே அளவு எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.
இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை இங்கே பதிவு செய்யவும்.