Published:Updated:

ஸ்டென்ட், பைபாஸ் சர்ஜரி இதயநோய்களைத் தடுக்குமா? - ஓர் அலர்ட்! #WorldHeartDay

இதயநோய்களைப் பற்றி பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. சிலர் ஸ்டென்ட், பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கப்படுவோம் என்ற போலியான நம்பிக்கையையும், வேறு சிலர் இவை இரண்டுமே தேவையற்றவை என்ற அலட்சியமும் கொண்டுள்ளனர்.

நவீன உலகத்தில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அதிகரித்துள்ள காரணங்களால் இதயநோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இன்றளவும் உலகில் இறப்புக்கான முதன்மை காரணமாகத் திகழ்வது இதயநோய் பாதிப்புதான். உலகளவில் ஓராண்டுக்கு1.79 கோடி பேர் இதயநோய்களால் உயிரிழக்கின்றனர்.

Heart attack
Heart attack

இதயநோய்களைப் பற்றி பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. சிலர் ஸ்டென்ட், பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கப்படுவோம் என்ற போலியான நம்பிக்கையையும், வேறு சிலர் இவை இரண்டுமே தேவையற்றவை என்ற அலட்சியமும் கொண்டுள்ளனர்.

ஆனால், உண்மையிலேயே இந்த இரண்டு எண்ணங்களுமே தவறானவை. எந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு முன் நாம் அதன் சாதக பாதகங்களைத் தீர ஆராய வேண்டும்.

தேவையற்ற சிகிச்சைகள்!

இக்காலத்தில் இதய அடைப்பு நோய்களுக்கு சற்று அதிகமாக ஸ்டென்ட் வைப்பதும், பைபாஸ் அறுவைசிகிச்சைகளும் தேவையில்லாமல் செய்யப்படுகின்றன என்பதும் உண்மைதான். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. சரியான உலகளாவிய விதிமுறைகள் இல்லாமை, மருத்துவம் வணிகம் ஆகிப்போனது, கார்ப்பரேட் கைகளில் மருத்துவமனைகள் சென்றது மற்றும் சில நேரங்களில் நோயாளியின் விருப்பத்துக்கு ஏற்பவும் இவை செய்யப்படுகின்றன.

Surgery
Surgery

ஸ்டென்ட்களும் பைபாஸ் அறுவைசிகிச்சைகளும் உண்மையாகவே இந்த அளவுக்குத் தேவைப்படுகின்றனவா என்று ஆராய 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் மிகப்பெரிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அதில் நீண்டகால இதய நோயாளிகளுக்கு ஸ்டென்ட் பொருத்துவது மற்றும் பைபாஸ் அறுவைசிகிச்சைகளால் எந்தவொரு பெரிய பலனும் ஏற்பட்டதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, நீண்ட நாள் இதய அடைப்பு நோயாளிகளுக்கு மருந்துகள் மட்டுமே போதுமானவை என்று தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதய நோய்கள்:

இதய நோய்களில் பல வகையுண்டு. அதில் இதய ரத்தக்குழாய் அடைப்பு (கொரோனரி ஆர்ட்டரி டிசீஸ்) என்பதுதான் முக்கியமானது. இதயத்துக்கு மூன்று முக்கியமான ரத்தக்குழாய்கள் உண்டு. அவற்றில் அடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு வலி ஏற்படலாம். சிலருக்கு எந்த அறிகுறியும் தெரியாமல்கூட இதய ரத்தக்குழாய் அடைப்பு இருக்கலாம். ஒருவர் முழு உடல் பரிசோதனை செய்துகொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்குப் பரிசோதனையில் இதய ரத்தக்குழாய் அடைப்பு இருப்பதுபோல் தெரிந்தால் உடனே ஆஞ்சியோகிராம் செய்துகொள்ள துடிக்கத் தேவை இல்லை.

அப்படியே ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து அதில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால் உடனே ஸ்டென்ட் வைத்துக்கொள்ள முனையத் தேவையில்லை. சிறிது காலம் மருந்துகளைச் சாப்பிட்டுப் பார்க்கலாம். ஏன்? வலி இருந்தால்கூட மாத்திரைகளைச் சாப்பிட்டு வலியைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில், மேற்கண்ட ஆராய்ச்சி, ஸ்டென்ட் வைப்பதாலோ, பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொள்வதாலோ எதிர்வரும் மாரடைப்புகளைத் தவிர்க்க முடியாது. வலியை மட்டுமே குறைக்க முடியும் என்று சொல்கிறது.

இதற்கு காரணம் இதய அடைப்பு நோய் என்பது அந்த அடைப்பு ஏற்பட்ட ஒரு பகுதியில் மட்டும் இருப்பதில்லை. மொத்த இதயத்தையும் அது பாதித்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் உடலில் உள்ள அனைத்து ரத்த நாளங்களின் பாதிப்பின் ஒரு பகுதிதான் இதய அடைப்பு நோய். ஆகவே, அதற்கு மாத்திரைகளை உண்டு மொத்த உடலையும் நாம் சரிசெய்ய வேண்டும். ஆனால், இந்தக் கருத்து அவசர நிலையான மாரடைப்பின்போது (Heart Attack) பொருந்தாது.

மாரடைப்பு என்பது ஓர் அவசர மருத்துவ நிலை. அப்போது உடனே ஸ்டென்ட் வைத்துக்கொள்வதும் தேவைப்பட்டால் பைபாஸ் செய்துகொள்வதும் அவசியம். மாரடைப்பையும், நீண்டநாள் இதய அடைப்பு நோயையும் (coronary artery disease) நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.

Dr.Dhileepan Selvarajan
Dr.Dhileepan Selvarajan

என்ன செய்ய வேண்டும்?

ஒருவருக்கு இதய அடைப்பு நோய் இருக்குமாயின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எத்தனை மாத்திரைகள் தேவைப்பட்டாலும் பரவாயில்லை. இந்தப் பிரச்னைகளுக்கான மருந்துகளின் பக்கவிளைவுகள் மிக மிகக் குறைவு மற்றும் பாதுகாப்பானவை.

மேலும்,

> புகைப்பழக்கத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்.

> சரியான சரிவிகித உணவுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

> தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

> நல்ல உறக்கம் இருக்க வேண்டும்.

ஸ்டென்ட் வைப்பது அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொள்வதற்கு முன் உங்களுடைய மருத்துவரிடம் அதன் அவசியம் மற்றும் பலன் ஆகியவற்றைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். தேவைப்பட்டால் இன்னோர் இதய மருத்துவரிடம் இரண்டாம் ஆலோசனை பெறவும் தயங்கக் கூடாது.

Healthy Heart
Healthy Heart
நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்!

செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம். அதன் முழக்கமாக, ``இதயநோயை முறியடிக்க இதயத்தைப் பயன்படுத்துவோம்" என்று உள்ளது. ஆகவே, நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு மற்றவர்களும் இதயநோயை எதிர்கொள்ள உறுதுணையாக இருப்போம். இதயம் காப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு