Published:Updated:

காற்றில் பரவியிருக்கும் வைரஸ் கண்களைத் தாக்கலாம்! - கண் மருத்துவர் கூறும் தீர்வு

Eye glasses
Eye glasses

கண்ணாடி, கூலர்ஸ் அணிவது உண்மையிலேயே கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்குமா?

வீட்டுக்குள்ளேயே இருந்தால் கொரோனவை விரட்டிவிடலாம்! இந்த நம்பிக்கையில்தான் ஊரடங்கு உத்தரவை முழுமூச்சில் கடைப்பிடித்தோம். ஆனால், விளைவு? ஊரடங்கும் நீண்டுகொண்டே செல்கிறது. அதற்கு இணையாக தினம்தினம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இனி வீட்டில் முடங்கிக்கிடந்தால் கொரோனா தொற்று ஏற்பட்டு இறப்பதைக் காட்டிலும், பசியாலேயே இறந்துவிடுவோம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்! இதுவரை கொரோனவோடு போராடி வந்த நாம் இந்த எச்சரிக்கையை மனதில்கொண்டு `கொரோனாவோடு வாழப் பழகுவோம்' என்ற அகிம்சை ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளோம். இது பலனளிக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தடுப்பு மருந்து கண்டறியும்வரை `கொரோனாவோடு வாழ்வோம்' என்பதே இப்போது நம்மிடமிருக்கும் ஒரே தீர்வு. இதை உணர்ந்துகொண்ட மாநில, மத்திய அரசுகளும் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த லாக்டெளன் தடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி வருகின்றன. சில அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன.

corona
corona

விரைவில் பேருந்துகளும் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கூடிய சீக்கிரத்தில் வழக்கமான சமூக வாழ்க்கையை கொரோனாவுடன் சேர்ந்து மேற்கொள்ளவிருக்கும் நமக்கு இப்போது தேவையானவை எல்லாம் தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே.

கொரோனா பாதிப்பு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமா? - பாலியல் மருத்துவரின் விளக்கம்

கொரோனா வைரஸ், தொற்றுள்ளவர்களின் எச்சில் திவலைகள் வழியாகவும், தொடுதல் மூலமாகவும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் தொற்று பரவுகிறது என்று ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுக் கூறப்பட்டது. இதன்பின் மாஸ்க், சானிடைசர் இரண்டுக்கும் உலகளவில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. எச்சில் திவலைகள் வழியாக உடலுக்குள் செல்லும் வைரஸை தடுக்க மாஸ்க்கையும், தொடுதல் மூலமாக வைரஸ் பரவுவதைத் தடுக்க சானிடைசரையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கத் தொடங்கினார்கள்.

eye glasses
eye glasses

கொரோனா வைரஸ் மூக்கு, வாய் வழியாகப் பரவுவதைப் போலவே கண்களின் வழியாகவும் உடலுக்குள் செல்லும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் கண்களின் வழியே பரவாமல் இருக்க கண்ணாடி அல்லது கூலர்ஸ் எனப்படும் சன் கிளாஸை அணியத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகச் சாலையோரங்களில் உள்ள கண்ணாடி கடைகளில் கூலர்ஸ் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

கண்ணாடி, கூலர்ஸ் அணிவது உண்மையிலேயே கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்குமா... கடைகளில் சன் கிளாஸ் வாங்கும்போது கவனிக்க வேணடிய விஷயங்கள் எவை என்று கண் மருத்துவர் சரவணனிடம் கேட்டோம்.

கண் மருத்துவர் சரவணன்
கண் மருத்துவர் சரவணன்

``கொரோனா வைரஸ் ஒருவருக்குக் கண்களின் வழியே பரவி நோய்த் தொற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். இதுவரை அப்படி நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறது. இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நோய்த் தொற்று ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பையும் நாமே வழங்கக் கூடாது.

கொரோனா தொற்று ஏற்பட்டவரின் இருமல், தும்மலின் வழியே வெளிப்படும் எச்சில் நீர்த்திவலைகளில் வைரஸ்கள் இருக்கும். இந்த நீர்த் திவலைகளை ஒருவர் தொட்டுவிட்டு கண், வாய் மூக்கைத் தொடும்போதும், நீர்த் திவலைகள் பரவியிருக்கும் காற்றை சுவாசிக்கும்போதும் வைரஸ் உடலுக்குள் சென்று நோயைப் பரப்பும்.

corona transmission
corona transmission
தொடரும் கொரோனா வார்டு தற்கொலைகள்! காரணம் என்ன? - மனநல மருத்துவர்கள் விளக்கம்

அதேபோல் இந்த எச்சில் நீர்த்திவலைகள் தன் ஈரப்பதத்தை இழந்திருந்தாலும் வைரஸ்கள் சிறு சிறு படிமங்களாக மாறி காற்றில் கலந்திருக்கும். இது ஏரோசால் (Aerosol) எனப்படும். ஏரோசாலிலும் வைரஸ்கள் நோயைப் பரப்பும் வீரியத்துடனேயே இருக்கும். இந்தக் காற்று சுவாசம் வழியாக உடலுக்குள் சென்றாலோ, கண்களில் பட்டாலோ வைரஸ் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.

ஏற்கெனவே நாம் மாஸ்க், ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்தித் வைரஸ் நம் உடலுக்குள் செல்வதிலிருந்து ஓரளவு தற்காத்துக்கொண்டு வருகிறோம். ஆனால், வைரஸ் கலந்த நீர்த்திவலைகள் அல்லது காற்று கண்களில் பட்டாலும் தொற்றை ஏற்படுத்தும் என்பதால் இப்போது வெளியில் செல்லும்போது கண்ணாடி அல்லது கூலர்ஸ் அணிவது நல்லதுதான்.

eye goggles
eye goggles

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கண்களுக்குப் பாதுகாப்புக் கண்ணாடி (eye goggles) அணிகிறார்கள். மற்றவர்களும் பாதுகாப்புக் கண்ணாடிதான் அணிய வேண்டும் என்றில்லை. கண்களை முழுவதுமாக மறைக்கக்கூடிய சன் கிளாஸ் அணிந்தாலே போதும். தற்போது வெயில் காலம் என்பதால் அதிகப்படியான வெயிலில் இருந்து கண்களைப் பாதுகாக்கவும் இது உதவும்.

அதிக விலையில் இருக்கும், பிராண்டட் கூலர்ஸ்தான் வாங்கி அணிய வேண்டும் என்றில்லை. குறைவான விலையில் உள்ள சன் கிளாஸே போதுமானது. ஆனால், அவற்றில் தேய்மானம், விரிசல் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பார்வை பாதிக்கப்படலாம். பிளாஸ்டிக்கில் கூலர்ஸ் அணிந்தால் அவற்றை அவ்வப்போது தண்ணீர் கொண்டு துடைத்துச் சுத்தம் செய்துகொள்ளலாம்.

eye glasses
eye glasses

நீங்கள் அணியும் கண்ணாடி தூசு படிந்து அசுத்தமாக இருக்கக் கூடாது. கண்ணாடியைக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தூய்மையான மெல்லிய காட்டன் துணி கொண்டு துடைத்து மீண்டும் அணிந்துகொள்ள வேண்டும். எந்த நிறத்தில் வேண்டுமானாலும் கூலர்ஸ் அணியலாம். நீங்கள் அணியும் கண்ணாடி எதிரே உள்ள காட்சிகளை மறைக்காமல் இருக்க வேண்டும்" என்றார் கண் மருத்துவர் சரவணன்.

அடுத்த கட்டுரைக்கு