Published:Updated:

கொரோனா காலம்... கண் அறுவை சிகிச்சை செய்வோரின் கவனத்துக்கு!

கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் கண் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் நோய்த்தொற்றோ, வேறு ஏதாவது பிரச்னை ஏற்படுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.

தேசிய கண்தான தினமான (National Eye Donation Day) செப்டம்பர் 8-ஐ முன்னிட்டு தன்னுடைய கண்களைத் தானம் செய்வதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கண் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்திலும் கையெழுத்திட்டுள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பேசிய அவர் `நமது நாட்டில் சுமார் 68 லட்சம் நபர்கள் கருவிழி பாதிப்பால் பார்வை இழந்துள்ளனர். அதில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் இளைஞர்களுமே' என்று குறிப்பிட்டுள்ளார்.

கண் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவம்
கண் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவம்

பார்வை பறிபோவதற்கான முக்கிய காரணமாக இருப்பது கருவிழிகளைப் பாதிக்கும் கண்புரை நோய். கண்புரை பிரச்னைக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்கவில்லை என்றால் பார்வைத் திறன் முழுவதுமாகப் பறிபோகலாம். 2020-ம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் சுமார் 80 லட்சம் மக்கள் கண்புரை நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவல், ஊரடங்கு போன்ற காரணங்களால் கடந்த ஆறு மாத காலமாகக் கண்புரை மற்றும் கண் தொடர்பான அனைத்து அறுவை சிகிச்சைகளும் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. செய்தே ஆக வேண்டிய அவசர அறுவைசிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது லாக்டௌனில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்புரை அறுவை சிகிச்சைகளை (Cataract surgery) தற்போது செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கண்புரை அறுவை சிகிச்சை
கண்புரை அறுவை சிகிச்சை

கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்நிலையில் கேட்டராக்ட் அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாமா... கண் தொடர்பான பிரச்னைகளுக்கு அறுவைசிகிச்சை செய்துகொள்வோர்கள் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்... போன்ற வழிகாட்டுதல்கள் குறித்து கண் மருத்துவர் சரவணனிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கொரோனா தொற்று ஏற்பட்டவரின் இருமல், தும்மலின் வழியே வெளிப்படும் எச்சில் நீர்த்திவலைகளில் வைரஸ்கள் இருக்கும். இந்த நீர்த்திவலைகளை ஒருவர் தொட்டுவிட்டு கண், வாய், மூக்கைத் தொடும்போதும், நீர்த்திவலைகள் பரவியிருக்கும் காற்றை சுவாசிக்கும்போதும் வைரஸ் உடலுக்குள் சென்று நோயைப் பரப்பும். அதேபோல் இந்த எச்சில் நீர்த்திவலைகள் தன் ஈரப்பதத்தை இழந்திருந்தாலும் வைரஸ்கள் சிறுசிறு படிமங்களாக மாறி காற்றில் கலந்திருக்கும். இது ஏரோசால் (Aerosol) எனப்படும். ஏரோசாலிலும் வைரஸ்கள் நோய் பரப்பும் வீரியத்துடனேயே இருக்கும்.

கண் மருத்துவர் சரவணன்
கண் மருத்துவர் சரவணன்

கண், காது, தொண்டை மற்றும் மூக்குபோன்ற பகுதிகள் மிகவும் மென்மையானவை. அதே நேரத்தில் அதிக உணர்வுமிக்கவை. இந்தப் பகுதிகளில் அறுவைசிகிச்சை செய்யப்படும்போது காற்றில் ஏரோசால் வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் கண்களிலோ, மூக்கிலோ பட நேரிட்டால், வைரஸ் உடலுக்குள் சென்று நோய்த்தொற்றை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே லாக்டௌனில் கண், மூக்கு, தொண்டை சார்ந்த அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு அரசு தடை விதித்திருந்தது. தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களால் காத்திருக்கும் சிக்கல்... எதிர்கொள்வது எப்படி?

இதுவரையில் கண் சார்ந்த பிரச்னைகளுக்குத் தேவைப்பட்ட அறுவை சிகிச்சைகளைத் தள்ளிப்போட்டவர்கள் இனி அவற்றைச் செய்துகொள்ளலாம். குறிப்பாக, கேட்டராக்ட் எனப்படும் கண்புரைக்கான அறுவைசிகிச்சையைத் தாமதப்படுத்தாமல் செய்துகொள்வது நல்லது. நம் கண்களில் உள்ள லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்படுவது கண்புரை அல்லது கேட்டராக்ட் (cataract) எனப்படுகிறது. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த நிலை மிகக்குறைந்த வயதிலேயே ஏற்படுகிறது. பார்வை இழப்புக்கான முக்கிய காரணங்களில், கண்புரை நோயும் ஒன்று. கண்புரை ஏற்படும்போது ஆரம்பத்திலேயே அதை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் கண்புரை தீவிர நிலைய அடைந்து பார்வைத்திறனை இழக்க நேரிடலாம்.

கண் அழுத்தநோய்
கண் அழுத்தநோய்

கண்புரைக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விடும் பட்சத்தில் கிளாகோமா (Glaucoma) எனப்படும் கண் அழுத்தநோயும் ஏற்படலாம். கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே கிளாகோமா. பொதுவாக, அக்குவஸ் ஹூயுமர் (Aqueous humour) என்ற தெளிவான திரவமானது கண்ணின் முன்பகுதிக்குள் சுற்றி வரும். இந்தத் திரவம் அளவில் அதிகமாக உற்பத்தியானாலோ, முறையாக இது வெளியேறாமல் இருந்தாலோ கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் பார்வை நரம்புகள் பாதிப்படையும். கிளாகோமா பிரச்னை ஏற்படும்.

நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy) ஏற்படலாம். கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இதற்கான சிகிச்சையையும் தாமதப்படுத்தாமல் எடுத்துக்கொள்வது நல்லது.

கண்
கண்

கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் கண் அறுவைசிகிச்சை செய்துகொண்டால் நோய்த்தொற்றோ, வேறு ஏதாவது பிரச்னை ஏற்படுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. மருத்துவமனைகளில் தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்புடனேயே அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய் பரவ வாய்ப்பேயில்லை. அறுவை சிகிச்சை தேவைப்படும் கண் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் கொரோனா பயத்தால் அவற்றைத் தள்ளிப்போடாமல், மருத்துவரிடம் வழிகாட்டலுடன் உரிய நேரத்தில் அறுவைசிகிச்சையைச் செய்துகொள்ளலாம்" என்றார் கண் மருத்துவர் சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு