Election bannerElection banner
Published:Updated:

இந்தியாவில் கண்டறியப்பட்ட `Double mutant' வைரஸ்... நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

Indians wearing face masks
Indians wearing face masks ( AP Photo/Channi Anand )

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்தத் தகவல் பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் இரண்டு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்தத் தகவல் பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது.

PIB Statement
PIB Statement

PIB வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்:

கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து அதன் வைரஸின் மரபியல் தகவல்களை ஆராயும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்தியாவிலுள்ள 10 தேசிய ஆய்வகங்களை ஒன்றிணைத்து டிசம்பரில் ஓர் அமைப்பை உருவாக்கியிருந்தது.

அந்த அமைப்பானது இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் வகைகள் மற்றும் அவற்றின் தன்மைகளை ஆராய்ந்து வருகிறது. வைரஸ்களின் மரபணுவில் மாறுபாடு ஏற்படுவது என்பது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் நடைபெறும் ஒன்றுதான்.

771 வகை தன்மை மாறிய வைரஸ்

இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிய பிறகு 18 மாநிலங்களிலிருந்து கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 10,787 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 736 மாதிரிகளில் இருந்த வைரஸ் வகை பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தவை. 34 வகை தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தவை. தொற்று ஏற்பட்ட சர்வதேசப் பயணிகள், அவர்களிடம் தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளைப் பரிசோதித்தில் இவை கண்டறியப்பட்டுள்ளன.

Novel Coronavirus SARS-CoV-2
Novel Coronavirus SARS-CoV-2
Photo: AP

இரட்டை மாறுபாடு!

மகாராஷ்டிராவில் செய்யப்பட்ட ஆய்வில் 2020 டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட வைரஸ் வகைகளைவிட தன்மை மாறிய இரண்டு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளன. E484Q, L452R என்ற இரட்டை மாறுபாடு (Double Mutant variant) வைரஸ்கள் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அதிக பாதிப்பையும் ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் சேகரிக்கப்பட்ட 15-20 சதவிகித மாதிரிகளில் இந்தப் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகையோடு இது ஒத்துப்போகவில்லை.

கேரளாவில் பழைய வைரஸ்!

கேரளாவில் 14 மாவட்டங்களிலும் 2,032 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 123 மாதிரிகளில் N440K என்ற வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் ஏற்கெனவே ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும், பிரிட்டன், டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்ட வகையைச் சேர்ந்ததுதான்.

A health worker takes a nasal swab to test for COVID-19
A health worker takes a nasal swab to test for COVID-19
Manish Swarup

பரவல் அதிகரித்ததற்கு புதிய வைரஸ் காரணமா?

தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட இரண்டு புதிய வகை வைரஸ்தான் காரணமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தொடர்ந்து வைரஸின் மரபணு வரிசை ஆராய்ச்சி மற்றும் தொற்றுநோயியல் ஆராய்ச்சிக்குப் பிறகே அது தெரியவரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பொதுமக்களுக்கு எந்த ஒரு தெளிவையும் கொடுக்கவில்லை. மாறாக சற்று குழப்பும் வகையில் அமைந்துள்ளது. இந்த அறிக்கையின் நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன என்று தமிழக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்:

``மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ள தன்மை மாறிய இரண்டு வைரஸ்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் ஏற்கெனவே நோய்த் தொற்று ஏற்பட்டு உடலில் ஆன்டிபாடி உற்பத்தியானவர்களையும் பாதிக்கும் தன்மையுடையவை. இருந்தாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதவை. சிறிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிடும்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி
பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி

அதனால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். மேலும் ஏற்கெனவே நாம் பின்பற்றும் சிகிச்சை முறைகளால் இந்த வகை வைரஸ்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். தடுப்பூசியும் இந்த வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும்.

புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல் ஆகிய பணிகளை அதிகரிக்க வேண்டும். மேலும் தொற்று பாதித்தவர்களுக்கு தேசிய சிகிச்சை நெறிமுறைகளின்படி சிகிச்சையளிக்க வேண்டும்.

அறிக்கையில் குழப்பம்

அந்த அறிக்கையில் இரட்டை மாறுபாடு கொண்ட வைரஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது ஒரே வைரஸ் இரண்டு முறை தன்மை மாறியிருக்கிறதா அல்லது ஒருமுறை தன்மைமாறி, அதிலிருந்து மற்றொரு தன்மை மாறியிருக்கிறதா என்பதை விளக்கவில்லை. இரட்டை மாறுபாடு வைரஸ் (Double Mutant variant) என்கிற சொற்கூறு இரண்டு வகையான மாறுபாடுகளுக்கும் பயன்படுத்தப்படும்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Illustration/Peter Hamlin
மாதவிடாய் நாள்களில் கோவிட் தடுப்பூசி போடலாமா? - தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களும் விளக்கங்களும் #FAQ

பொது மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பொது மக்கள் மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டு தேவையற்ற பயமும் கொள்ள வேண்டாம். அதே சமயம் கவனக்குறைவாகவும் இருக்கக் கூடாது. முகக்கவசம், தனிமனித இடைவெளி, கை கழுவுதல், காற்றோட்டமான இடங்களில் வசித்தல் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஐந்தாவதாக தடுப்பூசியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி வருவதற்கு முன்பு எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தோம். தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகு அதைப் போட்டுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறோம். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றினால் பாதுகாப்பாக இந்தப் பெருந்தொற்று காலத்தைக் கடக்க முடியும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு