Published:Updated:

மிதமான மற்றும் தீவிர கோவிட்டிற்கான DRDO-வின் 2-DG மருந்து; விரைவில் விற்பனை துவக்கம்!

கொரோனா
கொரோனா

``கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான எங்களது போர்ட்ஃபோலியோவில் 2-DG மருந்தும் தற்போது இணைந்திருக்கிறது. பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இம்மருந்து முக்கியப் பங்காற்றும் என்று நம்புகிறோம்".

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி (Dr Reddy's Laboratories Ltd) மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படும் 2-DG என்கிற வாய்வழி மருந்தை வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ-வின் (Defence Research and Development Organisation) ஆய்வகமான இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலைடு சயின்ஸஸ் (Institute of Nuclear Medicine and Allied Sciences-INMAS) நிறுவனத்துடன் இணைந்து இந்த மருந்தை ரெட்டீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

2-DG என்பது 2-டிஆக்ஸி–D–குளுக்கோஸ் (2-deoxy-D-glucose) என்பதன் சுருக்கம். இந்த மருந்தின் வணிக ரீதியிலான விற்பனையை நேற்றுத் தொடங்கி வைத்திருக்கும் ரெட்டீஸ் நிறுவனம், இந்தியா முழுவதிலும் இருக்கின்ற முக்கியமான அரசு மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த மருந்தை விநியோகம் செய்யவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak
`நோயாளிகளின் ஆக்ஸிஜன் தேவையை இது குறைக்கும்!' - DRDO-வின் 2-deoxy-D-glucose மருந்து

தொடக்க வாரங்களில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற முக்கியமான மெட்ரோ நகரங்களில் உள்ள மருத்துவ மனைகளில் இந்த மருந்து கிடைப்பதற்கு வழிவகை செய்வதோடு, விரைவில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் இந்த மருந்தைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடப்போவதாகவும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

2-DG மருந்து அடங்கிய ஒரு பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அரசு அமைப்புகளுக்கு மானிய விலையில் இந்த மருந்தை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரெட்டீஸ் லேபரட்டரி தெரிவிக்கிறது.

``எங்களது நீண்டகால தொழில் பங்குதாரரான டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி நிறுவனத்துடன் இணைந்து கொரோனா பெருந்தொற்று சிகிச்சை மருந்தை உருவாக்குவதற்கான பணியில் ஈடுபட்டது குறித்து, நாங்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம்” என்று டிஆர்டிஓ-வின் தலைவர் மற்றும் செயலாளருமான டாக்டர்.ஜி.சதீஷ் ரெட்டி கூறியிருக்கிறார்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Anupam Nath

மிதமான அல்லது தீவிரமான கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இணை சிகிச்சையாக இந்த மருந்து நோயாளிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``கொரோனோ பெருந்தொற்றுக்கு எதிரான எங்களது போர்ட்ஃபோலியோவில் 2-DG மருந்தும் தற்போது இணைந்திருக்கிறது. பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இம்மருந்து முக்கியப் பங்காற்றும் என்று நம்புகிறோம். டிஆர்டிஓ-வுடன் இணைந்து பணியாற்றியதில் எங்களுக்கும் மகிழ்ச்சி” என்று ரெட்டீஸ் லேபரட்டரி நிறுவனத்தின் தலைவரான கல்லம் சதீஷ் ரெட்டியும் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு