
டாக்டர் ருத்ரன்
நோய்த் தொற்று இப்போது நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று, அதேபோல் உணர்ச்சிகளின் தொற்றும் உண்டு. கூட இருப்பவர்களின் உணர்ச்சிகள் நாம் அறியாமலேயே நம்மிடம் பிரதிபலிப்பதைத்தான் உணர்ச்சித்தொற்று என்று தற்கால மனவியலில் கூறுகிறார்கள். நோய்த்தொற்று எப்படி நெருக்கமாகப் பழகுபவர்களிடமிருந்து நம்மை அதிகம் பாதிக்குமோ அப்படித்தான் உணர்ச்சித் தொற்றும். ``உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்பதுபோல் இது.
இப்போதிருக்கும் சமூக முடக்க காலத்தில், பலரும் நெருக்கமாக அதிக நேரம் ஒன்றாய் இருக்கும்போது, இவ்வகை உணர்ச்சித் தொற்று அதிகமாகத் தென்படும்.
வீட்டில் எல்லாரும் தொலைக்காட்சியில் நகைச்சுவையான படம் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கும்போது, ஒருவருக்குத் தொலைபேசியில் ஒரு பிரச்னை குறித்துச் செய்தி வருகிறது என்றால், அவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலைச் சொல்லி அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியான மனநிலையைக் கெடுக்க வேண்டாம் என்று மௌனமாக இருந்தாலும் அவருடைய இறுக்கம் விரைவில் அங்கே இருக்கும் எல்லாருக்கும் தொற்றிவிடும். ஓர் அலுவலகத்தில் பணிபுரிவோரிடையேகூட இம்மாதிரி உணர்ச்சித்தொற்று ஏற்படும்.
சில நேரங்களில் அந்நியர்களின் உணர்ச்சிகளும் நம்மைத் தொற்றும். ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கும்போது பார்வையாளர்களிடையே தொற்றிக்கொள்ளும் உற்சாகம், தெருவில் இருப்பவரின் மரணத்தின் போது எழும் அழுகை மூலம் தொற்றும் சோகம் என்று பல வகைகளில் உணர்ச்சிகளின் தொற்று நம் அன்றாட வாழ்வில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

உடல் நோய்த்தொற்று பலருக்கு ஏற்பட்டாலும் சிலருக்கு மட்டுமே அது ஒரு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதுபோல், மனத்தில் ஏற்படும் உணர்ச்சித்தொற்றும் நபருக்கு நபர் மாறுபடும். உடலின் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து எப்படி நோயின் தாக்கம் மாறுபடுகிறதோ அதுபோலவே மனத்தின் வலிமையைப் பொறுத்து உணர்ச்சித் தொற்றும் தீவிரமாய்த் தாக்கும் அல்லது விரைவில் பாதிப்பு ஏற்படுத்தாமல் போய்விடும். மனத்தின் வலிமை என்பது முதிர்ச்சி, அனுபவத்தின் மூலம் வந்த கற்றல், இயல்பாக அமைந்துள்ள மனத்தின் தற்காப்புச் செயல்பாடுகள் ஆகியவற்றால் உருவாகும். இதைப் பொறுத்துதான் சிலர் உணர்ச்சித்தொற்றிலிருந்து எளிதில், விரைவில் இயல்புக்குத் திரும்புவதும் சாத்தியமாகிறது.
ஆனால், எல்லா உணர்ச்சிகளும் எளிதில் தொற்றுவதில்லை. மற்றவர்களின் கோபமோ சோகமோ நம்மை உடனே தொற்றிக்கொள்ளும் அளவுக்கு, மகிழ்ச்சி தொற்றுவதில்லை. எதிர்மறையானதுதான் மனத்தில் உடனே பதியும். பாதிக்கக் கூடியவற்றிலிருந்துதான் உடனே தப்பிக்க வேண்டும் என்பது மனித மனத்தின் இயல்பான தற்காப்பு அனிச்சை நடவடிக்கை.
மனநிலை வேறு, உணர்ச்சி வேறு. சூழலைப் பொறுத்து மகிழ்ச்சி, கோபம், வருத்தம் நம் மனநிலையாக அமையும். மனநிலை என்பது சில நிமிடங்களில் மாறிவிடக் கூடியது அல்ல, அது மெதுவாகத்தான் மாறும். உணர்ச்சிகள் அப்படியல்ல. அவை நம்மை மீறி வருபவை. அவற்றின் தீவிரமும் சிறிது நேரமே இருக்கும். உணர்ச்சிகள் எல்லாருக்கும் பொதுவானவை, கால-கலாசார-சூழலைப் பொறுத்து அவை வெளிப்படும் விதங்கள்தான் ஒருவருக்கொருவர் மாறுபடும்.

எதிரே இருப்பவர் நம்மைப் பார்த்துப் புன்னகைத்ததும் நாமும் புன்னகைப்பது இயல்பு வாழ்க்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாகரிகம். இது ஒரு சமூக இங்கிதம், இதில் உணர்ச்சித்தொற்று கிடையாது. ஆனால், எதிரே ஒருவர் அளவுக்கு மீறியோ அவசியமின்றியோ நம்மிடம் கோபத்தைக் காட்டினால் நமக்கும் கோபம் வரும். இது ஓர் உணர்ச்சித்தொற்று. முதலில் எதிர் இருப்பவர் உணர்ச்சியை மூளை புரிந்து கொள்கிறது, அடுத்து அது மனம் வழி அநேகமாக அதேபோன்ற உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இப்படி ஓர் அனிச்சையான கற்றலும் பிரதிபலித்தலும்தான் உணர்ச்சித்தொற்றை உருவாக்கும். நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சி நம் அனுபவம், சமூகச் சூழல், பின்னணி, சமூகக் கல்வி ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஆனாலும் இவ்வகையில் நம்மிடம் தொற்றி, நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்ச்சி வெகுநேரம் நீடிக்கும் மனநிலையாக மாறாது. அடுத்த ஒன்றில் நம் கவனம் செல்லும்போது, தொற்றிய உணர்ச்சி அகன்றுவிடும்.
உணர்ச்சித்தொற்று வேறு; கும்பல் மனநிலை வேறு. கும்பல் மனநிலை ஒரு பொது ஆவேசம், உள்ளிருக்கும் கோபங்களின் வடிகால். இதுவும் தற்காலிகமானதுதான், கூட்டத்தில் சுய அடையாளம் தொலைப்பவர்க்கு ஆவேசமும் வெறியும் எளிதில் தொற்றும்.
உணர்ச்சித்தொற்று ஏற்பட ஒருவரது உடல்மொழி, பேச்சு, முகபாவம்கூட அவசியமில்லை, வெறும் எழுதப்பட்ட வார்த்தைகளே போதும் என்பதுதான் சமீப மனவியல் ஆய்வுகளின் ஆரம்பக்கட்ட முடிவு - இப்படி வரும் தொற்றினை இணைய உணர்ச்சித் தொற்று என்று குறிப்பிடுகிறார்கள். இயல்பாக வரும் உணர்ச்சித்தொற்று போலவே இணைய உணர்ச்சித்தொற்றின் ஆயுளும் மிகக் கொஞ்ச நேரம்தான். படித்தவுடன் சிரிப்பு, கோபம் அல்லது வருத்தம் வந்தாலும் அது நீடித்து, மனநிலையில் தாக்கம் ஏற்படுத்தாது என்பதும் நாம் எல்லாரும் அனுபவித்ததுதான். `மீம்’ சிரிப்பை வரவழைப்பதும், புரளிகள் நம்முள் பரபரப்பை ஏற்படுத்துவதும் இப்படித்தான்.

வருத்தமோ கோபமோ சிரிப்போ உண்டாக்கும் பதிவுகளில் நம்முள் உணர்ச்சிகளைத் தூண்டும் இணையப் பதிவை உருவாக்குபவர் அதே அளவு தீவிரமாக உணர்ச்சிவசப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை, அதற்கான கற்பனைத் திறனும் சொல்லாற்றலும் அவர்களுக்கு இருந்தாலே போதும் - நாம் உணர்ச்சி வசப்படுவோம். இங்கே சொல்பவரது உணர்ச்சியைவிட சொல்லப்படுவதுதான் நம் உணர்ச்சியைத் தூண்டும்.
உணர்ச்சிகள் நம் கட்டுப்பாடின்றி மனத்துள் உருவாகுபவை என்பதால் அவற்றை நாம் தவிர்க்க முடியாது; ஆனால் நிதானமான அணுகுமுறை வாழ்வின் வழக்கமாய் ஆகிவிட்டால் உருவாகும் உணர்ச்சிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, அவற்றின் வெளிப்பாட்டைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எதிரே உள்ளவரது உணர்ச்சி நம்முள் அதே உணர்ச்சியைத் தூண்டுவதை அறிந்தவுடன் நம் கவனத்தை திசை திருப்பிக்கொள்ள முடிந்தால் உணர்ச்சித் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்.
(மயக்கம் தெளிவோம்)