
டாக்டர் ருத்ரன்
தள்ளி நில்லுங்கள், தொடாதீர்கள், காய்ச்சலும் இருமலும் இருந்தால் உள்ளே வராதீர்கள் எனும் விதிமுறைகள் தற்காப்புக்காக என்றில்லாமல் சகித்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் என்பதுபோல் ஆகிவிட்டன.

தொற்று மற்றும் மரண எண்ணிக்கை கூடிக்கொண்டே போனாலும், பெரும்பான்மை மக்கள் சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவே துடிக்கிறார்கள். அடைபட்டுக் கிடப்பதில் வரும் வெறுமையும், பொருளாதாரச் சிக்கலால் வரும் விரக்தியும் மக்களைத் தெருக்களுக்குத் தள்ளுகின்றன.
உடலளவில் கடைப்பிடித்து வந்த சமூகவிலகல், மனத்தளவிலும் சிலரிடம் பதிந்துவிட்டது. நேரில் பார்க்காமல் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த உறவுகள் நட்புகள் யாவும் ஒரு குறுஞ்செய்திக் குசலமாகக் குறுகி விட்டன.
மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எல்லாருக்கும் ஆர்வமும் அவசரமும் இருந்தாலும், அது அவ்வளவு எளிதானது அல்ல. வாழ்க்கை இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒருவிதப் புது அட்டவணைக்குப் பழகிவிட்டது. வேலை செய்வதில், வெளியே செல்வதில், உணவில், உரையாடலில், உறவுகளுடன் நெருங்குவதில், குழந்தைகளுடன் அதிக நேரம் வீட்டில் இருப்பதில் பல வகை மாற்றங்கள் வந்துவிட்டன.

ஆரம்பத்தில் வீட்டிலிருந்தே வேலை என்பது சிலருக்குப் பிடித்தும், பலருக்குச் சௌகர்யமாகவும் இருந்தது. இவர்களில் பலர், அடுத்த மாத வருமானத்தைப் பற்றிய கவலை அதிகம் இல்லாதவர்கள், ஓரளவாவது சேமிப்பு உள்ளவர்கள். இவர்களுக்கும் நாட்பட நாட்பட, அடைபட்டுக் கிடக்கும் வீட்டை விட்டு வெளியே போகும் எண்ணமே பரவலாக மேலோங்கியது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு வேலை கூடியது. பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், வீட்டை நிர்வகிக்கும் பணியும் சமையல் வேலையோடு கூடியது. அவர்களில் சிலருக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நிலைமையால் மனநெருக்கடி கூடியது. சிலருக்கு இணையவழிக் கல்வி கூடுதல் இறுக்கமாகியது.
வேலைக்கு வெளியே போனால் தான் வருமானம் என்றிருப்போர் முதல் இரண்டு வாரங்கள் ‘இது எல்லார்க்கும் நல்லது’ என்று சகித்துக் கொண்டார்கள், ஒரு மாதத்திற்கு மேல் ஆனவுடன் இனி செலவுகளைச் சமாளிப்பது எப்படி என்று கவலைப்பட ஆரம்பித்தார்கள் - அவர்களில் சிலர் இனி இப்படித்தான் வாழ்க்கை என்று சில சமரசங்கள் செய்துகொண்டார்கள், சிலர் ‘ஜாக்கிரதையா போய்ட்டு வரலாம்’ என்று துணிந்தார்கள். வேலைகள் குறைந்தன, ஊதியங்கள் குறைந்தன, பொருளாதார இறுக்கம் மனத்துள் சோர்வையும் அழுத்தத்தையும் கொண்டுவர ஆரம்பித்தபோது, இவர்களுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் ஒரு சோர்வையும் உண்டாக்கியது. இது உலகம் முழுக்க இருக்கும் நிலைமை. இப்படியே முடங்கிக் கிடப்பதும் சாத்தியமில்லை. உலகின் கடைசி கோவிட் தொற்றுள்ளவரும் குணமடையும்வரை காத்திருக்க முடியாதுதான். ஆனால் எல்லாமே பழையபடி மாறும் என்பது சாத்தியமில்லை. வருங்காலம் பற்றி யாருக்குமே தெளிவான ஒரு புரிந்துணர்வு இல்லை. எதிலும் ஒரு நிச்சயமின்மை நிலவுகிறது.
புரியாத தெரியாத அனைத்துமே மனத்துள் ஒரு திகைப்பை உருவாக்கும். இந்த நேரத்தில்தான் பலர் தங்களுக்கு ‘நெகட்டிவ்’ எண்ணங்கள் அதிகம் வருவதாகப் புலம்புகிறார்கள். எதிர்மறை எண்ணங்கள் பொதுவாக உணர்வுகளும் அனுபவங்களும் நம் மூளைக்குச் சொல்லும் எச்சரிக்கைச் செய்திகள். கோபம், சோகம், அருவருப்பு, அச்சம் ஆகிய உணர்ச்சிகள் மேலெழும் போதுதான் அவற்றை நாம் ‘நெகட்டிவ்’ என்று தீர்மானிக்கிறோம்.
மொழிக்கு அப்பாற்பட்டது உணர்ச்சி; பல நேரங்களில் வேறு வார்த்தைகள் இல்லாமல் உணர்ச்சிகளை நமக்குத் தெரிந்த பெயர்கள் மூலம் அடையாளம் காண்கிறோம் - அந்த முகத்து இந்தப் பெயர் என்பது போல. முகமும் பெயரும் மீறி அந்த மனிதனுக்கு இருக்கும் பல்வேறு பரிமாணங்கள் பார்த்தவுடனோ, பெயர் கேட்டவுடனோ நம் மனத்தில் தோன்றுவதில்லை. முகமும் பெயரும் உண்டாக்கும் உணர்ச்சியை வைத்துதான் நல்லவன் கெட்டவன், வேண்டியவன் வேண்டாதவன் என்று தீர்மானித்துப் பரிச்சயங்களை மேலோட்டமாக வைத்துக் கொள்கிறோம். இதுபோலத்தான் கோபம் நமக்குப் பரிச்சயமான உணர்ச்சி, ஆனால் அதனுள்ளே அச்சம், வருத்தம், வெட்கம் என்பவையும் இருக்கும் என்பதை நாம் உணர்வதில்லை. இதனால்தான் உணர்ச்சிகளைச் சரியாகப் புரிந்துகொண்டு வாழ்வை அடுத்தகட்டத்துக்கு நாம் எடுத்துச் செல்வதில்லை. வருங்காலச் செயல்பாடுகளைத் தீர்மானிக்க இப்போது நம்முள் எழும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது உதவும்.

நாம் தவறிழைக்காமல் அநீதி நேர்ந்தால் வரும் கோபம் வேறுவகை. நம் இயல்பு வாழ்வில் பெரும்பாலும் கோபம் இயலாமையிலும், சுயமதிப்பீடு குறையும்போதும் வரும். நம் குறைகள் வெளித்தெரிந்தால் வெட்கம் வரும், அதை மறைக்க கோபமும் வரும். அந்நேரம் நம்மிடம் அனுதாபம் காட்டுவோர் மீதும் எரிச்சல் வரும். தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் இவ்வகைக் கோபம், மனத்தை முரட்டுத்தனமாய் மாற்றித் தன் செயல்களை ஆராய்ந்து திருத்திக்கொள்ள விடாது. ஆனால் கோபம் வேறு வகையில் உதவும். தன்னைத்தானே கண்டித்துக் கொண்டு, தோல்வியிலிருந்து மீண்டெழ ஓர் உத்வேகமாகவும் மாறும்.
தவறாகச் செய்துவிட்டோம் என்றதும் குற்றவுணர்வும் வெட்கமும் வரும். நம்மிடமே நமக்கு ஏமாற்றம் வரும். இதுவும் சுயமதிப்பீடு தவறு என்று உணர்வதால்தான். நம் வெட்கம் வெளித்தெரிந்தால், எதிர் இருப்பவர் கோபத்தையும் அது குறைக்கும்; நமக்கே தெரியும் குற்றவுணர்வு மீண்டும் அதே தவற்றினைத் தடுக்க உதவும்.
அச்சம் நம்மைச் செயலிழக்கச் செய்யும் அதே நேரம் எது ஆபத்து, எது தவறான அணுகுமுறை, ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்பதையும் நமக்கு அறிவுறுத்தும். வெட்கத்தையும் அச்சத்தையும் ஆராயும்போதுதான் சுயபுரிந்துணர்வு நிகழும். இவை இரண்டுமே நம் எதிர்பார்ப்பு தவறென்று உணர்த்துபவை. உடனடியாகத் தவற்றினை மறுத்துக் கோபப்படுவதோ, வருந்தி ஒடுங்கிவிடுவதோ அனிச்சையாக நிகழ்ந்தாலும், பின்னர் அமைதியாக இருக்கும்போது நம்மை ஆராய்ந்தால் அடுத்து அதே தவறு நேராது.
நம் செயல்பாடுகளின் விளைவுகள் ஏமாற்றம் அளித்தால் `இதை அப்படிச் செய்திருக்கலாமே’ என்று தோன்றும். அப்போது ‘ஐயோ செய்யவில்லையே’ என்று புலம்பாமல், ‘ஏன் செய்யவில்லை’ என்று யோசித்தால் அடுத்தமுறை பிழையாகாது - தொற்றின் முடக்கத்தில் சேமிக்கவில்லையே என்று புலம்பாமல், இனி எந்தச் செலவுகளைக் குறைக்கலாம் என்று திட்டமிடுவதுபோல.
மீண்டும் வெளியே செல்வதும், வாழ்க்கையைத் தொடர்வதும் நிச்சயம் - அப்போது நம்மை, நம் உணர்ச்சிகளை, செயல்முறைகளைக் கொஞ்சம் நிதானமாய்ப் பரிசீலித்தால், இக்கட்டான எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியும்.டாக்டர் ருத்ரன்
யதார்த்தம் அவநம்பிக்கையின் இருட்டாகக் கவிந்திருக்கும்போது, சிந்தித்துச் செயல்படுவதே பயன்படுத்த வேண்டிய கைவிளக்கு.
- மயக்கம் தெளிவோம்