Published:Updated:

`விசாகப்பட்டின விபத்தின் ஸ்டைரீன் வாயு... மீளமுடியாத உபாதைகளை ஏற்படுத்தலாம்!’ - மருத்துவர் விளக்கம்

விஷவாயு கசிவு
விஷவாயு கசிவு ( Twitter/@IamKalyanRaksha )

காற்றில் கலந்துவிட்ட ஸ்டைரீன் விஷ வாயுவை சுவாசிக்க நேர்ந்தால் விலங்குகளுக்கு கல்லீரல் சேதம், காது கேளாமை மற்றும் விந்து சேதத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் நடந்த ரசாயன வாயுக்கசிவு,1984-ல் நிகழ்ந்த போபால் கொடுந்துயரை நினைவுபடுத்துகிறது. ஆலையிலிருந்து கசிந்த ஸ்டைரீன் வாயுவை சுவாசித்த, சுற்றுப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், கண் எரிச்சலுடனும், மூச்சுவிட சிரமப்பட்டும் கொண்டிருந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நச்சு வாயுவுக்கு இதுவரை 11 உயிர்கள் பலியாகியுள்ளது பெரும்சோகம்.

விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்

எளிதில் வாயுவாக மாறக்கூடிய நிறமற்ற திரவமான ஸ்டைரீன், உயிரிழப்புவரை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது. எத்தில் பென்சீன் எனவும் வினைல் பென்சீன் எனவும் அழைக்கப்படும் பென்சீன் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்டைரீன், பாலிஸ்ட்ரீன், ரப்பர் மற்றும் ப்ளாஸ்டிக் தயாரிப்பில் பெரும் பங்குவகிக்கிறது.

`சாலையில் மயங்கி விழுந்த மக்கள்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை’ -ஆந்திராவைப் பதற வைத்த விஷவாயு கசிவு

காற்றில் கலந்துவிட்ட ஸ்டைரீன் விஷ வாயுவை சுவாசிக்க நேர்ந்தால் விலங்குகளுக்கு கல்லீரல் சேதம், காது கேளாமை மற்றும் விந்து சேதத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகபட்ச பாதிப்பாக, விலங்குகளுக்கு சளி சவ்வு எரிச்சல் போன்ற சுவாசக் கோளாறுகள், கண் எரிச்சல், சோர்வு, இரைப்பை மற்றும் குடலில் பாதிப்பு, மேலும் உடல் சமநிலை சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடியவை.

டாக்டர் பிரசன்ன குமார் தாமஸ்
டாக்டர் பிரசன்ன குமார் தாமஸ்

கசிவின்போது வாயுவை உள்ளிழுத்த மனிதர்களுக்கு ஸ்டைரீன் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து, நுரையீரல் நிபுணர் டாக்டர் பிரசன்ன குமார் தாமஸ் விளக்கினார். ''பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சிறுநீர் மற்றும் திசுக்களை பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் உடலில் எந்தளவுக்கு ஸ்டைரீன் ரசாயனம் கலந்துள்ளது என்பதை சில மணிநேரங்களில் மருத்துவர்கள் கண்டறிவார்கள். இது முக்கியமாக சுவாச மண்டலத்தைச் சேதப்படுத்துகிறது, தோலை அதிகம் பாதிப்படையச் செய்கின்றது. சுவாச மண்டலத்தை விரைவாகப் பாதிப்பதால் ஆக்சிஜன் கிடைக்காமல் போவதுடன் உயிரிழப்புவரை ஏற்படுத்துகிறது.

`நள்ளிரவில் மீண்டும் கசிவு; குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட PTBC ரசாயனம்!’ #VizagGasLeak அப்டேட்ஸ்

ஸ்டைரீன் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் வாயுத் தாக்க பின்விளைவுகள் இல்லாமல் மீண்டு வர முடியும். என்றாலும், வாயுத் தாக்குதலின் வீரியத்தைப் பொறுத்து, மீளக்கூடிய மற்றும் மீள முடியாத உபாதைகளை உடலில் அது ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. போபால் கொடுந்துயர் அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது. ஸ்டைரீனால் உடலில் ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் குறித்து மருத்துவர்கள் புரிந்துகொள்ள முயன்றுவருகிறார்கள்'' என்றார் டாக்டர் பிரசன்ன குமார் தாமஸ்.

விஷவாயு கசிவு
விஷவாயு கசிவு

சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையும் (Department of health and human services- DHSS) தேசிய நச்சுயியல் திட்டமும் (National toxicology program - NTP) வெளியிட்ட 12வது பதிப்பு அறிக்கையில், ஸ்டைரீனை புற்றுநோய்க் காரணி எனப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு