Published:Updated:

அலட்சியத்தால் வளர்ந்த 20 கிலோ புற்றுநோய்க்கட்டி அகற்றம்! - சென்னை அரசு மருத்துவர்கள் சாதனை

பெண்ணின் வயிற்றிலிருந்த 20 கிலோ கட்டியை அகற்றி, எழும்பூர் அரசு மருத்துவர்கள் சாதனை!

கட்டி அகற்றப்பட்ட பின் மருத்துவர் குழுவுடன் ரதி.
கட்டி அகற்றப்பட்ட பின் மருத்துவர் குழுவுடன் ரதி.

சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில், பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 20 கிலோ எடை கொண்ட சினைப்பைக் கட்டியொன்று, அகற்றப்பட்டுள்ளது. மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சீதாலட்சுமி தலைமையில், இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சம்பத்குமாரியிடம் இதுகுறித்துப் பேசினோம்.

மருத்துவர் சம்பத்குமாரி
மருத்துவர் சம்பத்குமாரி

``சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பெண் 51 வயது ரதி. ஐந்து நாள்களுக்கு முன்பு, இவரின் வயிற்றிலிருந்த 20 கிலோ கட்டியை அகற்றி எங்கள் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். அறுவைசிகிச்சைக்கு முன் 50 கிலோ எடை இருந்தார் ரதி. இப்போது 30 கிலோ இருக்கிறார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, ரதியின் உடல்நலனில் இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இருப்பினும் பல வருடங்களாகத் தன் பாதிப்பைக் கவனிக்காமல் இருந்ததால், ரதிக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு மேற்கொண்டு கீமோதெரபி சிகிச்சை தர இருக்கிறோம்" என்றார்.

சிகிச்சைக்கு முன் ரதி.
சிகிச்சைக்கு முன் ரதி.

மருத்துவமனையின் துணை இயக்குநர் தமிழ்ச்செல்வியிடமும் இதுகுறித்துப் பேசினோம்.

``பெண்களுக்கு, அவர்களின் மெனோபாஸுக்கு முந்தைய காலகட்டமான பெரிமெனோபாஸின் (Perimenopause) போது (45 முதல் 55 வயதுக்குள்ளான காலகட்டத்தில்), சினைப்பை சார்ந்த பிரச்னைகள் வர நிறைய வாய்ப்புகள் உண்டு. அப்படியான ஒரு பாதிப்புதான், ரதிக்கும் ஏற்பட்டிருந்தது. இவருக்கு ஏற்பட்டிருந்தது, `சினைப்பை புற்றுநோய்க் கட்டி' பிரச்னை.

அகற்றிய கட்டியுடன் மருத்துவர் குழு
அகற்றிய கட்டியுடன் மருத்துவர் குழு

புற்றுநோய்க்கட்டி என்பதால் அதை அகற்றும்போது, உடைந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனத்துடன் இருந்தோம். காரணம், அது உடைந்துவிட்டால் புற்றுநோய் திசுக்கள் உடல் முழுக்கப் பரவிவிடக்கூடும்.

Vikatan

ஒரு பிரச்னையை, எந்தளவுக்கு உதாசீனப்படுத்துகிறோமோ, அந்தளவுக்கு அதன் பாதிப்பு தீவிரமாகும். ரதி 7 வருடங்களாகத் தன்னுடைய கட்டியை உதாசீனப்படுத்தியுள்ளார். அதன் விளைவாகக் கட்டி சினைப்பையைத் தாண்டி அருகிலிருக்கும் கல்லீரல், மண்ணீரல், பெருங்குடல் என எல்லாப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இப்போதும்கூட, வலி தாங்க முடியாமல், வேறுவழியின்றிதான் ரதி மருத்துவர்களை நாடியுள்ளார்.

சிகிச்சைக்குப் பின் மருத்துவர் சம்பத்குமாரி மற்றும் மருத்துவர் தமிழ்ச்செல்வியுடன், ரதி.
சிகிச்சைக்குப் பின் மருத்துவர் சம்பத்குமாரி மற்றும் மருத்துவர் தமிழ்ச்செல்வியுடன், ரதி.

பெண்கள் தங்கள் உடல்நலனில் எந்தளவு அக்கறையின்மையோடு இருக்கிறார்கள் என்பதற்கு இவரே உதாரணம். பெண்கள் தங்களது உடல்நலனில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்பதை, அனைத்து மருத்துவர்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் அவர்.