Published:Updated:

`எதிர்காலத்தை இவர்களிடமிருந்து காண்போம்!’ - 100 வயதைக் கடந்தும் கொரோனாவிலிருந்து மீளும் முதியவர்கள்

முதியவர்கள்
முதியவர்கள்

உலக அளவில் 100 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வருகின்றனர் என்ற செய்தி பரவலடையத் தொடங்கியது. இது, பல தரப்பு மக்களையும் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவோம் என்ற உத்வேகத்தையும் புதுத்தெம்பையும் அளித்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளின் மக்களோடு 100 தினங்களைக் கடந்து பயணித்துக் கொண்டு வருகிறது. சீனாவில் இருந்து மற்ற உலக நாடுகளுக்கு வைரஸ் பரவிய முதல் சில வாரங்களில் பெரும்பாலானோர் அதன் வீரியத்தைப் பொருட்படுத்தாமல் அன்றாட வாழ்வை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, வைரஸ் பரவலின் வீரியம் உலக நாடுகளின் சுகாதார நிறுவனங்கள் யூகித்ததைவிட, பன்மடங்கு பெருகிய சூழல் உருவானதோடு, சீனா, இத்தாலி, ஸ்பெயின் அமெரிக்கா போன்ற நாடுகளின் இறப்பு விகிதம் உலக நாடுகளை கதிகலங்கச் செய்தது. வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்து இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, படிப்படியாகப் பன்னாட்டுப் போக்குவரத்துகளை அனைத்து நாடுகளும் முடக்கியதோடு, தேசிய அளவிலான ஊரடங்குகளைப் பல நாடுகளும் அமல்படுத்தின.

Be (கொரோனா) Negative!
Be (கொரோனா) Negative!

இதனிடையே, வைரஸ் பரவலானது வயதானவர்களிடம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படியே, பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் விகிதத்தில் வயதானவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இந்தச் சூழலில், உலக அளவில் 100 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வருகின்றனர் என்ற செய்தி பரவலடைய தொடங்கியது. இது, பல தரப்பு மக்களையும் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவோம் என்ற உத்வேகத்தையும் புதுத்தெம்பையும் அளித்துள்ளது.

`எதிர்காலத்தை இவர்களிடமிருந்து காண்போம்!’ - 100 வயதைக் கடந்தும் கொரோனாவிலிருந்து மீளும் முதியவர்கள்

கொரோனா வைரஸின் தாக்குதலில் மிகுந்த பாதிப்பு அடைந்த நாடுகளுள் ஒன்றான ஸ்பெயினில் 113 வயதுடைய மரியா பிரன்யாஸ் மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி தற்போது பூரண குணமடைந்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்து தப்பிப் பிழைத்த உலகின் மிக முதுமையான மனிதர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். ஸ்பெயின் நாட்டின் ஓலோட் மாகாணத்தின் சாண்ட் மரியா டெல் துரா எனும் பராமரிப்பு விடுதியில் சுமார் 20 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பிரயான்ஸ், கடந்த மாதம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். பராமரிப்பு விடுதியில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அனைவருக்கும் அங்கேயே மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்ற வாரம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துவிட்டதாகப் பராமரிப்பு விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 1907-ம் ஆண்டு சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தார் எனவும் முதல் உலகப் போரின்போது அங்கிருந்து ஸ்பெயினுக்கு படகின் உதவியோடு இடம்பெயர்ந்தார் எனச் சுவாரஸ்யமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும், 1918 முதல் 1919 ஆண்டு காலகட்டத்தில் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சலிலிருந்தும், 1936 முதல் 1939 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தப்பிப் பிழைத்தவர் இவர் என்பதும் கூடுதல் தகவல்.

`எதிர்காலத்தை இவர்களிடமிருந்து காண்போம்!’ - 100 வயதைக் கடந்தும் கொரோனாவிலிருந்து மீளும் முதியவர்கள்

அடுத்தபடியாக 103 வயது முடிவடைந்துள்ள நிலையில், அமெரிக்க முதியவரான லாப்ஷீஸ் கடந்த மார்ச் மாதம் தனது 104-வது பிறந்தநாளைத் தனக்கு பிடித்த சாக்லேட் கேக், பீஸ்ஸாவுடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் 104 வயதுடைய அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை அற்றவர்களாக உள்ளோம் எனக் குடும்ப உறுப்பினர்களால் கவலை தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கொரோனா வைரஸுடன் போராடி வெற்றி கண்டுள்ளார். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் முன் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதலில் அவருக்கு நிமோனியா இருப்பதாக தெரிவித்து பின், சில பரிசோதனைகளுக்குப் பின் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். இதனிடையே, முறையான சிகிச்சைக்குப் பின் அவர் படிப்படியாகக் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

`எதிர்காலத்தை இவர்களிடமிருந்து காண்போம்!’ - 100 வயதைக் கடந்தும் கொரோனாவிலிருந்து மீளும் முதியவர்கள்

வைரஸ் பரவத் தொடங்கிய இடமாகக் கருதப்படும் சீனாவின் வுகான் மாகாணத்தில் 100 வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய டேய் எனும் குடும்பப் பெயரை கொண்ட முதியவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமாகி கடந்த பிப்ரவரி மாதம் நலமுடன் வீடு திருப்பினார். அவர் கொரோனா தொற்றுக்கு மட்டுமல்லாமல், அல்ஸைமர், உயர் ரத்த அழுத்தம், இதயச் செயலிழப்பு போன்ற உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் மேட்ரன் லி லாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அவரின் இந்த உற்சாகத்துக்கு காரணம், டேய் மருத்துவமனையில் இருக்கும்போது அவரது 92 வயதான மனைவி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அவரை விரைவில் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அவர் உற்சாகத்துடன் காணப்பட்டதாக செவிலியர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய இத்தாலியர்களைக் கண்டு உலக நாடுகள் அனைத்துமே தங்களது அனுதாபங்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது, வைரஸ் தொற்று மற்றும் இறப்பு விகிதம் படிபப்டியாகக் குறைந்துள்ளது. இதனிடையே, 101 வயதுடைய இத்தாலியின் ரிமினி மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்துள்ளார். அவர் குறித்து பேசிய ரிமினி மாகாண மேயர் குளோரியா லிசி, 1919-ம் ஆண்டு பிறந்த இந்த முதியவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தற்போது குணமடைந்துள்ளார். 100 வயதைக் கடந்த முதியவர் குணமடைந்துள்ள நிலையில், இந்த நபரின் மீட்பில் நம் அனைவருக்குமான எதிர்காலத்தைக் கண்டுள்ளோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

`எதிர்காலத்தை இவர்களிடமிருந்து காண்போம்!’ - 100 வயதைக் கடந்தும் கொரோனாவிலிருந்து மீளும் முதியவர்கள்

இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட நாட்டின் மூத்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மத்திய டெல்லியின் நவாப்கஞ்சியில் வசிக்கும் இவர் கடந்த மாதம் தொற்று உறுதி செய்யப்பட்டு டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 1-ம் தேதி வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பியுள்ளார். தன் மகனிடமிருந்து தொற்று பரவியதாகவும், மகன் தற்போது வரை சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தெரிய வருகிறது. “ஒரு நோயாளி குணமடையும் போதெல்லாம் அது எங்களுக்கு பெருமையான தருணம். முக்தருக்கு 100 வயது என்றாலும்கூட, அவரின் இந்த மீட்பு நம் அனைவருக்குமான ஊக்கம்” என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவர்களைப் போல நம் முந்தைய தலைமுறையினர் நிகழும் நூற்றாண்டின் பெருந்தொற்றாக உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வரும் மனதைக் கவரும் சுவாரஸ்ய நிகழ்வுகள் நாம் வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கான புத்துணர்வையும் நம்பிக்கையையும் தருவது திண்ணம்.

அடுத்த கட்டுரைக்கு