Published:Updated:

எலான் மஸ்க் குறிப்பிட்ட `அஸ்பெர்கர் குறைபாடு' - சாதனையாளர்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

 Elon Musk
News
Elon Musk ( Will Heath/NBC via AP )

தற்போது வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிற எலானை, சமூகம் பல தடவை கேலி செய்திருக்கிறது, செய்துகொண்டும் இருக்கிறது.

அம்மா என்கிற உறவு மிகச்சிறப்பாக அமைந்துவிட்டால், எப்படிப்பட்ட குறைபாட்டிலிருந்தும் மீண்டுவிடலாம்; சக்ஸஸ்ஃபுல் தொழிலதிபராகிவிடலாம் என்பதை உலகத்துக்கு அறிவித்திருக்கிறார் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk). அடிப்படையில் பொறியாளரான எலான் அமெரிக்காவில் இயங்குகிற டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி.ஈ.ஓ. 49 வயதான எலான், கடந்த வருடம் நவம்பர் மாதம், பில்கேட்ஸை பின் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்
Will Heath/NBC via AP

தற்போது வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிற எலானை, சமூகம் பல தடவை கேலி செய்திருக்கிறது, செய்துகொண்டும் இருக்கிறது. தன்னுடைய டெஸ்லா கார் நிறுவனத்தில் பேட்டரியால் இயங்கும் கார்களை எலன் தயாரித்தபோதும் செவ்வாய்க்கிரகத்தில் மக்களைக் குடியேற்றுவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தபோதும் எலனை கிண்டலாகப் பார்க்காதவர்கள், கேலி செய்யாதவர்கள் மிக மிகக் குறைவு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தப் பெருந்தொற்று நேரத்திலும் எலானின் கார்களின் விற்பனை ஓஹோவென இருப்பதால்தான், பில்கேட்ஸை பின் தள்ளினார் எலான் மஸ்க். தவிர, நாசாவின் அங்கீகாரத்துடன் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்கிற பெருமையும் எலானின் `ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்துக்குத்தான் சென்ற வருடம் கிடைத்தது. என்றாலும், எலானின் ட்வீட்கள் இப்போதும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் குழப்பமானவையாகவே இருக்கும். கோவிட் தொற்று தொடர்பாக எலான் போட்ட பல ட்வீட்கள் அந்த வகைதான். இதனால் இப்போதும் பொதுமக்களின் கேலிக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் தன் அம்மாவுடன்
எலான் மஸ்க் தன் அம்மாவுடன்
Will Heath/NBC via AP

இரண்டு நாள்களாக இவரைப்பற்றித்தான் எல்லா ஊடகங்களும் பேசிக்கொண்டிருக்கின்றன. என்ன காரணம் தெரியுமா? அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில், Saturday Night Live அல்லது SNL என்கிற நிகழ்ச்சியொன்று 1975-ம் வருடம் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 46-வது சீஸன் நடந்துகொண்டிருக்கிறது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்துகொள்வார்கள். தற்போது நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் இதில், நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் சென்ற வாரம் கலந்துகொண்ட எலான் மஸ்க் தன்னைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எனக்கு ஆட்டிசத்தில் ஒருவகையான `அஸ்பெர்கர் குறைபாடு' (Asperger's syndrome) இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் அஸ்பெர்கர் குறைபாடு கொண்ட ஒரே நபர் நானாகத்தான் இருக்க முடியும். நரம்புகளின் தொகுப்பில் ஏற்படுகிற பிரச்னை இது. மற்றவர்களுடைய கண்களைப் பார்த்து என்னால் பேச முடியாது. எனக்குத் தெரியும் நான் பேசுவதும், என்னுடைய போஸ்ட்டுகளும் குழப்பமானவையாக இருக்கும் என்று. ஆனால், அப்படித்தான் என் மூளை வேலைபார்க்கிறது’’ என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார். இத்தனை கனமான உண்மையை எலான் பகிர்ந்துகொண்ட விதம் இன்னமும் சிறப்பு.

Elon Musk
Elon Musk
James Duncan Davidson

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எலனுடன் கலந்துகொண்ட அவருடைய அம்மா மஸ்க் மேயே (Musk Maye), தன் மகன் சிறிய பிள்ளையாக இருந்தபோது வீடியோ கேம் ஒன்றைக் கண்டுபிடித்ததையும், அதை விற்பனை செய்ததில் கிடைத்த 500 டாலரில் தனக்கு மதர்ஸ் டே கிஃப்ட் வாங்கிக் கொடுத்ததையும் நினைவுகூர்ந்தார். எலன் பேசிய நிகழ்ச்சியின் வீடியோவை பார்த்தவர்கள், `ஆட்டிசம் இருந்தாலும் உலகப் பணக்காரர்களில் ஒருவராக உயர இப்படிப்பட்ட அம்மா இருக்க வேண்டும்’ என்று உருகியிருக்கிறார்கள்.

அஸ்பெரகர் சிண்ட்ரோம் என்றால் என்னவென்று குழந்தைகள் நரம்பியல் நிபுணரும் ஆட்டிச குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நடத்தை நிபுணருமான டாக்டர் கே.ராகவனிடம் கேட்டோம்.

``அமெரிக்காவில் ஆட்டிசம் என்பதை ஐரோப்பிய நாடுகளில் அஸ்பெர்கர் என்பார்கள். தற்போதைய மருத்துவ உலகம் இரண்டையும் ஒன்று சேர்த்து ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (Autism spectrum disorder - ASD) என்கிறது. பிறந்த ஆறு அல்லது ஏழாவது மாதத்திலிருந்தே குழந்தைகள் அம்மாவின் கண்களைப் பார்க்க வேண்டும். ஆட்டிசம் இருக்கிற குழந்தைகள் அப்படிப் பார்க்க மாட்டார்கள். ஒரு வார்த்தையைத் தாண்டி பேச மாட்டார்கள். தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சமூகத்துடன் ஒட்ட மாட்டார்கள். ஒருசிலர் கொஞ்சம் முரட்டுத்தனமாகக்கூட இருக்கலாம். இவர்கள் வளர்ந்தபிறகு மாற்றி யோசிக்கிற தன்மை அதிகமாக இருக்கும். உதாரணத்துக்கு, டிராஃபிக்கில் ரெட் சிக்னலை பார்த்தால், `இங்கு ஏதோ ஆபத்து இருக்கிறது. இங்கிருந்து சீக்கிரமாகச் சென்று விட வேண்டும்’ என்று யோசிப்பார்கள். க்ரீன் சிக்னலை பார்த்தால், `இது பாதுகாப்பான இடம். இங்கேயே இருக்கலாம்’ என்று நினைப்பார்கள்.

டாக்டர் கே. ராகவன்
டாக்டர் கே. ராகவன்

இதில் லேசான ஆட்டிசம் இருப்பவர்கள் பெரியளவில் சாதிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய கவனம் சிதறாது என்பதால், ஒரே குறிக்கோளுடன் இருப்பார்கள். நாமெல்லாம் சூழ்நிலையைப் பகுத்தறிந்து சிலவற்றை விட்டுத்தருவோம். ஆனால், இவர்கள் மூளை எதில் கவனம் செலுத்துகிறதோ அதை நுட்பமாகச் செய்து முடித்தே தீருவார்கள். கணிதம் தொடர்பான படிப்புகளில், இசையில் சிறந்தவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால், இவர்களால் மற்றவர்களுடைய கண்களைப் பார்த்துப் பேசி, பழக முடியாது. எலான் மஸ்க் சொல்வதைக் கேட்கும்போது, அவருக்கு லேசான ஆட்டிசம் இருக்கிறது என்பது தெரிகிறது’’ என்றார்.