உடல் எடையைக் குறைப்பது நிறைய பேருக்கு மிகவும் கடினமான விஷயம். உடல் பருமனாக இருப்பது பல்வேறு இணை நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைகிறது. இந்நிலையில், உடல் பருமனைக் குறைக்கும் வகையில் செலுத்திக் கொள்ளும் புதிய ஊசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NICE) `செமக்ளூடைடு' (Semaglutide) என்னும் ஊசி மருந்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டால், பசியைக் கட்டுப்படுத்தும். சாப்பிட்டு முடித்ததும் உடலில் Glucagon like peptide 1 (GLP-1) என்ற ஹார்மோன் சுரக்கும். உடல் எடைக் குறைப்பு ஊசியின் மருந்து இந்த ஹார்மோனின் மாற்றாகச் செயல்படுவதால் சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும்.
மேலும், எப்போதும் வயிறு நிரம்பியது போன்றே இருப்பதால் சாப்பிடும் அளவு குறைவதுடன், உடல் எடையும் குறையும். இந்த ஊசியை வாரம் ஒருமுறை செலுத்திக்கொள்ள வேண்டும். உடல் எடைக்குறைப்பு ஊசி, உடல் பருமனைக் குறைக்கும் முறைகளில் ஒரு புதிய புரட்சியாகும் என இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த ஊசியை எல்லோராலும் பயன்படுத்த முடியாது. ஊசியைப் பயன்படுத்துவதற்கான வரைமுறைகளை NICE வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்ந்த மருத்துவரின் ஆலோசனையோடு மட்டுமே ஊசியை எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமாக எடுத்துக் கொள்ளவே கூடாது. இந்த ஊசியை எடுத்துக்கொள்பவர் மிகவும் உடல்பருமனாக இருப்பதுடன் (BMI 35-ஐக்கும் மேல்) இருக்க வேண்டும்.

உடல்பருமன் காரணமாக ஏதேனும் இணைநோயும் இருப்பவர் மட்டுமே செலுத்திக்கொள்ளலாம். உதாரணமாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தூக்கமின்மை போன்ற உடல்பருமனோடு தொடர்புடைய நோய்களை உடையவர்கள். மேலும் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே ஊசியைப் பயன்படுத்த வேண்டும்.
NICE அமைப்பை சேர்ந்த நிபுணரான ஹெலன் கைட் இதுபற்றிக் கூறுகையில், ``பருமனாக இருப்பவர்கள் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க அதிகம் சிரமப்படுவது மருத்துவ உலகின் பெரிய சவால். பருமனாக இருப்பதால் பல்வேறு உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டு வாழ்க்கையின் தரம் குறைகிறது. இந்தப் புதிய வழியைப் பயன்படுத்தி உடல் பருமனைக் குறைப்பதுடன் வேறு நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கலாம்" என்கிறார்.