Published:Updated:

`10 லட்சத்துல 4 பேருக்குத்தான் என் பிளட் குரூப்; நான் அதிசயன்!’ - அனுபவப் பகிர்வு #BloodDonationDay

Sudaharan
Sudaharan

அரிதான ரத்தப் பிரிவுன்றதால இதயம் தானமா கிடைக்காது. அதனால அதே ரத்தப்பிரிவு இருக்கும் ஹீரோவைக் கொலை செஞ்சு இதயத்தை எடுக்க பிளான் பண்ற மாதிரி கதை. அந்தப் படத்தைப் பார்த்ததும் நான் ரொம்பவே பயந்துட்டேன்.

'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்கிற ஒளவையின் வரிகளில், மனிதப் பிறவியின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். மனிதப் பிறவிகளிலேயே பல்வேறு அரிதான பிறப்புகளைப் பார்த்திருப்போம். அவர்களில் ஒரு பிரிவினர்தான், 'பாம்பே குரூப்' ரத்தப் பிரிவைக் கொண்டவர்கள். 10 லட்சம் மக்கள்தொகையில் வெறும் 4 பேருக்குத்தான் இந்தப் பிரிவு ரத்தம் காணப்படுகிறது என்கிறது மருத்துவ அறிவியல்.

Blood donation
Blood donation
Pixabay

1900-ம் ஆண்டு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த டாக்டர் கார்ல் லாண்ட்ஸ்டீனர் `A’, `B’, `AB’ மற்றும் `O’ என ரத்த வகைகளைக் கண்டறிந்து, பிரித்தார். அதற்குப் பிறகும் ரத்த மாற்று சிகிச்சையின்போது பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகுதான், ரத்தத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சமயத்தில், 1940-ம் ஆண்டு,`ரேசஸ்’(Rhesus)' என்ற குரங்கிலிருந்து வேறு ஒரு புதிய வகை ரத்தப் பிரிவு கண்டறியப்பட்டது. அதனால், அந்தப் பிரிவுக்கு 'Rh' என்று பெயர் சூட்டப்பட்டது. `Rh’-ல் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, ஒரே ரத்த வகையாக இருந்தாலும், `Rh’-ம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்ட பிறகே, ஒருவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.

பாசிட்டிவ் வகை உள்ளவர்களுக்கு நெகடிவ்வோ அல்லது நெகடிவ் உள்ளவர்களுக்கு பாசிட்டிவ் ரத்தமோ ஏற்றும் பழக்கம் நிறுத்தப்பட்டது. ரத்தம் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டாலும், இன்னும் சவாலாக இருக்கும் ஒரே ரத்த வகை, 'பாம்பே குரூப்.’

1952-ம் ஆண்டு, டாக்டர் ஒய்.எம்.பெண்டே என்பவர், முதன்முதலில் மும்பையில் இந்த ரத்தப் பிரிவைக் கண்டறிந்தார். மும்பையில், ஒரு சிலரிடம் இந்த அரிய வகை ரத்தம் கண்டறியப்பட்டது. மருத்துவச் சொற்களில் இந்த ரத்தப் பிரிவை 'HH' என்று அழைக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு மரபணு இருப்பவர்களிடம் மட்டும்தான் இந்த ரத்த வகை காணப்படும்.

முன்னாடியெல்லாம் ரொம்ப வேகமா வண்டி ஓட்டுவேன். இப்போ அதெல்லாம் கிடையவே கிடையாது. நமக்கு அரிதான ரத்தப்பிரிவு... அதனால எப்போதும் எல்லா விஷயத்துலயும் கவனமாக இருக்கணும்ற எச்சரிக்கை உணர்வு எனக்குள்ள எப்பவும் ஓடிட்டே இருக்கும்.''
ரத்த தானம் செய்யும் சுதாகரன்

'O' பிரிவு ரத்தத்தை `யுனிவர்ஸல் டோனர்’ என்பார்கள். அதாவது, `A’, `B’, `AB’ ஆகிய அனைத்து ரத்தப் பிரிவினருக்கும் `O' பிரிவு ரத்தத்தை ஏற்ற முடியும். ஆனால், `HH’ ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு இதைக்கூட ஏற்ற முடியாது. அதே பிரிவினர் மட்டுமே கொடுக்க முடியும். 10 லட்சம் பேரில் வெறும் 4 பேருக்கு மட்டுமே இந்த ரத்தப் பிரிவு காணப்படும். அதனால், இந்த வகை ரத்தம் உடையவர்களுக்கு ஏதேனும் மருத்துவ அவசரம் என்றால் ரத்தம் தானம் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். பல கிலோமீட்டர்கள் பயணித்து, விமானத்தில் சென்று ரத்ததானம் வழங்குபவர்களும் இருக்கிறார்கள்.

சென்னை பூந்தமல்லியில் வசித்துவரும் ஐ.டி ஊழியர் சுதாகரன். 34 வயதாகும் இவருக்கு, பாம்பே குருப் ரத்தப்பிரிவு உள்ளது. 12 ஆண்டுகளாக ரத்ததானம் செய்துவருகிறார். தேசிய தன்னார்வ ரத்ததான தினமான இன்று, அரிதான ரத்தப் பிரிவைக் கொண்டிருப்பதால், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்களையும் சவால்களையும் பகிர்ந்துகொண்டார் சுதாகரன்.

donor
donor
Pixabay

"நான் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது, நண்பர்களோட சேர்ந்து இரண்டு தடவை ரத்த தான முகாம்ல ரத்த தானம் கொடுத்திருக்கேன். ஓ பாஸிட்டிவ் குரூப்னு நினைச்சுதான் அப்போ ரத்தம் கொடுத்திட்டிருந்தேன். ஒருமுறை ஒரு நோயாளியின் சிகிச்சைக்கு அப்பல்லோ மருத்துவமனையிலே போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தேன். அப்போதான், அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்து எனக்கு மெயில் அனுப்பினாங்க. அதுல, 'உங்களுக்கு ஓ பாஸிட்டிவ் ரத்தப் பிரிவு இல்ல. 'பாம்பே குரூப்' அப்படின்ற அரிதான ரத்தப்பிரிவு இருக்குன்னு. அதுக்கு அப்புறம்தான், அந்த ரத்தப் பிரிவைப் பத்தி தெரியவந்தது.

அந்தச் சமயத்துல, நண்பர்களோட சேர்ந்து 'ஒக்கதுன்னாடு'ன்ற தெலுங்கு படம் பார்த்தேன். அந்தப் படத்தோட வில்லனுக்கும் ஹீரோவுக்கும் பாம்பே ரத்தப் பிரிவுதான் இருக்கும். வில்லனுக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை செய்யவேண்டியிருக்கும். அரிதான ரத்தப்பிரிவுன்றதால இதயம் தானமா கிடைக்காது. அதனால, அதே ரத்தப்பிரிவு இருக்கும் ஹீரோவைக் கொலை செஞ்சு இதயத்தை எடுக்க பிளான் பண்ற மாதிரி கதை. அந்தப் படத்தைப் பார்த்ததும் நான் ரொம்பவே பயந்துட்டேன்.

Sudaharan
Sudaharan

எனக்கும் அதே அரிதான வகை ரத்தம்ன்றதுதால என்னையும் யாராவது கடத்திட்டுப் போய் உடலுறுப்புகளுக்காகக் கொலை செய்திருவாங்களோன்னு பயப்பட ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகும் ரத்த தானம் கொடுக்கிறத நிறுத்தல. ஆனா, ரத்ததானம் கொடுக்கிற இடத்துல என்னுடைய பெயர், முகவரி, செல்போன் நம்பர் எல்லாத்தையும் மாத்திமாத்திக் கொடுத்துட்டு வந்துடுவேன். எந்த இடத்துலயும் என்னுடைய உண்மையான தகவல்களைக் கொடுக்க மாட்டேன். அப்படித்தான் கொஞ்ச நாள் ரத்தானம் கொடுத்திட்டு இருந்தேன்" என்கிறார்.

சிறிது காலத்துக்குப் பிறகு, பாம்பே ரத்தப் பிரிவைக்கொண்டவர்கள் இணைந்து செயல்படும் குழு இருப்பதைக் கண்டறிந்து, தன்னையும் அதில் இணைத்துக் கொண்டார் சுதாகரன். அதன்பிறகுதான், இந்த ரத்தப் பிரிவைப் பற்றி கூடுதல் புரிதலும் விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. தற்போது, ரத்த தானம் செய்வதை ஒருங்கிணைக்கும் ஸ்ரீவத்சன் என்பவருடன் இணைந்து ரத்த தானம் வழங்கிவருகிறார். ரத்த தானம் செய்தாலும், அரிதான ரத்தப் பிரிவு என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடனே இருக்கிறார் சுதாகரன்.

blood collection
blood collection
Pixabay

"எனக்கு பைக்ல ரொம்ப தூரம் டிராவல் பண்றது பிடிக்கும். சென்னையிலிருந்து பெங்களூரு, ஊட்டிக்கெல்லாம் பைக்லயே போயிடுவேன். ஆனா, பாம்பே பாசிட்டிவ் ரத்தப் பிரிவுன்னு தெரிஞ்சதும் பைக்ல டிராவல் பண்றதை சுத்தமா நிறுத்திட்டேன். வெளியூர்களுக்கு கார்ல மட்டும்தான் போறேன். சென்னையில சிட்டிக்குள்ளேயும் ஸ்கூட்டர் தான் பயன்படுத்துறேன். முன்னாடியெல்லாம் ரொம்ப வேகமா வண்டி ஓட்டுவேன். இப்போ, அதெல்லாம் கிடையவே கிடையாது. நமக்கு அரிதான ரத்தப்பிரிவு. அதனால, எப்போதும் எல்லா விஷயத்துலையும் கவனமா இருக்கணும்ற எச்சரிக்கை உணர்வு எனக்குள்ள எப்போதும் ஓடிட்டே இருக்கும்" என்கிறார்.

தன் குடும்பத்திலேயே இன்னொருவருக்கும் இதே ரத்தப்பிரிவு இருப்பதை சமீபத்தில் தெரிந்துகொண்டார் சுதாகரன். "என் சித்தி மகளுக்கு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிரசவம் நடத்துச்சு. அப்போதான், அவங்களுக்கும் பாம்பே ரத்தப்பிரிவு இருக்கிறதைக் கண்டுபிடிச்சாங்க. எங்க குடும்பத்துல நாங்க சொந்தத்துக்குள்ளேதான் கல்யாணம் செஞ்சுக்குவோம். அதனால தான் மரபணு மூலமாக இந்த ரத்தப்பிரிவு எங்க குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு தொடருதுன்னு டாக்டர்கள் சொன்னாங்க. எனக்கு கல்யாணமாகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. மூத்த பெண் குழந்தைக்கும் ஓ பிரிவு ரத்தம்னு சொல்லியிருக்காங்க. கொஞ்ச நாள் கழிச்சுதான் பாம்பே குரூப் டெஸ்ட் எடுத்துப் பார்க்கணும்.

Blood
Blood

இவ்ளோ சிரமத்தோடையும் எச்சரிக்கை உணர்வோடும் வாழ்க்கையை நகர்த்தினாலும், ரத்த தானம் செய்யிறப்போ பெரிய ஆத்ம திருப்தி கிடைக்கும். அதனால, என்னால முடிஞ்ச வரைக்கும் ரத்த தானம் செஞ்சுகிட்டேதான் இருப்பேன்" என்று நிறைவு செய்தார், சுதாகரன்.

தமிழகத்தில் 11 ஆண்டுகளில் 1,291 பேர் உடலுறுப்பு தானம்!
பின் செல்ல