Published:Updated:

``இது எங்களுக்கு வாழ்வா சாவா கேம்!" - கொரோனாவுடன் போராடும் செவிலியர்களின் அனுபவங்கள் #NursesDay

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் இரு செவிலியர்களின் அனுபவங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவீன செவிலிய சேவையின் நிறுவனர் என்று அழைக்கப்படுபவரும் கைவிளக்கேந்திய காரிகை என்று போற்றப்படுபவருமான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்தநாள் இன்று. ஒவ்வோர் ஆண்டும் மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் 2020-ம் ஆண்டை சர்வதேச செவிலியருக்கான ஆண்டாக அறிவிக்க, கொரோனா வைரஸூம் உலகம் முழுவதும் வியாபித்து செவிலியர்களின் சேவையையும் உலகறியச் செய்துள்ளது.

அப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனாவுக்கு எதிராகப் போராடும் இரு செவிலியர்களின் அனுபவங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

Nurse Haseena
Nurse Haseena

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த செவிலியர் ஹசீனா:

``நான் ராணுவ அதிகாரியின் மகள் என்பதால் பொதுவாகவே பேரிடர் காலங்களில் நானே கேட்டு வாங்கிப் பணிக்குச் செல்வேன். அதுவும் இரவு நேரப் பணிதான் இரண்டு மடங்கு பணியாற்றும் வாய்ப்பைத் தரும் என்பதால் அதையே தேர்வு செய்வேன்.

இரவு நேரங்களில் நோயாளிகளுடன் அதிக நேரம் இருக்கலாம். அவர்களின் அச்சத்தைப் போக்கலாம். தற்போது கொரோனா காலத்திலும் நோயாளிகள் சிலர் ஒத்துழைக்காமல் வீட்டுக்குப் போக முயல்வார்கள். மூர்க்கமாக நடந்துகொள்வார்கள். எங்களைத் தாக்கவும் முற்படுவார்கள். `நிதானம்' எனும் மாயக்கயிற்றால் அவர்களைக் கட்டுப்படுத்துவது செவிலியர்களான எங்கள் பணிதான்.

பணியின்போது முகக்கவசம், சீருடைக்கு மேல் கவச உடை, கையுறை அணிந்து பலமணி நேரம் வேலைபார்ப்பது மருத்துவர், செவிலியர்களுக்குக் கொடுமையான அனுபவம்தான். அவசரத்துக்கு கழிவறைக்குக்கூட போக முடியாது. போனால் மீண்டும் எங்களைச் சுத்தம் செய்துகொண்டு, அடுத்த செட் உடைகளை அணிய வேண்டும். கவச உடைகளை வீணடிக்கக் கூடாது என்பதற்காக இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டுதான் பணியாற்றுகிறோம். இந்த அயராத பணி உடலளவில் சோர்வைத் தந்தபோதிலும் மனதளவில் உறுதியாக இருக்கிறேன்.

Nurse Haseena
Nurse Haseena

கடந்த 3 மாதங்களாக வீட்டில் எனக்கு தனிப்படுக்கை, குளியலறை, கழிவறை என வகுத்துக்கொண்டேன். பணியின் தன்மையைப் புரிந்து கணவர், மகன் எனக்கு ஒத்தாசையாக இருக்கின்றனர். இது எங்களுக்கு வாழ்வா, சாவா விளையாட்டு! இரண்டில் எது நிகழ்ந்தாலும் அதை ஒரே மாதிரியே பாவிப்போம். கொரோனா கிருமிக்கெதிராக மக்களைக் காக்கும் வெள்ளுடை ராணுவமாகவே களத்தில் நிற்கிறோம்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"எங்களுக்கு ஒரு வாரம் பணி, ஒரு வாரம் தனிமைப்படுத்துதல். நான் தனிமைப்படுத்துதல் காலகட்டத்தை மருத்துவமனையில் கொடுத்த இடத்திலேயே முடித்துவிட்டேன். வீட்டுக்குச் செல்லவில்லை. கொரோனா வார்டில் பணி என்றவுடன் நான் மிகவும் பயந்துவிட்டேன். பணிக்குச் செல்வதற்கு முந்தைய தினம் இரவு நான் தூங்கவேயில்லை.

பணிக்குச் சென்ற பிறகு அங்கிருந்த நோயாளிகள் மற்றும் என்னுடன் பணியாற்றிய சக செவிலியர்களின் பிரச்னைகளைக் கேட்ட பிறகு என் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். என் சக செவிலியர் ஒருவருக்கு 9 மாத கைக்குழந்தை இருக்கிறது. ஆனால், பணி காரணமாகக் குழந்தையைக் கணவரிடம் விட்டுவிட்டு வந்துவிட்டார். `கொரோனா வார்டில் பணியாற்றிவிட்டு வீட்டுக்கு வந்தால், வீட்டை உடனே காலி செய்ய வேண்டும்’ என அவர்களின் வீட்டு உரிமையாளர் கூறிவிட்டார். அதனால், அவர் வீட்டுக்கும் செல்லவில்லை.

பணியின்போது கவச ஆடைகளைப் போட்டிருந்தாலும் நோயாளிகளுடன் நேரடியாகப் பழகுவதால் இதைத் தொட்டால் கொரோனா வந்துவிடுமோ, அதைத் தொட்டால் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருக்கும். அதே நேரம் கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்க்கவும் சங்கடமாக இருந்தது.

International nurses day
International nurses day
`ரஷ்யா - வடகொரியா எல்லை மாகாணத்தில் ஊரடங்கு!’ - சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

பலரும் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர். ஒன்றரை வயதில் ஒரு சிறுவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு அந்த வார்டில் என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியாது. நான் அவர்களது அறைக்குச் செல்லும்போதெல்லாம் நான் அணிந்திருக்கும் கவச ஆடைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பான். இவையெல்லாம் மனதுக்கு மிகவும் நெருடலாக இருந்தன.”

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் இளவரசி:

``எனக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். கொரோனா மருத்துவமனையில் பணியாற்றச் செல்ல வேண்டும் என்றதுமே என் கணவர், `வேண்டாம்! ஒரு மாதம் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்துவிடு' என்றார். செவிலியராக இருக்கும் நான் கடமையைத் தவற விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் கணவருக்கு எடுத்துக்கூறிப் புரிய வைத்தேன்.

Nurse Ilavarasi
Nurse Ilavarasi

உலகம் முழுவதும் செவிலியர்களின் சேவை மனப்பான்மையைப் பற்றி செய்திகள் வருவதைக் கேள்விப்பட்டதும், என்னையும் பெருமையாகவே பார்க்கத் தொடங்கினார் என் கணவர். அதற்குப் பிறகு அவரே குழந்தைகளைப் பார்த்துக்கொண்டார்.

கொரோனா வார்டில் ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வார்கள். டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள் அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் மருத்துவமனையில் வைத்துக் கண்காணித்து வந்தோம். அதில் வயதான பெண் ஒருவரும் இருந்தார்.

அவருடைய குடும்பத்தினரில் 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவ். இவருக்கு நெகட்டிவ்தான் என்றாலும், வயதானவர் என்பதாலும் மார்பகப் புற்றுநோயாளி என்பதாலும் நோய்த் தாக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மருத்துவமனையிலேயே வைத்துக் கண்காணித்து வந்தோம். ஒரு கட்டத்தில் அவரின் குடும்பத்தினர் அனைவரும் குணமாகி வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அவர் வார்டில் வேறு யாரும் இல்லாததால் அந்தப் பெண் தனியாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது யாரைப் பார்த்தாலும் அழ ஆரம்பித்துவிடுவார். ``நெகட்டிவாக இருந்தும் என்னை மருத்துவமனையில் வைத்திருக்கிறீர்களே" என்பார். நான் தினமும் வார்டுக்குப் போகும்போதெல்லாம் என்னிடமும் புலம்புவார்.

Nurse Ilavarasi with PPE Kit
Nurse Ilavarasi with PPE Kit

ஒருநாள் அவரிடம் ``அம்மா உங்களுக்கு நோய் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் இங்கு வைத்திருக்கிறோம். உங்கள் குழந்தைகள் எல்லாம் வளர்ந்துவிட்டார்கள். என்னை நினைத்துப் பார்த்துப் பாருங்கள்! இரண்டு சிறிய குழந்தைகளை விட்டுவிட்டு உங்களைப் போன்றவர்களுக்கு சேவையாற்றுவதற்காகத்தானே இங்கே வந்திருக்கிறேன். என் நிலையைப் பார்த்தாவது நீங்கள் அமைதியாக இருக்கக் கூடாதா" என்று கேட்டேன்.

அதற்குப் பிறகுதான் அந்த அம்மா, `ரொம்ப சாரிம்மா! எனக்காகத்தானே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்பதையே நான் உணரவில்லை. முதல்ல போய் இந்த உடையைக் களைந்துவிட்டு ஏதாவது சாப்பிடுங்க. இனிமேல் நான் கவலைப்பட மாட்டேன்' என்றார். அதற்குப் பிறகு அவர் வீடு செல்லும்வரை எந்தப் பிரச்னையும் கொடுக்கவில்லை. அவர் வீட்டுக்குக் கிளம்பிய அன்றும் என்னை விசாரித்திருக்கிறார். இதுதான் செவிலியர் பணியில் கிடைக்கும் ஆத்ம திருப்தி"

`பிபிஇ கிட் வேதனை; எரிச்சலடையும் கோவிட் 19 நோயாளிகள்!’ - களநிலவரம் பகிரும் நாக்பூர் செவிலியர்
Representational Image
Representational Image

தன்னலத்தை மறந்து பிறர் நலம் பேணும் செவிலியர்களுக்கு நோயாளிகள் மட்டுமல்ல; இந்த உலகமே கடன்பட்டுள்ளது!

Happy Nurses Day!!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு