Published:Updated:

காயங்கள், மயக்கம், லோ சுகர்.... அவசர நிலைகளும் அவசிய முதுலுதவிகளும்

முதலுதவி பற்றி அறிந்து கொள்வோம்!
முதலுதவி பற்றி அறிந்து கொள்வோம்!

உடல் தொந்தரவுகளுக்கு மருத்துவர்களை எளிதில் அணுக முடியாத சூழல். இந்த இக்கட்டான நிலையில், வருமுன் காத்தலும் தகுந்த முதலுதவிகளைத் தெரிந்து வைத்துக்கொள்ளுதலும் காலத்தின் தேவை.

பெரும்பாலான மருத்துவமனைகள் வெளிநோயாளிகளுக்கான பரிசோதனைகளைச் சிலநாள்களுக்கு நிறுத்திவைத்திருக்கின்றன. உயிர்காக்கும் அறுவைசிகிச்சை தவிர, மற்றவற்றை தள்ளிப்போடச்சொல்லி அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. சின்னச் சின்ன உடல்நிலைத் தொந்தரவுகளுக்கு மருத்துவமனைகளையும் மருத்துவர்களையும் எளிதில் அணுக முடியாத சூழல். இந்த இக்கட்டான நேரத்தில், வருமுன் காத்தலும் தகுந்த முதலுதவிகளைத் தெரிந்து வைத்துக்கொள்ளுதலும் காலத்தின் தேவை.

ஆபத்து மற்றும் அவசரகால முதலுதவிகள் குறித்து பொது மருத்துவர் அருணாசலத்திடம் பேசினோம்.

முதலுதவி
முதலுதவி

"பேண்டேஜ், பேண்ட் எய்டு, காட்டன், வலி நிவாரணி ஸ்ப்ரே, பாரசிட்டமால், ரப்பர் பேண்டு, ஐஸ்பேக் இவைதான் முதலுதவி கிட்டில் முக்கியமாக இடம்பெறவேண்டியவை. நாம் செய்கிற முதலுதவிகளால் எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது. ரத்தக்காயம், தீக்காயம், மயக்கம், எலும்புமுறிவு இவையெல்லாம் முதலுதவி தேவைப்படுபவை.

முதலில், ரத்தத்தைப் பார்த்தவுடன் பதறக்கூடாது. அதேபோல காயங்களில் எண்ணெய் தேய்த்தல், மாவு வைத்தல் போன்றவற்றைச் செய்யவே கூடாது. அப்படிச்செய்தால், காயம் பெரிதாகி, அது ஆறி புதிய சருமம் வளர்வதற்குப் பல ஆண்டுகள் ஆகிவிட வாய்ப்புள்ளது. காயங்களுக்கான முதலுதவியை சாதாரணமாகக் கையாண்டாலே போதும்.

பெற்றோர்
பெற்றோர்

தீக்காயம், வெட்டுக்காயம், சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால், வெறும் கையால் அந்த இடத்தை மூடிப் பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகு, துணியால் காயத்தைக் கட்ட வேண்டும். தலையில் அடிபட்டால், படுத்துக்கொள்வதைவிட உட்கார்ந்துகொள்வது நல்லது. கைகால்களில் அடிபட்டால், படுத்துக்கொண்டு அவற்றைத் தூக்கிப்பிடித்துக்கொள்வது நல்லது. தூக்கிப் பிடித்துக்கொண்டால் இதயத்திலிருந்து அவற்றிற்கு ரத்தம் செல்வது தடைபடும் அல்லது குறையும்.

கை, கால் விரல்களில் அடிபட்டு ரத்தம் வந்தால், சின்ன ரப்பர் பேண்டை போட்டுவிட்டால் ரத்தம் அந்தப் பகுதியில் வருவது தடைபடும். அதிகபட்சம் 20 நிமிடங்களுக்குள் துணியைக் கட்டிவிட்டு, ரப்பர் பேண்டை அகற்றிவிட வேண்டும். தாமதிக்கும்போது, ரத்தம் போகாமல் அந்தப் பகுதி அழுகிவிட வாய்ப்புள்ளது. சுளுக்கு, எலும்பு முறிவு ஏதேனும் ஏற்பட்டால் ஸ்கேல் வைத்துக் கட்டி, வலிநிவாரணி ஸ்ப்ரே அடிக்கலாம்.

காயம்
காயம்

காயங்கள் ஏற்பட்டால், ஐஸ்பேக் வைப்பதுதான் சிறந்தது. ரத்தம் வெளியேறுவதை நிறுத்திவிட்டு ஐஸ்பேக்கால் காயம்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். இதனால் வலி குறையும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மருத்துவமனை செல்லலாம். வலிக்கு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பாரசிட்டமால் எடுத்துக்கொள்ளலாம். .

மயக்கம் வந்தால், அவருக்கு உதவுவது முக்கியமானது. மன அழுத்தம், விபத்து போன்றவற்றால் மூளைக்குச் செல்கிற ரத்தம் தடைப்படும். இதை Syncope என்பார்கள். அவர்களுக்கு மூச்சு, நாடித்துடிப்பு பார்க்க வேண்டும். அவர்களை உடனே தூக்கக்கூடாது. படுத்த நிலையில்தான் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகப் போகும். படுத்துக் கிடப்பவர்களைத் தூக்கிப் பிடித்து முகத்தில் தண்ணீர் அடிப்பது, சோடா கொடுப்பது எல்லாம் தேவையில்லை.

வலிப்பு
வலிப்பு

சர்க்கரை நோயாளிகள் என்றால் வீட்டில் பரிசோதித்துவிடுவது நல்லது. சர்க்கரை அளவு 50-க்குக் கீழே இருந்தால், உடனே மருத்துவமனை செல்ல வேண்டும். ரொம்பவும் குழறினார்கள் என்றால், அவர்களின் நாக்குக்கு அடியில் சர்க்கரைக் கரைசலை சொட்டுகளாக விடலாம். மயங்கியவர்களுக்குத் தண்ணீர் அதிகம் கொடுத்து, அதுவே அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.

ஒருவருக்கு வலிப்பு வந்தால், படங்களில் காட்டுவது போல இரும்புகளையெல்லாம் கையில் தரத் தேவையே இல்லை. அவர்களை அப்படியே விட்டுவிட்டாலே சரியாகிவிடுவார்கள். அருகில் எந்தப் பொருளும் இல்லாத இடமாகப் பார்த்துக் கொண்டால் போதும். பல் உடையாத அளவுக்கு, சிறிய மரக்கட்டை போன்ற பொருளை வாயில் கடிக்கக் கொடுக்கலாம். வேறெதுவும் செய்யத் தேவையில்லை.

கையில் காயம்
கையில் காயம்

முன் காலங்களில், இரவில் குழந்தைகளுக்கு காயச்சலென்றால் மருந்து கொடுப்பார்கள், அது வாந்தியெடுத்துவிடும். இப்போதெல்லாம் suppositories மருந்துகள் வந்துவிட்டன. ஆசனவாய் வழியே மருந்தைத் தரலாம். சீக்கிரம் மருந்து உடலில் இறங்கி குழந்தைகளைக் குணமாக்கும். காலையில் மருத்துவரைச் சென்று பார்க்கலாம்" என்றார்.

மருத்துவ நெருக்கடி சூழலில் என்றில்லை. இந்த தற்காப்பு, மருந்து, முதலுதவி எல்லாமே நாம் அடிப்படையாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டியவை.

அடுத்த கட்டுரைக்கு