Published:Updated:

கொரோனா காலத்தில் டெங்கு காய்ச்சலின் வீரியம் எப்படி இருக்கும்? #NationalDengueDay

டெங்கு
டெங்கு

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தக் காய்ச்சலின் அறிகுறிகளாக தலைவலி, உடம்புவலி போன்றவை ஏற்படும்.

இந்தியாவில் மே 16-ம் தேதி தேசிய டெங்கு தினமாக மத்திய சுகாதார அமைச்சகத்தால் அனுசரித்து, டெங்கு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா காலத்தில் டெங்கு பாதிப்பின் தாக்கம் எப்படி இருக்கும்... கொரோனாவோடு டெங்குவையும் சந்திக்க வேண்டியிருக்குமா என்ற கேள்விகளோடு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் டி மாரியப்பனிடம் பேசினோம்.

Dengue mosquito
Dengue mosquito

``டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுவினம் மூலம் பரவுகிறது. இவை பொதுவாக மழைநீர் மற்றும் சுத்தமான தண்ணீரிலேயே முட்டையிடுகின்றன. இந்தக் கொசுக்கள் இடும் முட்டைகள், ஆறு மாத காலத்துக்கு உயிருடன் இருக்கும் தன்மை உடையவை. இதனால் சென்ற வருட மழைக்காலத்தில் இவை இட்ட முட்டைகள் தற்போது பெருமளவில் பொரிந்திருக்கும்.

நம் வீட்டைச் சுற்றிலும் ஏடிஸ் வகை கொசுக்கள் முட்டையிடுவதற்கு ஏதுவாகப் பல இடங்கள் உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க பெரும்பாலான வீடுகளில் தண்ணீரை வாளிகளில், குடங்களில் சேமித்து வைத்திருப்பார்கள்.

டாக்டர் டி மாரியப்பன்
டாக்டர் டி மாரியப்பன்

இவற்றில் டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் எளிதில் உற்பத்தியாகும். வீட்டைச் சுற்றிலும் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்களில், பழைய டயரில், ஃப்ரிட்ஜின் அடிப்பகுதியில் எல்லாம் தேங்கும் தண்ணீரிலும் இவை உற்பத்தி ஆகும். எனவே எந்த இடத்திலும் நல்ல தண்ணீரைத் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரைச் சேமித்து வைக்கும் பட்சத்தில் அதை முறையாக மூடி வைக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தக் காய்ச்சலின் அறிகுறிகளாக தலைவலி, உடம்புவலி போன்றவை ஏற்படும். இவை இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொண்டால் நோயிலிருந்து மீளலாம்.

`கேரளத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று’ - எட்டு நாளில் 16-லிருந்து 80 ஆக உயர்வு!

தற்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க மக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். தனி மனித இடைவெளி, கைகளை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு கழுவுதல் போன்றவற்றைப் பின்பற்றி வருகின்றனர். ஏற்கெனவே மக்கள் தங்களையும், தங்களின் இருப்பிடங்களையும் சுத்தமாக வைத்திருப்பதால் டெங்கு காய்ச்சலின் வீரியம் குறைவாகத்தான் இருக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு