Published:Updated:

`மார்ச், ஏப்ரல்... மலேரியா காலம்' நோய் அறிகுறிகள், உணவுமுறைகள் குறித்து விளக்குகிறார் மருத்துவர்!

மலேரியா
மலேரியா

மலேரியாவின் அறிகுறிகள் என்னென்ன... மலேரியா நோயாளிகள் தங்கள் உணவுமுறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பவை குறித்தும் பொது மருத்துவர் அருணாசலத்திடம் பேசினோம்.

வைரஸ் நோய்ப் பரவலில் புதிய அத்தியாயத்தையே எழுதி வருகிறது கொரோனா. உள்ளூர்களில் பரவுகிற நோய்கள் போதாதென்று உலகம் முழுவதையும் பதற வைத்துக் கொண்டிருக்கிறது இது. பருவ மாற்றங்கள் நிகழும்போது அது உடலைப் பாதிப்பது வழக்கமான ஒன்று. மழை, வெயில், குளிர் ஆகிய பருவங்கள் தொடங்கும்போது நோய்த் தாக்கம் ஏற்படும்.

கொரோனா
கொரோனா
கொரோனா உள்ளிட்ட தொற்றுகளிடமிருந்தும் காக்கும் உணவுகள்!

இப்படி நாமும்கூட பல நோய்களைக் கடந்து வந்திருப்போம். இதனால் நோய் தாக்கிய அனுபவமும், நோய் குறித்த சிறிய தெளிவும் நமக்கு இருக்கும். ஆனால், பல்வேறு ஆங்கில ஊடகங்களில் ஒரு செய்தி கடந்த சில நாள்களாகப் பரவி வருகிறது. காபி, சாக்லேட் அதிகம் சாப்பிடும் பழக்கம் மலேரியாவுக்கு வித்திடலாம் என்ற செய்திதான் அது.

நோய் குறித்த தெளிவிலிருந்து யோசிக்கும்போது, கொசுக்களிலிருந்து பரவுகிற மலேரியாவுக்கும் காபி சாக்லேட்டுக்கும் என்ன தொடர்பு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இந்தச் சந்தேகத்துடன், மலேரியாவின் அறிகுறிகள் என்னென்ன... மலேரியா நோயாளிகள் தங்கள் உணவுமுறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பவை குறித்தும் பொது மருத்துவர் அருணாசலத்திடம் பேசினோம்.

சாக்லேட்
சாக்லேட்
Pixabay

"மலேரியாவுக்கும் சாக்லேட், காபி போன்றவற்றைச் சாப்பிடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே உண்மை. மலேரியா ஒரு தீவிர காய்ச்சல் வகை, அவ்வளவுதான். சாக்கடை போன்ற அசுத்தமான பகுதிகளிலிருந்து மலேரியா வைரஸ் கிருமி உருவாகிறது. அவற்றில் உலவுகிற கொசு மனிதர்களைக் கடிக்கும்போது அவர்களது உடலில் மலேரியா கிருமி செல்கிறது. மலேரியா பாதித்த ஒருவரது உடலில் கடித்த கொசு அடுத்தவர் உடலைக் கடித்தாலும் இந்த வைரஸ் பரவும். அந்தக் கிருமி ரத்தச் சிவப்பணுக்களில்தான் குடியிருக்கும். மலேரியா வந்தால் அதோடு சேர்த்து அனீமியாவும் வரும்.

மொத்தம் ஐந்து வகை மலேரியாக்கள் உள்ளன. கொசுக்களால் வருகிற மலேரியா கிருமி வளர்ந்து, உடலில் பல்கிப் பெருகும், பின்னர், உடலைவிட்டு நீங்கிச் செல்ல எத்தனிக்கும். சிலவகை மலேரியா கிருமிகள் 24 மணிநேரம் கழித்து இரண்டாக உடையும். அப்போது குளிர் காய்ச்சல் ஆளையே தூக்கிப்போடும். சில மலேரியா கிருமிகள் 48 மணிநேரம், இன்னும் சில 72 மணிநேரம் வரையிலும் இருக்கும். போர்வை போர்த்தித் தூங்கினாலும் குளிர் நடுக்கம் அதிகம் இருக்கும். பிறகு காய்ச்சல் 104 டிகிரிக்குக் கொதிக்கும்.

காய்ச்சல்
காய்ச்சல்

ஒரு மணிநேரம் காய்ச்சல் அடித்து பிறகு, மீண்டும் உடல்வெப்பம் இயல்புநிலையை அடையும். மருத்துவர்கள் 24 மணிநேரத்துக்கு ஒருமுறை என்ற கணக்கில் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து அதன்படிதான் என்ன வகை மலேரியா எனக் கண்டறிவார்கள். ரத்தமாதிரியை நுண்ணோக்கியில் பார்த்துதான் இதைக் கண்டறிய முடியும். தற்போது மலேரியல் பாராசிட் குவான்டிடேடிவ் பஃபி கோடு (Malaria Parasite - Quantitative Buffy Code QBC - Analysis) மூலமாக மலேரியாவைக் கண்டறியும் வழிமுறையும் வந்திருக்கிறது.

க்ளினிக்கல் மலேரியா (Clinical Malaria)

பரிசோதனையில் மலேரியா நெகட்டிவ் ஆக இருக்கும். ஆனால், அறிகுறிகள் தொடர்ந்தபடியே இருக்கும். அதற்கு க்ளினிக்கல் மலேரியா எனப் பெயர். ஆன்டி மலேரியா மருந்து கொடுத்து குணப்படுத்துவார்கள். மலேரியா அறிகுறிகளில் முக்கியமானது, காய்ச்சல்தான். ஆனால், காய்ச்சலைக் கண்டுகொள்ளாமல் விட்டு 3 முறைக்கு மேல் காய்ச்சல் ஏற்படும்போதுதான் பிரச்னையே. நோயின் அறிகுறிகளில் இன்னொன்று, வாந்தி. மற்றொன்று, குளிர் காய்ச்சலால் உடல் தூக்கிப்போடுதல். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். எந்தவித கை மருத்துவமும் செய்துகொள்ளக் கூடாது. மலேரியா போன்றவை பரவுவதற்கு மக்களின் அறியாமையும் அலட்சியமுமே முக்கியக் காரணங்கள்.

வாந்தி
வாந்தி
`கொரோனா பீர் வைரஸ்' - பீருக்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்? - ஒரு திடுக் அலசல் #GoogleTrends

காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். ஆனால், மக்கள் அருகிலுள்ள மருந்தகங்களில் மாத்திரை மருந்துகள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு காய்ச்சல் மாத்திரை, சளி மாத்திரை, அலர்ஜி மாத்திரை, 2 மலேரியா மாத்திரை, 1 ஆன்டி பயாட்டிக், இருமல் சிரப் என்று விற்பனைக்காகத் தந்துவிடுகிறார்கள். மக்களும் அவற்றை எடுத்துக் கொள்கின்றனர். இது, க்ளோரோகுயின் ரெசிஸ்டன்ட் மலேரியாவுக்கான (Chloroquine Residence Malaria) வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதனால், ஒருமுறை டிரிப்ஸ் ஏற்றி அனுப்புகிற கட்டத்திலிருந்தவர்கூட 3 நாள்கள் மருத்துவமனையில் தங்கிச் செலவழிக்க வேண்டியதாகிவிடுகிறது.

குளிர் காய்ச்சல் ஏற்பட்டால் இரண்டே காரணங்கள்தான். ஒன்று, மலேரியா, இன்னொன்று சிறுநீர்ப் பாதையில் கிருமி. இந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் அதிகம் நீர் அருந்த வேண்டும். மலேரியா பாதித்தால், உடலிலுள்ள சத்துகள் எல்லாம் வெகுவாகக் குறைந்துவிடும். எனவே, எளிதில் செரிமானமாகும் உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாகக் குளுக்கோஸ் அல்லது வேறேதேனும் இனிப்புச் சுவையைக் கலந்து குடிக்கலாம். கஞ்சி, ஃபிரஷ் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவர் அருணாசலம்
மருத்துவர் அருணாசலம்

மலேரியா காய்ச்சலில் டீ பால் தண்ணீர் குடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாக டீ, காபியில் சர்க்கரை உடலுக்கு உடனடி ஊட்டம் அளிக்கும். வீட்டிலேயே தயாரித்த ஜூஸில் ஓரல் ரீஹைடரேஷன் சொல்யூஷன் பவுடர் கலந்து குடித்தால் நல்லது. காபி அருந்தலாம். இது, வெயில் காலத்தின் தொடக்கம். எனவே, நமது உடலைப் பேணிக் காக்க வேண்டியது அவசியம். மற்றபடி வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு