Published:Updated:

"கொரோனாவை அவ்ளோ ஈஸியோ நினைக்காதீங்க!" -எச்சரிக்கும் 'வைரஸ் வேட்டைக்காரர்'!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`அதிகமான மக்கள் தடுப்பூசிக்கு எதிராக நின்றால், நாம் ஒருபோதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவரவே முடியாது" என்று பல பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயைப் பொறுத்தவரை உலகம் முழுவதும் 85 சதவிகிதம் பேருக்கு மிதமான பாதிப்பு, ஒரு சதவிகிதம் பேர் உயிரிழப்பார்கள் என்பன போன்ற கருத்துகள் பல மருத்துவ வல்லுநர்களால் தொடர்ந்து கூறப்பட்டுவருகின்றன. ஆனால், அத்தனை எளிதாக பாதிப்புகள் நிறைவடைந்துவிடாது. வாழ்நாள் முழுவதும் தீராத பாதிப்புகளை அது ஏற்படுத்தும் என்று பிரபல வைராலஜிஸ்ட் தெரிவித்திருக்கிறார்.

Corona
Corona

உலகத்தையே அச்சுறுத்திய எபோலா வைரஸைக் கண்டறிந்த வைராலஜிஸ்ட்டுகளில் ஒருவரும், 'வைரஸ் வேட்டைக்காரர்', 'வைரஸ் துப்பறிவாளர்' என்று அழைக்கப்படுபவருமான 71 வயதான பீட்டர் பியோட், இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக் குறைவு என்ற பெயரில் ஒருநாள்கூட வேலைக்கு விடுப்பு எடுக்காமல் இருந்தவர், கொரோனாவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரம், வாழ்வா சாவா போராட்டத்தைக் கடந்து வந்திருக்கிறார். வைரஸ் தாக்கம் குறைந்தபோதிலும் அவருக்கு நுரையீரல் கோளாறுகள் அதிகரித்துள்ளன. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக வைரஸுக்கு எதிராகப் போராடிவரும் பீட்டர் பியோட், "மனோதிடத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருந்த என்னை கொரோனா வைரஸ் உலுக்கிப்போட்டுவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்ததைவிட, அதன் விளைவு மோசமாக உள்ளது. என்னதான் தொற்றுநோய் நிபுணராக இருந்தாலும் மரணப்படுக்கையில் இருந்தபோது விஞ்ஞானபூர்வமாக சிந்திப்பது குறைந்து உணர்வுபூர்வமாகவே அதிகம் சிந்தித்தேன். வைரஸ் கிருமிகளுக்கு எதிராகப் போராடுவதில் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். பதிலுக்கு இன்று அதே வைரஸ் கிருமிகள் என்னைப் பழிவாங்குகின்றன.

Ebola
Ebola

கொரோனா வைரஸைப் பொறுத்தவரை அதனால் பாதிக்கப்பட்டவர்களில் 1 சதவிகிதம் பேர் இறப்பார்கள். மீதம் 99 சதவிகிதம் பேரும் காய்ச்சல் உள்ளிட்ட சில லேசான அறிகுறிகளுடன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் நம்புகின்றனர். ஆனால் நிலையே வேறு. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு, அவை நாள்பட்ட நோயாக மாறும் அபாயம் உள்ளது.

இதனால் நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் இதயப் பிரச்னைகள் ஏற்படும். மேலும், நரம்பியல் மண்டலத்தையும் இந்த வைரஸ் பாதிக்கும். நாள்பட்ட நோய்களால் பல ஆயிரக்கணக்கானோர் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் போன்ற சிகிச்சையோடு வாழவேண்டிய நிலை ஏற்படும்.

இத்தாலி தடுப்பூசி, இஸ்ரேஸ் ப்ளாஸ்மா சிகிச்சை, இந்திய தடுப்பு மருந்து... மருத்துவர் விளக்கம்! #VikatanExplainer

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தடுப்பூசி தயாரித்து உலகம் முழுவதும் அளிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியே! அப்படியே தடுப்பூசி கண்டுபிடித்தாலும், உலக அளவில் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விரும்பாத முரண்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. அதிகமான மக்கள் தடுப்பூசிக்கு எதிராக நின்றால், நாம் ஒருபோதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டுவரவே முடியாது" என்று பல பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு